۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
77

முர்ஸலாத்

இறைவனின் ஏற்பாடுகள்

Mursalath

Surah 77  ·  50 வசனங்கள்

المرسلات
۞

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)

77:1

وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا١

77:1. இதமாக வீசும் தென்றல் காற்றைப் பற்றி கவனித்துப் பார்த்தீர்களா?

77:2

فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا٢

77:2. அதே காற்று புயலாக மாறும் போது, என்ன நேர்கிறது என்பதையும் கவனித்தீர்களா?

77:3

وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا٣

77:3. பரவலாகப் பொழியும் மழையை கவனித்துப் பார்த்தீர்களா?

அதாவது தென்றல் காற்றும் இதமான மழையும் உங்களுக்குப் பிடிக்கும். ஆனால் புயல் காற்றோ அல்லது பெரு வெள்ளமோ உங்களுக்கு பிடிக்காது. காரணம் அவை ஆபத்தை விளைவிக்கும். அதுபோலத் தான் உங்களுடைய சமுதாயமும். தென்றல் காற்றைப் போன்றும், மழை நீரின் வளத்தோடும் சிறப்பான சமுதாயமாக விளங்கவேண்டும் என்பதே இறைவனின் நாட்டமாகும். ஆனால் நீங்கள் இறைவழிகாட்டுதலை ஏற்காமல் தன்னிச்சையாக வாழ முடிவெடுப்பதால், அதன் விபரீத விளைவாக கலகம், கலவரம், கொலை கொள்ளைப் போன்று ஏற்பட்டு உங்கள் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்து விடும். அது சமயம் உங்களால் எதுவும் செய்ய முடியாது.

77:4

فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا٤

77:4. எனவே தான் வாழ்வின் சரியான பாதை எது? தவறான பாதை எது? என்பதை தெளிவாக எடுத்துரைக்கவே இறைத்தூதர் வந்துள்ளார். அவருடைய அறிவுரைகளை கவனித்துப் பார்த்தீர்களா?

77:5

فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا٥

77:5. உங்களுக்கு நல்ல அறிவுரைகளைத் தருவதைப் பற்றி கவனித்துப் பாருங்கள்.

77:6

عُذۡرًا أَوۡ نُذۡرًا٦

77:6. அவை யாவும் உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்காகவும், அதற்கு மாறு செய்வதால் ஏற்படும் விபரீத விளைவுகளை எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதாகவே இருக்கும்.

77:7

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ٧

77:7. அந்த அறிவுரைகளை ஏற்க மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டால், வாக்களிக்கப்பட்ட அழிவுகள் உங்களை வந்தடைந்தே தீரும்.

அதாவது இறைவனின் ஆட்சியமைப்பை ஏற்படுத்தி சிறந்த சமுதாயத்தை உருவாக்கிடவே மூஃமின்களின் ஜமாஅத் உருவாக்கப்படுகிறது. இதை எதிர்த்து போரிட முன்வருபவர்களை ஒடுக்கி வைக்க வேண்டி வருகிறது.

77:8

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ٨

77:8. அது சமயம் சிறு சிறு அரசமைப்புகள் வலிமை இழக்க நேரிடும்.

77:9

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ٩

77:9. அதைத் தொடர்ந்து கொடி கட்டிப் பறக்கும் அராஜக ஆட்சி முறையில் பிளவு ஏற்பட்டு பலவீனமடைந்து விடும்.

77:10

وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ١٠

77:10. மேலும் மலைகளைப் போல் செல்வங்களைக் குவித்து வைத்துக் கொண்டிருப்பவர்களின் மமதை தூள்தூளாகப் பறந்தோடி விடும்.

77:11

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ١١

77:11. அப்போது இறைவனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்களில், யார் யார் எந்த பொறுப்பை சுமப்பார்கள் என்பதையும் அதற்குரிய நேரம் காலம் ஆகியவை என்னவென்பதையும் குறித்து கொடுக்கப்படும்.

77:12

لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ١٢

77:12. இப்படிப்பட்ட மறுமலர்ச்சி ஏற்பட ஏன் கால தாமதம் ஆகிறது?

ஒவ்வொரு செயல்திட்டமும் படிப்படியாகத் தான் முன்னேறி முழு அளவில் நடைமுறைக்கு வரும். அதற்குரிய சரியான தருணத்தை எதிர் பார்ப்பதால்தான் கால தாமதம் ஏற்படுகிறது. அதாவது நல்லவர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு கிடைப்பதும், தீயவர்கள் செய்து வந்த செயலுக்கு ஏற்ற தண்டனை கிடைக்கச் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

77:13

لِيَوۡمِ ٱلۡفَصۡلِ١٣

77:13. அதுவே “அறுவடை நாள்” என்பதாகும்.

