۞بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
முன் குறிப்பு: ஒரு நாட்டில் நிலவி வரும் பாலியல் உறவுமுறைகள், பண்பாடு, ஒழுக்க மாண்புகள் மற்றும் இல்லத்தில் கடைப்பிடித்து வரும் நெறிமுறைகள் ஆகியவற்றை வைத்தே அந்த நாடு எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை கணித்து விடலாம். எனவே திருக்குர்ஆன் பாலியல் உறவு முறைகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆண் பெண் திருமணம் செய்யாமல் வைத்துக் கொள்ளும் பாலியல் உறவுமுறைகளை, மானக்கேடான செயல்கள் என வெளிப்படையாக கண்டிக்கிறது. (பார்க்க 17:32) பாலியல் உறவுமுறை விஷயத்தில் கட்டுப்பாடு உள்ள நாடுகள் தான் தன் இலட்சியப் பாதையில் வெற்றி நடை போடமுடியும் என்கிறது (பார்க்க 23:5-6,70:29-30). எனவே குர்ஆனில் உள்ள கட்டளைகள் உங்கள் மீது கடமையாக்கபட்டது போல் (பார்க்க 28:85) இந்த அத்தியாயத்தில் தரப்படுகின்ற கட்டளைகளும் உங்கள் மீது கடமையாக்கப்படுகின்றன.
மேலும், இஸ்லாமிய ஆட்சி அனைத்துத் தரப்பு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பொறுப்பு ஏற்றுக்கொள்ளும். (பார்க்க 11:6) எனவே எளிமையான பதிவு திருமணம் முறையை கடைப்பிடிக்கவே அது அறிவுறுத்துகிறது. மேலும் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் அனைத்து வழிமுறைகளுக்கும் அது தடை விதிக்கிறது. (பார்க்க 4:15-16) எனவே பெண்களின் பாதுகாப்பான வாழ்விற்கு இது இன்றியமையாத விஷயமாகும். இதனடிப்படையில் இந்த அத்தியாயம் பேசுகிறது.
24:1سُورَةٌ أَنزَلۡنَٰهَا وَفَرَضۡنَٰهَا وَأَنزَلۡنَا فِيهَآ ءَايَٰتِۢ بَيِّنَٰتٖ لَّعَلَّكُمۡ تَذَكَّرُونَ١
24:1. இவ்வேதமான குர்ஆன் அருளப்பட்டது போல (பார்க்க 15:9), இந்த அத்தியாயமும் நம் புறத்திலிருந்து அருளப்படுகிறது. இதிலுள்ள கட்டளைகளைப் பின்பற்றுவது உங்கள் மீதுள்ள கடமையாகும். இதிலுள்ள அறிவுரைகளை நன்றாக படித்து அவற்றை செயல்படுத்த, மிகத் தெளிவான முறையில் அருளப்படுகின்றன.
மனித ஆற்றல்கள் முழு அளவில் வளர்வதற்கு பாலியல் உறவுமுறையில் கட்டுப்பாடுகள் இருப்பது அவசியமாகின்றன. தான் விரும்பி ஏற்கும் பெண்ணை மணக்க அனுமதிக்கும் குர்ஆன் (பார்க்க 4:3), பெண்ணை விலைப் பொருளாக கருதுவதை வன்மையாக கண்டிக்கிறது. எனவே திருமண ஒப்பந்த முறையை கடமையாக்குகிறது. (பார்க்க 4:19-25) எனவே
24:2ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجۡلِدُواْ كُلَّ وَٰحِدٖ مِّنۡهُمَا مِاْئَةَ جَلۡدَةٖۖ وَلَا تَأۡخُذۡكُم بِهِمَا رَأۡفَةٞ فِي دِينِ ٱللَّهِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ وَلۡيَشۡهَدۡ عَذَابَهُمَا طَآئِفَةٞ مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ٢
24:2. ஆண் பெண் ஆகிய இருவரில் சட்டவிரோதமான பாலியல் உறவுமுறைக்கு அது தடை விதிக்கிறது. அதையும் மீறி திருமணமின்றி யாரவது அப்படிப்பட்ட உறவை வைத்துக் கொண்டால், அவர்கள் இருவரும் தண்டனைக்கு உரியவர் ஆவார்கள். அப்படிப்பட்ட உறவு இருப்பதாக நிரூபணமானால் (பார்க்க 4:15&24:4) இஸ்லாமிய நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுக்க உத்தரவு பிறப்பிக்கும். உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்பவராக இருந்தால், இந்த தண்டனையை நிறைவேற்றுவதில் யாருக்கும் பாரபட்சம் காட்டவேண்டாம். அதுமட்டுமின்றி அது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தண்டனையை பொது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றுங்கள்.
24:3. இந்த தண்டனையை இருவருக்கும் ஏன் தரப்படவேண்டும் என்றால், ஆண் பெண் இடையே ஏற்படும் இத்தகைய உடன்பாடு, இருவரின் இணக்கத்துடன் தான் ஏற்பட முடியும். இதில் பெண்ணையோ ஆணையோ தனியாகக் குற்றம் சுமத்த முடியாது. இருவரில் ஒருவர் பரிசுத்தமானவராக இருந்தால், இப்படி நடக்க சாத்தியமில்லை.
ٱلزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوۡ مُشۡرِكَةٗ
ஆண் சபலபுத்தி உள்ளவனாகவோ அல்லது தம் வாழ்வின் எந்த இலட்சியமும் இல்லாதவனாகவோ இருந்தால் தான் இப்படிப்பட்ட தகாத உறவுமுறைக்கு வழி ஏற்படும்.
وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوۡ مُشۡرِكٞۚ
அதே போல பெண்ணும் அத்தகைய சபலபுத்தி உள்ளவளாகவோ அல்லது லவாழ்வின் எந்த இலட்சியமும் இல்லாதவளாகவோ இருந்தால் தான் இத்தகைய தகாத உறவு ஏற்படும்.
وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ٣
எனவே தான் அவ்விருவருக்கும் தண்டனை அளிக்கும்படி கட்டளையிடப்படுகிறது. மேலும் இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படும் மூஃமின்கள் இப்படிப்பட்ட தகாத செயலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வார்கள்.
இவ்வாசகத்தில் வரும் ‘நிக்காஹ்’ என்ற வார்த்தைக்கு ஆண் பெண் ஆகியோரிடையே ஏற்படும் உடன்பாடு (Understanding) என்று பொருள் தந்துள்ளோம் (ஆதாரம்: லிஸானுல் அரப் என்ற அகராதி)
24:4وَٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ثُمَّ لَمۡ يَأۡتُواْ بِأَرۡبَعَةِ شُهَدَآءَ فَٱجۡلِدُوهُمۡ ثَمَٰنِينَ جَلۡدَةٗ وَلَا تَقۡبَلُواْ لَهُمۡ شَهَٰدَةً أَبَدٗاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ٤
24:4. இந்த தண்டனையை யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தரமுடியும் என்பதல்ல. யாரும் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி பழி சுமத்த முடியாது. எனவே தகாத உறவுமுறை வைத்திருப்பதாக யாராவது ஒரு கற்புள்ள பெண் மீது நீதி மன்றத்தில் புகார் செய்தால், அவர் அக்குற்றத்தை நிரூபிக்க குறைந்தது நான்கு சாட்சிகளையாவது (Circumstantial Evidence or Material Evidence) கொண்டுவர வேண்டும். (சாட்சிகளின் விவரம் - பார்க்க 24:24) அப்படி அவரால் சாட்சிகளை வைத்து அக்குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை என்றால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடி தரப்படும். மேலும் அத்தகையவர்களின் புகார்களையும் சாட்சிகளையும் இனி நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் அவர்கள் வேண்டுமென்றே சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பாவிகளாக கருதப்படுவர்.
24:5إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ٥
24:5. எனினும் வீண் பழி சுமத்தியவர்கள், அறியாமையில் தவறிழைத்து விட்டதாக கூறி, தம்மை திருத்திக் கொள்வதாக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோறினால், அவர்களுக்கு மன்னிப்பு அளிக்க இறைச் சட்டத்தில் இடமுண்டு. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பைக் கருதி, நிலைமைக்கு தக்கவாறு கருணையுடன் அணுகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
24:6وَٱلَّذِينَ يَرۡمُونَ أَزۡوَٰجَهُمۡ وَلَمۡ يَكُن لَّهُمۡ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمۡ فَشَهَٰدَةُ أَحَدِهِمۡ أَرۡبَعُ شَهَٰدَٰتِۢ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ٦
24:6. மேலும் தன் மனைவிக்கு எதிராக கணவனோ அல்லது தன் கணவருக்கு எதிராக மனைவியோ பழிசுமத்தி (பார்க்க 2:228), அதற்கு ஆதாரமாக அவரிடம் வேறு சாட்சிகள் எதுவும் இல்லை என்றால், நிச்சயமாக, தான் உண்மையே பேசுவதாக நீதிமன்றத்தில் அல்லாஹ்வின் மீது நான்குமுறை சத்தியம் செய்து கூறவேண்டும்.
24:7وَٱلۡخَٰمِسَةُ أَنَّ لَعۡنَتَ ٱللَّهِ عَلَيۡهِ إِن كَانَ مِنَ ٱلۡكَٰذِبِينَ٧
24:7. அதை அடுத்து ஐந்தாம் முறையாக அவர், தான் குற்றம் சுமத்தியதில் பொய் இருந்தால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலமாக கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகும் என்பதை அறிந்தே இந்த புகாரை கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் சத்தியம் செய்து கூற வேண்டும்.
24:8وَيَدۡرَؤُاْ عَنۡهَا ٱلۡعَذَابَ أَن تَشۡهَدَ أَرۡبَعَ شَهَٰدَٰتِۢ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ٨
24:8. அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவர் தண்டனைக்கு உரியவராகி விடுவார். அவர் தம்மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டதாக கருதினால், அவர் தம்மீது பொய்யான வழக்கே தொடரப்பட்டுள்ளதாக அல்லாஹ்வை சாட்சீயாக வைத்து* நான்கு முறை நீதிமன்றத்தின் முன் சத்தியம் செய்து கூறவேண்டும்.
