بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
92:அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
இரவு
Layl
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
92:அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ١
92:1. இரவை கவனியுங்கள். அது எல்லா பொருட்களையும் போர்வையாக மூடிக்கொள்வது போல் அமைந்துள்ளது.
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ٢
92:2. மறு பக்கம் பகலை எடுத்துக் கொள்ளுங்கள். இரவிற்கு நேர் மாற்றமாக அனைத்துப் பொருட்களையும் பளிச்சிட செய்து விடுகிறது.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராகத் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. இவை இரண்டும் ஒன்றில் ஏற்படும் குறைகளை மற்றது நீக்கி வருவதாக உள்ளது. இதனால் தான் உயிரினம் இந்த பூமியில் நிலைத்து வாழ முடிகிறது. பகல் பகலாகவே இருந்தாலோ இரவு இரவாகவே இருந்தாலோ உயிரினம் வாழ சாத்தியமில்லை. (3:189&190)
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ٣
92:3. அதே போல் உயிரினங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பக்கம் ஆண் என்றால் மறுபக்கம் பெண் என இருவகைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் ஒவ்வொன்றிலும் மாறுபட்ட உடலமைப்பு அமைந்துள்ளது. இதுவும் ஒன்றில் இருக்கின்ற தேவைகளை மற்றது நிறைவு செய்யும்படி படைக்கப்பட்டுள்ளது.
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ٤
92:4. அதே போல் சமுதாயத்திலுள்ள பல்வேறு தொழில்கள் யாவும் (Division of Labor) பங்கிடப்பட்ட செயல்பாடுகளே ஆகும். செயல்பாடுகளின் இந்த பங்கீட்டு முறையால் தான் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன.
உங்களுடைய உழைப்பும் முயற்சியும் - விவசாயம், நெசவுத் தொழில், வணிகம், கல்வி, குடும்பவியல் என பல துறைகளாகப் பிரிந்துள்ளன. இருப்பினும் இவை எல்லாம் ஒன்றிணைந்தால் தான் சமுதாயமாக உருவாக முடியும். ஆக ஒட்டுமொத்த சமுதாயம் என்பது ஒரு கூட்டுக் குடும்பமே ஆகும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அந்த வகையில் மொத்த உலகமே ஒரு குடும்பம் என்றாகி விடுகிறது.
மனிதன் தனித்திருந்து தன் வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள முடியாது. கூட்டுக் குடும்ப முறையில் தான் வாழமுடியும். காரணம் மனிதன் தன்னுடைய தேவைகள் அனைத்தையும் தானே நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அவன் அதற்காக பிறர் உழைப்பையும் சார்ந்தவனாகவே இருக்கின்றான். இரவும் பகலும் வெவ்வேறாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவற்றின் ஒன்றில் ஏற்படும் குறைகளை மற்றொன்று சரி செய்வதாகவே அமைந்துள்ளது. அதே போல் ஆண் பெண் ஆகிய இருவரும். ஒருவர் மற்றவர் தேவைகளை நிறைவு செய்பவர்களாகவே உள்ளனர். ஆக சமுதாயத்திலுள்ள தொழில் ரீதியான பிரிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை என்று எண்ணிக் கொண்டால் அது உங்களுடைய தவறான எண்ணங்களாகும்.
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ٥
92:5. ஆக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! மனித இனம் ஒன்றே என்றும், தாம் பெற்ற செல்வங்கள் தம் தேவைக்கு போக மிகுதியானவை எல்லாம் அனைவருக்கும் பொதுவானவை என்றும் எண்ணி, தனது உழைப்பில் கிடைத்தவற்றை சமுதாய மேம்பாட்டிற்காக கொடுத்து, சமுதாய சீர்நிலையைக் கொண்டுவர உழைப்பவர்களும் (92 : 18-19)
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ٦
92:6. சமூகம் மற்றும் பொருளாதார சமச் சீர்நிலையை நிலைநாட்ட உறுதிபட செயல்பட்டு அல்லாஹ்வின் செயல் திட்டங்களை உண்மைப் படுத்துவோரும் -
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ٧
92:7. மனித வாழ்வின் எல்லா வளர்ச்சிப் படித்தரங்களையும் கடந்து எளிதாக சுவனத்திற்கு ஒப்பான சமுதாயத்தை உருவாக்கிட முடியும்.