77:14

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ١٤

77:14. இந்த அறுவடை நாளைப் பற்றி இறைவனைத் தவிர வேறு யார்தான் உமக்கு சரியான விளக்கத்தைத் தர முடியும்?

77:15

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ١٥

77:15. அந்த காலக்கட்டத்தில் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களைச் செய்வோருக்கு கிடைக்கும் கேடுகெட்ட வேதனைகள் தான் அந்த “அறுவடை நாள்” என்பதாகும்.

77:16

أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ١٦

77:16. இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களிடம், “முன்சென்ற சமுதாயங்களுக்கு இத்தகைய இழிநிலை ஏற்படவில்லையா?” என்று கேளுங்கள்.

77:17

ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ١٧

77:17. அதன் பின் தோன்றிய சமுதாயங்கள், அதே போன்று தீய செயல்களைச் செய்து வந்த போது, அவர்களுக்கும் அதே நிலை ஏற்படவில்லையா? என்றும் கேளுங்கள்.

77:18

كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ١٨

77:18. அதே போன்று தான் இன்றைய காலத்திலும் தீய செயல்களை செய்வோருக்கு தண்டனை கிடைத்தே தீரும். இதில் எந்த மாற்றமும் ஏற்படாது.

77:19

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ١٩

77:19. எனவேதான் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் தண்டனை கடுமையானதாக இருக்கின்றன.

77:20

أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ٢٠

77:20. உங்களுடைய படைப்பின் படித்தரங்களைப் பற்றியே சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் தானே உங்கள் அனைவரையும் நீரின் துளி அளவு சத்திலிருந்து பல படித்தரங்களைக் கடக்கச் செய்து படைத்தோம்?

77:21

فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ٢١

77:21. பின்னர் ஆண் பெண் சேர்க்கையின் மூலம் பாதுகாப்பான கர்ப்பப் பையில் வைத்து படைத்தோம்.

77:22

إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ٢٢

77:22. நீங்கள் அறியக்கூடிய கால அளவுபடி அந்த கர்ப்பப் பையில் தங்கி பிறக்கிறீர்கள்.

77:23

فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ٢٣

77:23. இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்தது நாம் தானே. இப்படியாக நம்முடைய ஒவ்வொரு செயல்திட்டமும் நிறைவேற சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ளோம் அல்லவா? ஆனால்

77:24

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٢٤

77:24. இறைவனின் இத்தகைய வல்லமையை பொய்யெனக் கூறி இறை வழிகாட்டுதலை நிராகரித்து, தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைத் தானே காத்து நிற்கும்.

77:25

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا٢٥

77:25. உங்கள் அனைவரையும் அரவணைத்துக் கொண்டிருக்கும் பூமியைப் பற்றி சிந்தித்ததுப் பார்த்ததுண்டா? அதை நாம் தானே அவ்வாறு படைத்தோம்?

77:26

أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا٢٦

77:26. இந்த பூமியில் வாழ்வும் மரணமும் தொடர்ந்து நடைப்பெற்று வருவதைக் கவனிக்க மாட்டீர்களா?

77:27

وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا٢٧

77:27. மேலும் அதில் மிக உயரமான மலைகளையும் படைத்துள்ளோம். அதைக் கொண்டு உங்களுக்கு இனிமையான தண்ணீரும் கிடைக்கச் செய்கிறோம்.

77:28

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٢٨

77:28. இவை எல்லாம் உண்மை என்றால், இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான வேதனைகள் கிடைக்கும் என்பதும் உண்மையாகும் அல்லவா?

77:29

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ٢٩

77:29. ஆக “மனித செயல்களுக்கு ஏற்ற பின் விளைவுகள்” என்ற சட்டத்தை ஏற்க மறுப்பவர்களிடம், “எதைப் பொய்ப்பித்து வருகிறீர்களோ அதன்படியே நடப்பீர்களாக” என்று சொல்லிவிடுங்கள்.

77:30

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ٣٠

77:30. மூன்று கிளைகள் உடைய புகை மண்டலங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அதன்பால் நடப்பீர்களாக.

தவறான சமூக அமைப்புகளால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், குடும்பச் சிக்கல்கள் மற்றும் உடல் நிலை சிக்கல்களாகவும் இருக்கலாம்.