அல்லாஹ்வை சாட்சியாக வைப்பது என்பது நீதித்துறையின் முன் அவள் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க அவளுக்கு சாதகமாக கிடைக்கக்கூடிய ஆதாரங்களை உருவாக்குவதாகும்.
24:9وَٱلۡخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيۡهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ٩
24:9. அவரும் ஐந்தாம் முறையாக, தான் கூறுவது உண்மையே என்றும், இந்த வாக்குமூலம் பொய்யென நிரூபணமானால், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சலுகைகள் தனக்கு கிடைக்காமல் போகும் என்பதை நன்கு அறிவேன் என்றும் நீதிமன்றத்தில் சத்தியம் செய்து கூற வேண்டும்.
இப்படியாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குற்றப் பத்திரிகையை பரிசீலித்து, குறுக்கு விசாரணையை மேற்கொள்வார்கள். இதில் யார் பொய்யர்கள் என்ற உண்மை வெளிப்பட்டுவிடும். மேலும், வழக்கின் நிலவரத்தை தீர விசாரித்து அதற்கேற்ற வகையில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள். ஏதோ பழைய பகையை முன்வைத்து உணர்ச்சி வேகத்தில் பழி சுமத்தி இருந்தால், அதற்கு தக்கவாறு தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்பும் வாதியோ பிரதிவாதியோ குற்றம் புரிந்துள்ளதாக நிரூபணமானால் ஆட்சியமைப்பு மூலமாக கிடைக்கின்ற சலுகைகளை அவர் இழக்க நேரிடும்.
24:10وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ١٠
24:10. இப்படியாக சமூக நல்லிணக்கத்திற்காக இறைவன் புறத்திலிருந்து தெளிவான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. இது அல்லாஹ்வின் மிகப் பெரிய கருணையே ஆகும். அல்லாஹ்வின் இத்தகைய கருணையும் வழிகாட்டுதலும் இல்லாதிருந்தால், அனைவருமே உணர்ச்சி வேகத்தில் செயல்பட்டு, சமுதாயமே சீர்கெட்டுப் போயிருக்கும். எனவே அறியாமையில் செய்யும் தவறுகளுக்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மன்னிப்பு அளிப்பதுடன், நிலைமைக்குத் தக்கவாறு விவேகத்துடனும் நடந்துக் கொள்ளும்.
24:11إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلۡإِفۡكِ عُصۡبَةٞ مِّنكُمۡۚ لَا تَحۡسَبُوهُ شَرّٗا لَّكُمۖ بَلۡ هُوَ خَيۡرٞ لَّكُمۡۚ لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُم مَّا ٱكۡتَسَبَ مِنَ ٱلۡإِثۡمِۚ وَٱلَّذِي تَوَلَّىٰ كِبۡرَهُۥ مِنۡهُمۡ لَهُۥ عَذَابٌ عَظِيمٞ١١
24:11. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீதிமன்ற விவகாரங்களை நீங்கள் அலசி ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மீது தவறாகக் குற்றம் சுமத்தியவர்கள், உங்களைச் சார்ந்தவர்களே ஆவர். இதனால் உங்களுக்கு மிகப் பெரிய தீங்கு ஏற்பட்டுவிட்டதாக எண்ண வேண்டாம். நீதிமன்றம் மூலமாக நீங்கள் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், அது உங்களுக்கு நன்மையே ஆகும். பொய் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்தே தீரும்.
24:12لَّوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ ظَنَّ ٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بِأَنفُسِهِمۡ خَيۡرٗا وَقَالُواْ هَٰذَآ إِفۡكٞ مُّبِينٞ١٢
24:12. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி செயல்படும் ஆண் பெண் ஆகியோர், பழிச் சொல்லுக்கு ஆளானவர்களைப் பற்றி எல்லோரிடமும் அவதூறு சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. மாறாக இதைப் பற்றி கேள்வியுற்றால், இது வீண் பழி என்றே தான் நினைப்பதாகவும், அதைப் பற்றி நீதி மன்றம் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறுவதே சிறந்த செயலாகும். இத்தகைய நல்லெண்களுடன் செயல்படுபவர்கள் தான் மூஃமின்கள் ஆவர்.
24:13لَّوۡلَا جَآءُو عَلَيۡهِ بِأَرۡبَعَةِ شُهَدَآءَۚ فَإِذۡ لَمۡ يَأۡتُواْ بِٱلشُّهَدَآءِ فَأُوْلَٰٓئِكَ عِندَ ٱللَّهِ هُمُ ٱلۡكَٰذِبُونَ١٣
24:13. மேலும் அவர்கள், “நீதி மன்றத்தில் அக்குற்றத்தை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டியுள்ளதே. அவ்வாறு அக்குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளை கொண்டுவர முடியவில்லை என்றால், குற்றம் சுமத்தியவர் பொய்யராக கருதப்படுவாரே. நீதி மன்றத்தில் பொய்யர் என்று தீர்ப்பானால் அவருக்கு தண்டனையும் கிடைக்குமே!” என்றே கூறுவார்கள்.
