بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
67:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
ஆட்சியமைப்பு
Mulk
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
67:0.அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
تَبَٰرَكَ ٱلَّذِي بِيَدِهِ ٱلۡمُلۡكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ١
67:1. அகிலங்கள் அனைத்திலும் ஆட்சி செய்யும் அளவற்ற வல்லமையுடையவன், விசாலமான பாக்கியங்கள் நிறைந்தவனாக இருப்பவன். மேலும் அவன் ஒவ்வொரு படைப்பிற்கும் உரிய சட்ட வரையறைகளை நிர்ணயித்து, மிக அழகான முறையில் செயல்படுத்தி வருபவன்.
எனவே இத்தகைய வல்லமையுடையவனின் வழிகாட்டுதலின்படி இவ்வுலகில் ஆட்சி நடைபெறும் போதும், எல்லா அருட்கொடைகளையும் பெற்று சிறப்பாக வாழக் கூடிய பாக்கியங்கள் அந்நாட்டு மக்களுக்குக் கிடைக்கும்.
ٱلَّذِي خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ٢
67:2. இறைவனின் செயல்திட்டத்தின் படியே இவ்வுலகில் மனித சமுதாயங்களின் வாழ்வும் மரணமும் ஏற்பட்டு வருகின்றன. எந்த சமுதாயம் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட்டு ஜீவனுள்ள சமுதாயமாகத் திகழ்கிறது என்பதையும், எந்த சமுதாயம் அவற்றிற்கு எதிராகச் செயல்பட்டு நடைபிணங்களைப் போல் வாழ்கிறது என்பதையும் பரிசோதித்துக் கொள்ள முடியும். மேலும் இறைவனின் வல்லமையோ யார் எப்படி செயல்படுகிறார்களோ, அதன்படி விளைவுகளையும் பாதுகாப்பும் ஏற்படுத்துவதாக உள்ளன.
உலக சமுதயாங்கள் விஷயத்தில் நடைபெற்று வரும் இதே சட்டம்தான் தனி நபர் விஷயத்திலும் நடைபெற்று வருகிறது. யார் அழகிய செயல்களைச் செய்கிறாரோ அவருக்கு நன்மைகளும், யார் தீய செயல்களைச் செய்கிறாரோ அவருக்கு தீய விளைவுகளும் ஏற்படும்படி சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗاۖ مَّا تَرَىٰ فِي خَلۡقِ ٱلرَّحۡمَٰنِ مِن تَفَٰوُتٖۖ فَٱرۡجِعِ ٱلۡبَصَرَ هَلۡ تَرَىٰ مِن فُطُورٖ٣
67:3. அல்லாஹ்வின் அளவிலா வல்லமையைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டு என்றால், வானங்கள் எவ்வாறு படைக்கப்பட்டு உள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கட்டும். அவை எவ்வாறு ஒன்றன் மேலும் ஒன்றாக அடுக்கடுக்காகப் படைக்கபட்டுள்ளன என்பதைக் கவனித்துப் பார்க்கட்டும். அவற்றில் குறை ஏதாவது இருக்கின்றதா என்பதை அலசிப் பார்த்துக் கொள்ளட்டும். யாராலும் எந்தக் குறையையும் காணவே முடியாது.
ثُمَّ ٱرۡجِعِ ٱلۡبَصَرَ كَرَّتَيۡنِ يَنقَلِبۡ إِلَيۡكَ ٱلۡبَصَرُ خَاسِئٗا وَهُوَ حَسِيرٞ٤
67:4. ஒருமுறை அல்ல இருமுறை அல்ல அவன் எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஆராய்ந்து பார்க்கட்டும். அவன் ஆராய்ந்து ஆராய்ந்து களைத்து விடுவானே அன்றி, அவனால் எந்தக் குறையையும் கண்டுபிடிக்கவே முடியாது. அதில் அவனுக்கு தோல்வியே ஏற்படும்.