77:31

لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ٣١

77:31. அவ்வேதனைகளிலிருந்து விடுபடவும் முடியாது. அவற்றை அனுபவிக்கவும் முடியாது.

77:32

إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ٣٢

77:32. காரணம் அந்த வேதனைகள் பெரிய பெரிய நெருப்புப் பொறிகளைக் கொண்ட குண்டங்களில் எறியப்படுவது போல் இருக்கும்.

77:33

كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ٣٣

77:33. அவற்றைப் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமுள்ள பெரிய ஒட்டகங்கள் போன்று இருக்கும்.

77:34

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٣٤

77:34. இத்தகைய அதிபயங்கர வேதனைகளைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இறை வழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுகிறீர்களே! உங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதில் இன்னமும் சந்தேகம் உண்டா?

77:35

هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ٣٥

77:35. மனித செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும் காலக்கட்டத்தில், யாரும் எதைப் பற்றியும் யாரும் பேச வேண்டியிருக்காதே.

77:36

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ٣٦

77:36. தான் தவறானப் பாதையில் சென்றதற்கு எந்த சாக்கு போக்கையும் கூற இயலாதே.

77:37

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٣٧

77:37. இத்கைய நிலையைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது நிச்சயமே.

77:38

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ٣٨

77:38. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் செய்து வரும் நன்மை தீமை ஆகிய செயல்களுக்கு ஏற்ப பலன்களும் தீய விளைவுகளும் நியாயமான முறையில் கிடைக்கும் காலக்கட்டம் தான் “அறுவடைநாள்” என்பதாகும். எனவே உங்களுக்கு முன்னிருந்தோரையும் நாம் ஒன்று சேர்ப்போம்.

77:39

فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ٣٩

77:39. எனவே நிர்ணயிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தப்பித்து செல்ல உங்களால் எந்த அளவுக்கு திட்டங்களைத் தீட்டிக்கொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு தீட்டிக் கொள்ளுங்கள். எதையும் விட்டு வைக்காதீர்கள்.

77:40

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٤٠

77:40. இத்தகைய அறைகூவலுக்குப் பிறகும் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை கிடைக்காமல் போகுமா?

77:41

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ٤١

77:41. ஆனால் இறைவழிகாட்டுதலைப் பேணி நடந்தவர்களின் நிலை இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். அவர்கள் குளிர்ந்த நிழல்களிலும், நீர் சுனைகளிலும் சுகத்துடன் இருப்பார்கள்.

அதாவது இறைவன் “நிர்ணயித்த அறுவடை நாள்” மூஃமின்களுக்கு வேறு விதமாக இருக்கும்.

77:42

وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ٤٢

77:42. இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகள் அனைத்தும் அவர்களுக்குக் கிடைத்து வரும்.

77:43

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓ‍َٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ٤٣

77:43. “இவையெல்லாம் நீங்கள் உழைத்ததன் பலனாகக் கிடைக்கின்ற சந்தோஷங்களாகும். எனவே நீங்கள் விரும்பியவாறு எந்த சிரமுமின்றி தாரளாமாகப் புசியுங்கள். இன்னும் வேண்டுமளவுக்கு பருகுங்கள்” என்று கூறப்படும்.

77:44

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ٤٤

77:44. இவ்வாறே நன்மையான செயல்களை செய்வோருக்கு நாம் நற்பலன்களைக் கொடுப்போம்.

77:45

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٤٥

77:45. ஆனால் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான வேதனைகள் தான் மிஞ்சும்.

77:46

كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ٤٦

77:46. இறைவனின் செயல்திட்டத்தை பொய்யாக்குபவர்களே! நீங்கள் இன்னும் சிறிது காலத்திற்கு சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்.

77:47

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٤٧

77:47. ஆனால் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது நிச்சயம் என்பதை அவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளட்டும்.

77:48

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ٤٨

77:48. இதற்குக் காரணம் இறைவழிகாட்டுதலின்படி உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு தலை வணங்கி செயல்படுங்கள் என்று சொன்னால் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

77:49

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ٤٩

77:49. எனவே தான் இறைவழிகாட்டுதலை நிராகரித்து தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பது நிச்சயம்.

77:50

فَبِأَيِّ حَدِيثِۢ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ٥٠

77:50. இந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை செய்திகளை எடுத்துரைத்தும், அவர்களுக்கு வேறு எந்த ஆதாரத்தை (ஹதீஸை) எடுத்துச் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?