24:14وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ لَمَسَّكُمۡ فِي مَآ أَفَضۡتُمۡ فِيهِ عَذَابٌ عَظِيمٌ١٤
24:14. மேலும், “இறைவழிகாட்டுதல்” என்ற அருட்கொடைகள் உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், நிகழ்கால வாழ்விலும் வருங்கால நிலையான வாழ்விலும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் போயிருக்கும். அதனால் நீங்கள் தம் மன இச்சைப்படி செயல்பட்டு பல வேதனைகளுக்கு ஆளாகியிருப்பீர்கள்.
அதாவது குற்றம் சுமத்துவதும் அதைப் பற்றி மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்புவதும் தீய செயல்களாகும். ஏனெனில் அதனால் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படாமல் பகைமையைத் தான் வளர்க்கும். இதை முக்கியமாக கவனத்தில் கொண்டு 24:12 சொல்லப்பட்டது போல் நல்ல அபிப்ரயாத்தையே வெளிப்படுத்த வேண்டும்.
24:15إِذۡ تَلَقَّوۡنَهُۥ بِأَلۡسِنَتِكُمۡ وَتَقُولُونَ بِأَفۡوَاهِكُم مَّا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٞ وَتَحۡسَبُونَهُۥ هَيِّنٗا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٞ١٥
24:15. இதை விட்டுவிட்டு குற்றத்தைப் பற்றிய எந்த உண்மையும் அறியாமல் வேண்டுமென்றே எல்லோரிடமும் எடுத்து சொல்லிக் கொண்டு திரிவது சரியாகாது. எதைப் பற்றி உங்களுக்கு தெளிவான உண்மை தெரியவில்லையோ, அதைப் பற்றியா சொல்லித் திரிகிறீர்கள்? மேலும் இப்படி சொல்லித் திரிவது சாதாரண விஷயம் என்று எண்ணிக் கொண்டீர்களா? இல்லை. இதனால் சமுதாயத்தில் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும். எனவே அல்லாஹ்வின் சட்டப்படி இது மிகப் பெரிய குற்றமாகும்.
24:16وَلَوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ قُلۡتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبۡحَٰنَكَ هَٰذَا بُهۡتَٰنٌ عَظِيمٞ١٦
24:16. மேலும் யாராவது இப்படி பேசுவதைக் கேட்டால், “இதைப் பற்றி நாம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது அல்லாஹ்வின் தூய்மையான வழிகாட்டுதலின்படி செயல்படும் நீதிமன்ற விவகாரமாகும். எனவே இதைப் பற்றி நாம் ஏதாவது சொன்னால் அது வீண் பழியாகிவிடும்” என்று கூறியிருக்கக் கூடாதா?
24:17يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُواْ لِمِثۡلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤۡمِنِينَ١٧
24:17. எனவே நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட மூஃமின்களாக இருந்தால், இப்படிப்பட்ட பொறுப்பில்லாத பேச்சுகளின் பக்கம் ஒருபோதும் கவனம் செலுத்தாதீர்கள். இது அல்லாஹ்வின் அறிவுரையாகும்.
24:18وَيُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ١٨
24:18. சமூக நல்லிணகத்தைக் கட்டிக் காக்க, எல்லா விஷயங்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு மிகத் தெளிவாக விவரிக்கப்படுகின்றன. உங்களுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் என்ன என்பதையும் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ளும் வல்லமையுடைய அல்லாஹ்விடமிருந்து வரும் அறிவுரைகளாகும்.
24:19إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ١٩
24:19. நினைவில் கொள்ளுங்கள். இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி சிறந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபடுபவர்களுக்கு எதிராக யார் புரளிகளை வேண்டுமென்றே பரப்பி வருகிறார்களோ, அவர்களுக்கு ஆட்சியமைப்பு சட்டப்படி தண்டனை கிடைக்கும். அது மட்டுமின்றி அத்தகையவருக்கு மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் கடுமையான தண்டனை கிடைக்கும். இதுதான் மனித வாழ்வைப் பற்றி இறைவன் நிர்ணயித்துள்ள சட்டமாகும். இதைப் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
24:20وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ رَءُوفٞ رَّحِيمٞ٢٠
24:20. இப்படியாக இறைவழிகாட்டுதல் என்ற அருட்கொடைகள் உங்களுக்கு கிடைக்காதிருந்தால், உங்களுடைய தவறான செயல்களால் உங்களுக்குப் பல வேதனைகள் ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக மனிதன் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இத்தகைய வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன. இவை அல்லாஹ்வின் அளவற்ற கிருபையையும் அன்பையும் பிரதிப்பலிக்கின்றன.