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ٨
92:8. மாறாக தாம் பெற்ற செல்வம் தமக்கு மட்டும் தான் சொந்தம் என்றும், மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மனப்பான்மையுடன் கூடிய சமுதாயமாக உருவெடுக்குமானால் (96:7)
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ٩
92:9. மேலும் சமுதாய சமச்சீர்நிலையை பொய்யாக்கி விட்டால்,
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ١٠
92:10. அப்படிப்பட்டவர்கள் வாழும் சமுதாயம் ஒவ்வொரு கட்டத்திலும் பல பிரச்சனைகளைச் சந்தித்து, சிக்கல் மேல் சிக்கல்கள் உருவாகிக் கொண்டே செல்லும். இறுதியில் அந்த சமுதாயம் அழிவு என்னும் நரக வேதனையில் சிக்கிக் கொள்ளும்.
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ١١
92:11. அப்படி ஒரு அழிவை சந்திக்கும் தருவாயில் தாம் சம்பாதித்து வைத்திருந்த செல்வங்களும் அதிகார பலமும் பயனற்று போய்விடும். (69 : 28) (111 : 2)
செல்வத்தை திரட்டி குவித்துக் கொள்ளும் வழிமுறைகளை மனிதன் தன் சுய அறிவைக் கொண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒன்றாகும். மனித அறிவு எப்பொழுதும் தன் வரை உள்ள பாதுகாப்பு பற்றிய யோசனையே கூறி வரும். அதற்கு மேல் ஒரு படியும் மேலே செல்லாது.
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ١٢
92:12. எனவே மனிதனின் சரியான வாழ்க்கைப் பாதையை “வஹீ” என்னும் இறைவழிகாட்டுதல்கள் மூலம் அளிப்பது நம் மீதுள்ள பொறுப்பு.
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ١٣
92:13. இறைவழிகாட்டுதல்கள் மனிதனின் தற்காலிக வாழ்க்கையின் தேவைகளையும், அவனுடைய வருங்கால நிலையான வாழ்வின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டே தரப்படுகின்றன.
فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ١٤
92:14. சமுதாய சீர்திருத்தவாதியே! இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக செயல்பட்டால் பல்வேறு சமுதாய சீர்கேடுகள் ஏற்பட்டு அழிவினை சந்திக்க நேரிடும் என்பதை மக்களுக்கு தெளிவாக்கிவிடு. இன்னும் அவர்களுடைய அனைத்து உழைப்பையும் ஈட்டி வந்த செல்வங்களையும் அவை சுட்டு பொசுக்கி சாம்பலாக்கி விடும் என்பதையும் எச்சரித்து விடு.
لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى١٥
92:15. இறைவன் வகுத்துத் தந்துள்ள வழிகாட்டுதல்களுக்கு மாறு செய்பவர்களே இத்தகைய வேதனைகள் நிறைந்த வாழ்வில் சிக்குவார்கள்.
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ١٦
92:16. அதாவது இறைவழிகாட்டுதலுக்கு பதிலாக, அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை முறைகளின் படி வாழ்வோர்க்கு இப்படி ஒரு நிலை ஏற்படும்.
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى١٧
92:17. ஆனால் இறைவனுடைய வழிகாட்டுதலுக்குக் கட்டுபட்டு வாழும் சமுதாயம் இந்த அழிவிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ١٨
92:18. அதாவது அவர்களுக்குத் தேவையானதை தமக்காக வைத்துக் கொண்டு (மா லஹு) மீதமுள்ள அனைத்தையும் சமுதாய மேம்பாட்டிற்காக யார் கொடுத்து விடுகிறார்களோ, அவர்கள் தாமும் பாதுகாப்பாக இருப்பார்கள். கூடவே அவர்களுள் மனித நேயமும் வளரும். (9:111)
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ١٩
92:19. அவர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக கொடுக்கிறார்கள் என்றால் நன்றி விசுவாசத்தை எதிர் பார்த்து கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு போதும் செய்யவும் கூடாது. (76 : 9)
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ٢٠
92:20. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் இறைவனின் ஆட்சியமைப்பு சிறப்பாக செயல்பட அவர்கள் தம் உதவிக் கரங்களை நீட்டவேண்டும்.
وَلَسَوۡفَ يَرۡضَىٰ٢١
92:21. அப்போதுதான் அவர்களுடைய உழைப்புக்குரிய சரியான பலன்கள் இறைவனின் நியதிப்படி உடனுக்குடன் கிடைத்து வரும். இதனால் அவர்களுக்கு மனநிறைவும் ஏற்படும்.
அத்தியாயம் : 93 - சூர: ஜுஹா (விடிவு காலம்)