وَلَقَدۡ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَجَعَلۡنَٰهَا رُجُومٗا لِّلشَّيَٰطِينِۖ وَأَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابَ ٱلسَّعِيرِ٥
67:5. இரவில் வானத்தை அலங்கரிக்கும் வகையில் மின்னும் நட்சத்திரங்களைப் பற்றி தெரியுமா? அவை பூமிக்கு மிக அருகாமையில் இருப்பவை. மிகத் தொலைவில் இருப்பவற்றைப் பற்றி உங்களால் எங்கு காணமுடியும்? எனவே நட்சத்திரங்களின் உண்மை நிலையை என்னவென்று இந்தக் குர்ஆன் மூலம் அறிவித்தாகி விட்டது. ஆனால் நட்சத்திரங்களின் நிலைப் படி தான் மனித வாழ்வு நடைபெற்று வருவதாகக் கூறும் ஜோசியக்காரர்களுக்கு இனி இடமில்லை. அதையும் மீறி அவர்கள் தம் கூற்றில் நிலைத்திருந்தால் கடுமையான வேதனைகளுக்கு ஆளாக நேரிடும். (மேலும் பார்க்க 15:17,37:6-9, 72:8)
وَلِلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ عَذَابُ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ٦
67:6. ஏனெனில் “ஒட்டு மொத்த மனித இனத்தின் பரிபாலனம்” என்ற அடிப்படையில் இறைவனின் ஆட்சியமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால் இவற்றை ஏற்க மறுப்பவர்கள் ஜாதக கணிப்புகளை மக்களுக்குக் காட்டி அவர்களை திசை திருப்புகிறார்கள். எனவே தான் அவர்களுக்கு இந்த தண்டனை.
إِذَآ أُلۡقُواْ فِيهَا سَمِعُواْ لَهَا شَهِيقٗا وَهِيَ تَفُورُ٧
67:7. இத்தகையவர்களுக்கு வேதனை அளிக்கப்படும் போது, வெறும் கதறல்களும், புலம்பல்களும் பேரிரைச்சல்களும் தாம் கேட்கும். அதைக் கேட்பதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கும்.
تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلۡغَيۡظِۖ كُلَّمَآ أُلۡقِيَ فِيهَا فَوۡجٞ سَأَلَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ نَذِيرٞ٨
67:8. அத்தகைய நிலை அவர்களை கோபத்தால் வெடித்து நொறுங்கிவிட்டது போலிருக்கும். அப்போது, அதன் காவலாளிகள், “உங்களுடைய தவறான செயல்களின் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்பவர் யாரும் வரவில்லையா?” என்று கேட்பார்கள்.
قَالُواْ بَلَىٰ قَدۡ جَآءَنَا نَذِيرٞ فَكَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ كَبِيرٖ٩
67:9. அதற்கு அவர்கள், “ஏன் இல்லை? முன்னெச்சரிக்கை செய்பவர்கள் என்னவோ வந்தார்கள். ஆனால் நாங்கள் அவை எல்லாம் பொய்யென கூறி விட்டோம். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அத்தகைய வேதனை ஒருபோதும் வருவதில்லை என்றும் முன்னெச்சரிக்கை செய்பவர்கள் தாம் பெரும் வழிகேட்டில் இருந்ததாகவும் எண்ணிக் கொண்டோம். எனவே அவர்களிடம் இதையே கூறி வந்தோம்” என்று கூறுவார்கள்.
وَقَالُواْ لَوۡ كُنَّا نَسۡمَعُ أَوۡ نَعۡقِلُ مَا كُنَّا فِيٓ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ١٠
67:10. மேலும், “நாங்கள் அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு அதைப்பற்றி தீர சிந்தித்து அவற்றின்படி செயல்பட்டிருந்தால், இத்தகைய நரகவாசிகளாக ஆகி இருக்க மாட்டோம்” என்றும் கூறுவார்கள்.
فَٱعۡتَرَفُواْ بِذَنۢبِهِمۡ فَسُحۡقٗا لِّأَصۡحَٰبِ ٱلسَّعِيرِ١١
67:11. இப்படியாக அவர்கள் செய்து வந்த பாவங்களை ஒப்புக் கொள்வார்கள். அப்போது அவர்கள் ஒப்புக் கொள்வதால் அவ்வேதனையிலிருந்து மீள முடியுமா? இல்லை. அவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டியது தான்.