24:21۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ
24:21. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் உங்கள் மனோ இச்சையைப் பின்பற்றி சுயநலத்துடன் ஒருபோதும் செயல்படாதீர்கள். சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்களின் பேச்சை கேட்காதீர்கள். அவர்கள் எப்போதும் உங்களை மானக்கேடான செயல்களையும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தீய செயல்களில் ஈடுபடுமாறும் தூண்டிக் கொண்டிருப்பார்கள். (பார்க்க 2:268)
وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدٗا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّي مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ٢١
இறைவழிகாட்டுதல் என்ற அருட்கொடைகள் இல்லாதிருந்தால், உங்களுள் மனித ஆற்றல்களும் ஒழுக்க மாண்புகளும் வளர வாய்ப்புகள் ஒருபோதும் கிடைத்திருக்காது. அல்லாஹ்வின் அறிவுரைகளின்படி செயல்பட நாடுபவர்களுக்கே மனித ஆற்றல்களும் சிந்திக்கும் திறனும் வளரும். அல்லாஹ்வின் கேட்கும் வல்லமையும் அறிந்து கொள்ளும் வல்லமையும் அளவற்றவையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது, வழக்கு சம்பந்தமாக பல சாட்சியாளர்களை அழைப்பார்கள். அப்போது சில சாட்சியாளர்கள் உங்களிடமிருந்து உதவி பெறுபவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொன்னார்கள் என்பதற்காக அவர்களை பகைத்துக் கொள்வது முறையாகாது. எனவே
24:22وَلَا يَأۡتَلِ أُوْلُواْ ٱلۡفَضۡلِ مِنكُمۡ وَٱلسَّعَةِ أَن يُؤۡتُوٓاْ أُوْلِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱلۡمُهَٰجِرِينَ فِي سَبِيلِ ٱللَّهِۖ
24:22. செல்வ சீமான்களாகிய உங்களிடமிருந்து உங்கள் உறவினர்களும், ஏழை எளிய மக்களும், அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்ற, தம் ஊரைவிட்டு வெளியேறி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களும் உதவிப் பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலர் நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் கட்டாயத்தில் இருந்திருக்கலாம். அதற்காக அவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிட தீர்மானிக்காதீர்கள* . ஏனெனில் அது கடந்து போன விஷயமாகும்.
وَلۡيَعۡفُواْ وَلۡيَصۡفَحُوٓاْۗ أَلَا تُحِبُّونَ أَن يَغۡفِرَ ٱللَّهُ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٌ٢٢
இவற்றை எல்லாம் பெரிது படுத்திக்கொண்டு பகைமை உணர்வுடன் செயல்படாதீர்கள். அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இதை கவனத்தில் கொண்டு சுமுகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பான வாழ்விற்கு வழி வகுக்கின்றன. இது அல்லாஹ்வின் மாபெரும் கருணையாகும் அல்லவா?
அதாவது நீதிமன்றத்தில் அல்லாஹ்வின் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். எனவே உண்மைக்கு சாட்சி சொல்வது ஒவ்வொரு மூஃமின்கள் மீதும் உள்ள முக்கிய கடமையாகும். (பார்க்க 5:8&106) சமுதாயத்தில் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பது தான் முக்கியமானதாகும். எனவே சாட்சி சொல்பவர் தன் கடமையைத் தான் செய்தார் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எனவே
24:23إِنَّ ٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡغَٰفِلَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ لُعِنُواْ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ٢٣
24:23. அல்லாஹ் நிர்ணயித்த நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழும் களங்கமில்லா பெண்கள் மீது அபாண்டமாக பழிசுமத்துவது இனி நடைபெறாது. அவ்வாறு யாராவது பழிசுமத்தினால் (பார்க்க 24:4,9) அவருக்கு கடுமையான தண்டனைக் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளட்டும். இந்த தண்டனை அவருடைய மரணத்திற்குப் பின்பும் தொடரும் என்பதையும் அறிந்துக் கொள்ளட்டும்.
அதாவது நீதிமன்றத்தில் குறைந்தது நான்கு சாட்சிகளையாவது கொண்டுவந்து அவர் சுமத்திய குற்றட்சாட்டை நிரூபிக்க வேண்டும். அந்த சாட்சிகள் மனிதர்களின் சாட்சியாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. குற்றச் சம்பவத்தை நிரூபிக்க
24:24يَوۡمَ تَشۡهَدُ عَلَيۡهِمۡ أَلۡسِنَتُهُمۡ وَأَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ٢٤
24:24. நீதிமன்ற விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களின் வார்த்தைகளாகவும் இருக்கலாம். அல்லது அந்த குற்றவாளியின் கைகள் மற்றும் கால்களின் ரேகைகளாகவும் இருக்கலாம். அவற்றையும் சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும். அந்த சம்பவம் தொடர்புள்ள பொருட்களையும் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.(மேலும் பார்க்க 41:20)
ஒரு பெண் தகாத உறவை வைத்துள்ளதாக புகார் வந்தால், அவள் கருத்தரித்திருந்தால் அந்த சாட்சியே போதுமானதாக இருக்கும் அல்லவா?
