۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
104

ஹும்மஜா

சொத்துக் குவிப்பு

Humaza

Surah 104  ·  9 வசனங்கள்

الهمزة
۞

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)

முதலாளித்துவ கொள்கை உடையவர்கள் எப்போதாவது சீர்த்திருத்தங்களைப் பற்றி கேள்விப்பட்டால் அதில் ஆயிரமாயிரம் குறைகளை கண்டெடுப்பார்கள். அதை பரிகசிப்பார்கள். சீர்த்திருத்தவாதிகளுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே முயல்வார்கள்.

104:1

وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ١

104:1. இவ்வாறு குறை பேசி திரிபவர்களுக்கு தாளா வேதனை மிக்க கேடுகள் சூழ்ந்துக் கொள்ளும் என்பதை வெளிப்படையாக அறிவிப்பீராக.

104:2

ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ٢

104:2. சொத்து செல்வங்களை குவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்துக் கொண்டு, தான் சேகரித்த செல்வங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொண்டு இருக்கும் இவர்களிடம்,

104:3

يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ٣

104:3. “இந்த அளவிற்கு சொத்து செல்வங்களை சேகரித்து வருகிறீர்களே, அவை உங்கள் வாழ்வில் நிலையான பாதுகாப்பு அளிக்கும் என்று எண்ணுகிறீர்களா?” என்று கேட்டுப் பாருங்கள்.

104:4

كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ٤

104:4. அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தால், அது அவர்களுடைய தவறான கண்ணோட்டமே என்பதை விளக்குங்கள். அந்த சொத்து செல்வங்கள் எல்லாம் உதவாமல் அவர்களை நரக வேதனைகளில் தள்ளிவிடும். அவர்களும் எதற்கும் பயன்படாதவர்களாக ஆகிவிடுவார்கள். (9 : 35)

104:5

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ٥

104:5. அந்த நரக வேதனைகளைப் பற்றி உமக்கு இறைவனைவிட வேறு யார்தான் தெளிவாக்க முடியும் ?

104:6

نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ٦

104:6. இறைவன் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கேற்ற விளைவுகள்” என்கிற சட்டத் தின் பிரகாரம் ஏற்படுகின்ற வேதனைகள், நெருப்பின் தீப்பொறிக்கு ஒப்பானதாகும்.

104:7

ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡ‍ِٔدَةِ٧

104:7. அது அவர்களின் உள்ளங்களை துயரத்தால் தத்தளிக்கச் செய்யும்.

104:8

إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ٨

104:8. வேதனை அளிக்கும் தீப்பொறிகள் நிறைந்த பெரிய பெரிய கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன. செல்வங்களே தம் வாழ்வில் நிலையான சந்தோஷங்களைத் தரும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

104:9

فِي عَمَدٖ مُّمَدَّدَةِۢ٩

104:9. அவர்கள் சம்பாதித்து பாதுகாத்து வந்த செல்வங்களே அவர்களை அந்த நரக நெருப்பிற்கு அழைத்துச் சென்றுவிடும்.

பின் குறிப்பு : இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏற்படும் சமூக அமைப்பு ஒட்டுமொத்த மக்களின் நலனைக் கருதியே திட்டங்களை தீட்டி அவர்களுடைய நல்வாழ்விற்காக பாடுபடும். உண்மை இவ்வாறு இருக்கும் போது, முதளாளித்துவக் கொள்கைக்கு இடமிருப்பதில்லை. எனவே இஸ்லாமிய சமுதாயத்தில் முதளாளித்துவம் நீங்கி ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் என்ற அடிப்படையில் செயலாக்கம் பெறுகிறது.