அன்பர்களே! இவ்வுலகில் இறைவனின் ஆட்சியமைப்பு நடைபெறும் போதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இத்தகைய தண்டனை கிடைக்கும். அவ்வாறு ஆட்சி நடைபெறவில்லை என்றாலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்வில் கிடைக்கும். திருக்குர்ஆனின் வாசகங்களின் பொருள் இவ்விரு வேதனைகளைப் பற்றியும் சித்தரிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
إِنَّ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ١٢
67:12. ஆனால் இறைவழிகாட்டுதலை உளமாற ஏற்று, அதற்கு மாற்றமாக செயல்படுவதால் கிடைக்கன்ற வேதனைகளுக்கு அஞ்சி செயல்படுபவர்களுக்கு, இத்தகைய வேதனைகள் நெருங்காது. அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வும் தலைசிறந்த வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும்.
وَأَسِرُّواْ قَوۡلَكُمۡ أَوِ ٱجۡهَرُواْ بِهِۦٓۖ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ١٣
67:13. நாம் மறைமுகமாக செயல்பட்டால் யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள். எந்த ஒரு சொல்லோ அல்லது செயலோ இரகசியமாக இருந்தாலும் வெளிப்படையாக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகவே போகாது. அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் மனதில் ஏற்படும் எண்ணங்களும் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்றும் அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
أَلَا يَعۡلَمُ مَنۡ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلۡخَبِيرُ١٤
67:14. அகிலங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் படைத்து விட்டு, அவை எப்படியாவது செயல்படட்டும் என்று கேட்பாரற்று விட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டீர்களா? உங்களுடைய ஒவ்வொரு செயலையும் மிக மிக நுணுக்கத்துடன் கவனித்து அறிந்து கொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். அதன்படி உங்கள் செயல்களுக்கு ஏற்றவாறு மிகச் சரியான விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்.
هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ ذَلُولٗا فَٱمۡشُواْ فِي مَنَاكِبِهَا وَكُلُواْ مِن رِّزۡقِهِۦۖ وَإِلَيۡهِ ٱلنُّشُورُ١٥
67:15. மேலும் நீங்கள் வாழ்வதற்கு வசதியாக இந்த பூமியைப் படைத்தது யார்? நீங்கள் காட்டிலும் மேட்டிலும் வாழ்வாதாரங்களைப் தேடிச் செல்கிறீர்களே அவற்றை ஏற்பாடு செய்தது யார்? மேலும் உங்களுடைய ஒவ்வொரு தேவையை நிறைவேற்றிக் கொள்ள யாரிடம் செல்கிறீர்கள்? இவற்றை எல்லாம் செய்து கொடுத்தது அல்லாஹ் தான் என்பதை அறிந்து, அவன் காட்டிய வழியில் செயலாற்றக் கூடாதா?
ءَأَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يَخۡسِفَ بِكُمُ ٱلۡأَرۡضَ فَإِذَا هِيَ تَمُورُ١٦
67:16. அவ்வாறு நீங்கள் வாழ முன்வரவில்லை என்றால், அகிலங்களை எல்லாம் தம் கட்டுப்பாட்டில் வைத்து செயல்பட வைக்கும் வல்லமை உடையவன் உங்களை பூமியில் சொறுகிவிட முடியாதா? அதைப்பற்றி எப்போதாவது எண்ணி பயந்ததுண்டா? அப்படிப்பட்ட நிலையில் பூமியே அதிர்ந்து போகுமே! அதிலிருந்து தப்பிக்க உங்களால் என்ன செய்ய முடியும்?
أَمۡ أَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗاۖ فَسَتَعۡلَمُونَ كَيۡفَ نَذِيرِ١٧
67:17. அல்லது வானத்திலிருந்து கல்மாரி எரிகற்கள் பொழிந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? இதைப் பற்றியெல்லாம் எண்ணாமல் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்படியென்றால் இறைவன் செய்த முன்னெச்சரிக்கைப் படி வேதனைகள் ஏற்படும்போது, அவை எவ்வாறு இருக்கும் என்பதை விரைவில் அறிந்துக் கொள்வீர்கள்.
وَلَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَكَيۡفَ كَانَ نَكِيرِ١٨
67:18. இத்தகைய வேதனைகள் கிடைப்பது புதிதான ஒன்றல்ல. இதற்கு முன்பும் பல சமுதாயங்களும் இறைவன் செய்த முன் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் அழிவை சந்தித்துக் கொண்டன. அந்த வேதனைகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருந்தன என்பதை வரலாற்று ஆய்வாளர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
இறைவனின் வல்லமையைப் பற்றி அவர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார்கள். உலகப் படைப்புகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்திருந்தால் இப்படி அவர்கள் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். நவீன கால யுத்தங்களிலும் வான் தாக்குதல்கள் கல்மாரிகளாக பொழிவதைக் காண்பீர்கள்.
أَوَ لَمۡ يَرَوۡاْ إِلَى ٱلطَّيۡرِ فَوۡقَهُمۡ صَٰٓفَّٰتٖ وَيَقۡبِضۡنَۚ مَا يُمۡسِكُهُنَّ إِلَّا ٱلرَّحۡمَٰنُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءِۢ بَصِيرٌ١٩
67:19. வானத்தில் தம் இறக்கைகளை விரித்துக் கொண்டும் சேர்த்துக் கொண்டும் பறந்து செல்லும் பறவைகளை இவர்கள் பார்ப்பதில்லையா? அருட்கொடையாளன் அர் ரஹ்மானின் ஏற்பாடுகள் இல்லாதிருந்தால் அவற்றால் அந்தரத்தில் பறக்கும் சக்திகளைப் பெற்றிருக்குமா? நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் மிகவும் நுணுக்கத்துடன் செயல்படக் கூடியதாகவே உள்ளன.
أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ جُندٞ لَّكُمۡ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحۡمَٰنِۚ إِنِ ٱلۡكَٰفِرُونَ إِلَّا فِي غُرُورٍ٢٠
67:20. அதே போன்று உங்களுடைய தீய செயல்களால் அருட்கொடையாளன் அர் ரஹ்மான் நிர்ணயித்த சட்டப்படி உங்களுக்கு பேராபத்துகள் வந்துவிட்டால், எந்தப் படைகளால் அதை எதிர்த்து போரிட முடியும்? இறைவழிகாட்டுதலை ஏற்காமல் செயல்படுபவர்கள் தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தவறான எண்ணத்தில் ஏமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي يَرۡزُقُكُمۡ إِنۡ أَمۡسَكَ رِزۡقَهُۥۚ بَل لَّجُّواْ فِي عُتُوّٖ وَنُفُورٍ٢١
67:21. மேலும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளைக் கொண்டுதான் மக்களுக்கு வாழ்வாதார வசதிகள் கிடைக்கின்றன. அவை தடுக்கப்பட்டு விட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? இவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்வதிலும் அதை வெறுப்பதிலும் முனைப்பாக இருக்கின்றனர்!
أَفَمَن يَمۡشِي مُكِبًّا عَلَىٰ وَجۡهِهِۦٓ أَهۡدَىٰٓ أَمَّن يَمۡشِي سَوِيًّا عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ٢٢
67:22. எனவே இத்தகையவர்களிடம், “எதைப் பற்றியும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக செயல்படுபவர்கள் நேர்வழியில் இருப்பவர்களா? அல்லது எதையும் சிந்தித்து சரியான வழியில் செயல்படுபவர்கள் சிறந்தவர்களா?” என்று கேளுங்கள்.
قُلۡ هُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُمۡ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفِۡٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ٢٣
67:23. மேலும் அவர்களிடம், “உங்ளை படைத்தவன் அல்லாஹ் தான். அவனுடைய செயல் திட்டத்தின் படியே எதையும் கேட்டு அறிந்துக் கொள்வதற்கு செவிப் புலன்களும், பார்த்து அறிந்துக் கொள்ள பார்வைப் புலன்களும், சிந்தித்து செயலாற்ற பகுத்தறிவும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தான் சிந்திக்க வேண்டும்” என்று கூறுங்கள்.