24:25يَوۡمَئِذٖ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلۡحَقَّ وَيَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ ٱلۡمُبِينُ٢٥
24:25. ஆக இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் காலக் கட்டத்தில் ஒருபோதும் நீதி தவறாது. அவரவர் செய்து வந்த செயல்களுக்கு ஏற்ப பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும். மேலும் அல்லாஹ்வின் இத்தகைய ஆட்சியமைப்பு தான் தலைசிறந்த உண்மையான ஆட்சி என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
மேலும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். சமுதாய ஒழுக்க மாண்புகள் சிறக்க வேண்டும் என்றால் பெண்கள் மட்டும் ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்றோ ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பதோ கிடையாது. ஆண் பெண் ஆகிய இருபாலருமே ஒழுக்கத்துடன் நடந்துக் கொண்டால் தான் அது ஒழுக்கமுள்ள சமுதாயமாகக் கருதப்படும். எனவே
24:26ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُوْلَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ٢٦
24:26. பொதுவாக துஷ்ட எண்ணங்களைக் கொண்ட துஷ்டர்களும், ஒழுக்கமற்ற செயல்களைச் செய்பவர்களும் நீதிமன்றத்தில் பொய்ச் சாட்கள் மூலம் தப்பித்து விடலாம். அவர்கள் நல்லவர்கள் போல சமுதாயத்தில் நடமாடவும் செய்யலாம். அதே போல பரிசுத்தமான கற்புள்ள ஆண்களும் பெண்களும், சந்தர்ப்ப வசமாகப் பழிச் சொல்லுக்கு ஆளாகி நடத்தைக் கெட்டவர்கள் என்று பொய்ச் சாட்சி மூலம் அநியாயமாகத் தீர்ப்பும் பெறலாம். ஆனால் குர்ஆனிய ஆட்சியமைப்பில் இது சாத்தியமில்லை. பரிசுத்தவான்களை யாரும் வேண்டுமென்றே பழிசுமத்த முடியாது. மேலும் அவ்வாறு நேர்மையுடன் செயல்படுபவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் ஆட்சியமைப்பின் சலுகைகளும் கண்ணியமான முறையில் கிடைக்கும்.
ஒழுக்க மாண்புகளைக் கட்டிக்காக்க மேலும் சில விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
24:27يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ بُيُوتِكُمۡ حَتَّىٰ تَسۡتَأۡنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهۡلِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ٢٧
24:27. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று செயல்படுபவர்களே! நீங்கள் ஒருவர் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் அவ்வீட்டாரிடம் முன்அனுமதி பெற்றுதான் போகவேண்டும். மேலும் அவ்வீட்டாரிடம் அவர்களுடைய நலனை பேணிக் காக்கவே வந்துள்ளதாக (ஸலாம்) சொல்லவேண்டும். இந்த வரையறையைக் கடைப்பிடிக்காமல் எந்த வீட்டிற்குள்ளும் நீங்கள் நுழையக் கூடாது. நீங்கள் நல்லறிவுரைப் பெறுவதற்காக இப்படிப்பட்ட விஷயங்கள் இறைவனிடமிருந்து அருளப்படுகின்றன.
இது முக்கியமான ஒன்றாகும். முன்அறிவிப்பு செய்யாமல் (Prior Appointment) வீட்டிற்கோ அலுவகங்களுக்கோ செல்வதால், அங்கிருப்பவர்களுக்கு பல சங்கடங்கள் ஏற்படலாம். அவர்கள் பல பணிகளை செய்ய திட்டமிட்டு இருப்பார்கள். நீங்கள் திடீரென்று செல்வதால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு உங்களை கவனிக்க வேண்டிவரும். இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
24:28فَإِن لَّمۡ تَجِدُواْ فِيهَآ أَحَدٗا فَلَا تَدۡخُلُوهَا حَتَّىٰ يُؤۡذَنَ لَكُمۡۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرۡجِعُواْ فَٱرۡجِعُواْۖ هُوَ أَزۡكَىٰ لَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ٢٨
24:28. மேலும் அவ்வீட்டில் எவரையும் காணவில்லை என்றால் அவ்வீட்டிற்குள் செல்லாதீர்கள். அவ்வீட்டார் வந்தபின் அவரிடம் முன்அனுமதி பெற்றே அவ்வீட்டிற்குள் பிரவேசியுங்கள். மேலும் அவ்வீட்டார் உங்களை திருப்பி அனுப்பி விட்டால் நீங்கள் திரும்பிவிடுங்கள். இது உங்களுடைய நன்நடத்தையையே காட்டும். ஆக நீங்கள் செய்வது அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.
அதாவது நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் அவ்வீட்டில் இல்லாத நிலையில் அங்குள்ள பெண்கள் உங்களை அவ்வீட்டில் காக்க வைக்க சங்கோசப்பட்டால், அவர்கள் உங்களை திருப்பி அனுப்பிவிடலாம். அதே போல் உங்கள் வீட்டிலுள்ளப் பெண்கள் வெளியே சென்றிருக்கலாம். அந்த சமயத்தில் பெண்கள் யாராவது உங்கள் வீட்டிற்குள் வர நினைத்தால், அதை நீங்களும் நளினமாகச் சொல்லி திருப்பி அனுப்பிவிடலாம்.
24:29لَّيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ مَسۡكُونَةٖ فِيهَا مَتَٰعٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ٢٩
24:29. அதே சமயத்தில் கிடங்கு போன்ற யாருமே வசிக்காத வீடுகளில் நீங்கள் உங்கள் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் அத்தகைய இடத்திற்குள் செல்ல முன்அறிவிப்பு எதுவும் செய்யத் தேவையில்லை. நீங்கள் வெளிப்படையாக செயல்படுவதும் மறைமுகமாக செயல்படுவதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போகாது.
மேலும் வெளியில் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் தெரிந்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் மிக சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அவையே பிற்காலத்தில் மிகவும் பலன் அளிகக் கூடியதாக அமையும்.