قُلۡ هُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ٢٤
67:24. அல்லாஹ்வின் செயல் திட்டப்படியே மனிதனை உலகம் முழுவதும் பரவச் செய்தான். உங்கள் விருப்பப்படி எல்லாம் செயல்படலாம் என்பது தான் இதற்கு அர்த்தமா? இல்லை. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கின்படியே விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ٢٥
67:25. அதற்கு அவர்கள், “நீங்கள் அடிக்கடி அழிவைப் பற்றியே மிரட்டி வருகிறீர்களே. நீங்கள் சொல்வது உண்மை என்றால் அந்த அழிவுகள் எப்போது வரும்” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
قُلۡ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٞ٢٦
67:26. எனவே அவர்களிடம், “உங்களுக்கு அழிவுகள் எப்போது வரும் என்பதை கணித்து என்னால் கூற இயலாது. அந்த ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் தீய செயல்களின் நாசகர விளைவுகளைப் பற்றி எடுத்துரைப்பதே என் பணியாகும்” என்று அவர்களிடம் எடுத்துரையுங்கள்.
فَلَمَّا رَأَوۡهُ زُلۡفَةٗ سِيَٓٔتۡ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُواْ وَقِيلَ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَدَّعُونَ٢٧
67:27. அத்தகைய அழிவுகள் தோற்றத்திற்கு வரும்போது, அவர்களுடைய முகம் கவலையால் வாடிப்போய் விடும். அப்போது நீங்கள் எதிர்ப் பார்த்த அழிவுகள் இவைதான் என்று அவர்களுக்கு கூறுவதாக அந்த சூழ்நிலைகள் இருக்கும்.
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَهۡلَكَنِيَ ٱللَّهُ وَمَن مَّعِيَ أَوۡ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٍ أَلِيمٖ٢٨
67:28. மேலும் அவர்களிடம், “எனக்கும் என்னுடன் இருப்பவர்களின் நிலைமை என்னவாகும் என்ற கவலையை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி எங்களுக்கு அழிவு ஏற்படுகிறதா அல்லது அவனது அருட்கொடைகள் கிடைக்கப் போகின்றதா என்பதற்கு, காலமே பதில் சொல்லும். ஆனால் இறைவழிகாட்டுதலுக்கு எதிராகச் செயல்படும் உங்களுக்கு அழிவு ஏற்படுவது சர்வ நிச்சயமே! அந்த அழிவிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்?” என்று கேட்பீராக.
قُلۡ هُوَ ٱلرَّحۡمَٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيۡهِ تَوَكَّلۡنَاۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ٢٩
67:29. இறைவழிகாட்டுதலின்படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! “அருட்கொடையாளன் அர் ரஹ்மான் புறத்திலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு கிடைப்பது உறுதி. அவனுடைய வழிகாட்டுதல் மீதே எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அவற்றையே நாங்கள் முற்றிலும் சார்ந்திருக்கிறோம். எனவே வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர்கள் யார் என்ற உண்மை உங்களுக்கு விரைவில் தெளிவாகி விடும்” என்று கூறிவிடுவீராக.
மனிதன் உழைத்து ஈட்டிய செல்வங்களையும் வாழ்வாதார வசதிகளையும் அவனது தேவைக்குப் போக மிகுதியானவற்றை பொது உடமை ஆக்கவேண்டும் என்பதே அருட்கொடையாளன் இறைவனின் அறிவுரையாகும். ஆனால் அவர்களோ இதை விரும்பாமல் அனைத்தும் தமக்காகத் தான் என்று எண்ணி இறைவழிகாட்டுதலை எதிர்க்கிறார்கள்.
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَصۡبَحَ مَآؤُكُمۡ غَوۡرٗا فَمَن يَأۡتِيكُم بِمَآءٖ مَّعِينِۢ٣٠
67:30. எனவே அவர்களிடம் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் மழையின்றி வரண்டு போனால் உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு நீரைப் பொழிய வைப்பவன் யார் என்பதைக் கவனித்தீர்களா?” என்று கேளுங்கள்.
வாழ்வாதார ஏற்பாடுகளை அல்லாஹ்வே செய்திருக்கும் போது, உழைப்புக்கு உரியதை அவன் எடுத்துக் கொள்ளட்டும். மீதமுள்ளவற்றை அல்லாஹ்வின் அறிவுரைப் படி கொடுப்பதில் அவனுக்கு என்ன வந்தது?
அத்தியாயம் 68 - சூரத்துல் ஃகலம் (பேனா முனை)