24:30قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ٣٠
24:30. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுச் செயல்படும் மூஃமின்களே! நீங்கள் வெளியில் செல்லும்போது, சபலத்தை ஏற்படுத்தும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து செல்லாதீர்கள். மேலும் ஆபாச எண்ணங்களுடன் உங்கள் பார்வையை இங்கும் அங்குமாக அலைய விடாதீர்கள். இவையெல்லாம் மனதில் மறைந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும். அவற்றை கட்டுப்படுத்தி உங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள் . நீங்கள் செய்து வரும் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
24:31وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَاۖ
24:31. அதே போல் பெண்களும் வெளியில் செல்லும் போது, சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆண்களோ பெண்களோ தம்மை அலங்கரித்துக் கொள்வதில் தடை ஒன்றுமில்லை (பார்க்க 7:32). ஆனால் தங்கள் பார்வை அன்னிய ஆடவர்களை வசீயப்படுத்தும் வகையில் இருப்பது கூடாது. எனவே அறைகுறை ஆடையுடனோ அல்லது கவர்ச்சி ஆடைகளை அணிந்தோ வெளியில் திரிவது கூடாது. இதனால் இளைஞர்கள் மனதில் சபலத்தை ஏற்படுத்தும். எனவே கை, கால், முகம் போன்ற சாதாரணமாக வெளியில் தெரியக்கூடியவற்றை காட்டிக் கொள்வதில் தடை ஒன்றுமில்லை.
وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ
ஆனால் இளைஞர்களை கவரக்கூடிய மார்பகங்கள், இடுப்பு போன்றவற்றை, தான் அணியும் சேலையைக் கொண்டு மூடி மறைத்து வெளியில் செல்லுங்கள்.*
وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآئِهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآئِهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ أَخَوَٰتِهِنَّ أَوۡ نِسَآئِهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيۡرِ أُوْلِي ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٰتِ ٱلنِّسَآءِۖ
மேலும் அவர்கள் இல்லத்தில் இருக்கும் போது, தன் கணவர், தந்தை, மாமனார், மாமியார், புதல்வர்கள், கணவனின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர் புதல்விகள், வீட்டிலிருக்கும் பணியாட்கள், வயதான மூதாதைகயர்கள், பெண்களின் மறைவான உறுப்புக்களைப் பற்றி அறியாத சிறுவர் சிறுமியர்கள், ஆகியவர்கள் முன்னிலையில் இயல்பான ஆடைகளுடன் நடமாடுவதில் தவறு ஒன்றுமில்லை. இவர்களைத் தவிர மற்ற அன்னியர்கள் முன்னிலையில், தன் உடல் அழகை வெளிப்படுத்தும் வகையில் இறுக்கமான ஆடைகளுடனோ அல்லது அறைகுறை ஆடைகளுடனோ பழகுவது ஒருபோதும் கூடாது.
وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ٣١
மேலும் தான் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்கள் தெரியும்படியாக கை கால்களை ஆட்டிக்கொண்டு நடக்க வேண்டாம். இதற்கு முன் இத்தகைய விஷயங்களில் தவறு ஏதேனும் நிகழ்ந்து இருந்தால், அதை சரிசெய்து கொள்ளுங்கள். இனி அவ்வாறு செயல்படாதீர்கள். இவையாவும் உங்களுக்கு மிகவும் சாதாரண விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் காலப்போக்கில் அதுவே பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும். மேலும் உங்கள் வாழ்வின் வெற்றி இலக்கை அடைவதில் இவை தடையாக வந்து நிற்கும். எனவே இவற்றை கவனத்தில் கொண்டு முறைப்படி வாழ்வது மிகமிக அவசியம்.
சேலையை அணியாதவர்கள், கழுத்து முதல் பாதங்கள் வரையில் மறைக்கக் கூடிய இறுக்கமில்லாத தளர்ந்த ஆடைகளை அணிந்து செல்லலாம்.
24:32وَأَنكِحُواْ ٱلۡأَيَٰمَىٰ مِنكُمۡ وَٱلصَّٰلِحِينَ مِنۡ عِبَادِكُمۡ وَإِمَآئِكُمۡۚ إِن يَكُونُواْ فُقَرَآءَ يُغۡنِهِمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ٣٢
24:32. மேலும் திருமணம் ஏற்பாடு செய்யும் போது, சில வரையறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களில் ஆணோ பெண்ணோ குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் தகுதி உடையவர்களுக்கே மணமுடித்து கொடுங்கள். அவர்களில் ஏழையாகவோ, விதவையோ விதவனாகவோ இருந்தாலும் சரியே. ஆற்றல் மிக்கவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் காலப்போக்கில் கிடைத்துவிடும்.மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களோ மிக விசாலமாகவும் ஞானத்தின் அடிப்படையிலும் உள்ளன.
ஆணோ பெண்ணோ திருமண வயதை அடைந்து இருந்தாலும், மனப் பக்குவமும் கல்வியும் இருத்தல் அவசியம். ஏனெனில் இது அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனையாகும். ஒருவரிடம் வசதி வாய்ப்பு குறைவாக இருக்கலாம். காலப் போக்கில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் பெற்றுவிடுவார்கள். ஆனால் மனோ ரீதியாக அவர்கள் பக்குவம் அடையவில்லை என்றால் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக் குறியாக ஆகிவிடும்.
24:33وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ
24:33. எனவே விவாகம் செய்துக் கொள்வதற்குரிய வசதி வாய்ப்பை பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அத்தகையவர்கள் முழு அளவில் தகுதி பெறும் வரையில் மனக் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் ஒழுக்கத்தைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.
وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ
மேலும் சமுதாயத்தில் சிக்கித் தவிக்கும் கொத்தடிமைகள் மற்றும் விலை மாதர்கள், தம்மை விடுவித்துக் கொடுக்க அரசுக்கு விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஈட்டுத் தொகை அளித்து அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். மேலும் அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் சுயமாகத் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தகுதியுடையவராய் இருக்கிறார்களா என்பதையும் கவனியுங்கள். அப்படி வசதி இல்லாதவர்களுக்கு தக்க வசதிகளை செய்து தவருவதும் சமூக அமைப்பின் முக்கிய கடமையாகும்.
وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ٣٣
மேலும் இத்தகையவர்கள் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் கொண்டிருந்தால், அவர்களை தடுக்காதீர்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் தவறான வழியில் செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம். அவ்வாறு எவரேனும் அவர்களுக்கு எதிராக நடந்து, அவர்களை கட்டாயத்திற்கு ஆளாக்கினால், இந்த அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும். குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை அளிக்கும்.
இவையாவும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கும் அபலைப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நலத் திட்டங்களாகும்.
24:34وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖ وَمَثَلٗا مِّنَ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۡ وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ٣٤
24:34. இப்படியாக நீங்கள் சரியாக விளங்கிக்கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவான முறையில் விளக்கப் படுகின்றன. இவற்றை உங்களுக்கு முன்சென்ற வரலாற்றின் ஆதாரத்தைக் கொண்டும் பல்வேறு உதாரணங்களின் மூலமும் விளக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுவோருக்கு இவை அறிவுரைகளாக இருக்கும்.
24:35۞ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ
24:35. அல்லாஹ்வின் வல்லமையும் பேராற்றலும் அகிலங்கள் அனைத்திலும் பூமியிலும் பரவி இருப்பது போல், மனிதனின் சிறப்பான வாழ்க்கைக்கு இவ்வேதம் ஒளி விளக்காகத் திகழ்கிறது. (மேலும் பார்க்க 5:15& 42:52)
مَثَلُ نُورِهِۦ كَمِشۡكَوٰةٖ فِيهَا مِصۡبَاحٌۖ ٱلۡمِصۡبَاحُ فِي زُجَاجَةٍۖ
எவ்வாறு ஒரு விளக்கு கண்ணாடி மாடத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, அந்தக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரமாக இருக்கிறதோ, அதே போல் இந்த இறைவழிகாட்டுதல்கள் அடங்கிய இந்த வேதமும் மனித சுய சிந்தனையின் சடங்கு, சம்பிரதாயம், முன்னோர்களின் வழிப்பாடு போன்ற தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, மக்களின் அறியாமை என்ற இருளைப் போக்கி, நேர்வழி காட்டும் ஒளி விளக்காக உள்ளது. (14:1)
ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوۡكَبٞ دُرِّيّٞ يُوقَدُ مِن شَجَرَةٖ مُّبَٰرَكَةٖ زَيۡتُونَةٖ
எவ்வாறு அந்த விளக்கு தொடர்ந்து ஒளி வீசுவதற்கு ஜைத்தூன் எண்ணெயின் துணை நிற்கிறதோ, அது போல இறைவழிகாட்டுதல்கள் எல்லா கால கட்டத்திற்கும் தொடர்ந்து உதவிட, முன் உதாரணங்களும், படிப்பினைகளும், பிரபஞ்சப் படைப்புகளின் செயல்பாடுகளும் மனிதனின் ஒளிமயமாக வாழ்விற்கு ஊன்றுகோலாக இருக்கின்றன.
لَّا شَرۡقِيَّةٖ وَلَا غَرۡبِيَّةٖ يَكَادُ زَيۡتُهَا يُضِيٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٞۚ
இந்த வழிகாட்டுதல்கள் கிழக்கு மேற்கு என்று எந்தப் பக்கமும் சாயாமல் ஒளிவீசக் கூடியதாக உள்ளன.* அந்த வழிகாட்டுதலைக் கடைப்பிடித்தாலும் கடைப்பிடிக்கா விட்டாலும் அது தன் நிலையை மாற்றிக் கொள்ளாது. ஒரு சமுதாயம் இந்த வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்கும் போது, ஒளிக்கு மேல் ஒளி கிடைத்துக் கொண்டே போகும்.
نُّورٌ عَلَىٰ نُورٖۚ يَهۡدِي ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُۚ
மேலும் இறைவழிகாட்டுதலின்படி செயல்பட நாடுவோருக்கே அது ஒளிமயமான வாழ்வின் பக்கம் அழைத்துச் செல்லும்.
وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَٰلَ لِلنَّاسِۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ٣٥
எனவே இந்த உவமைகள் யாவும் உலக மக்கள் தெளிவு பெற்று சிறப்பாக வாழ்வதற்காகவே தரப்படுகின்றன. ஆக யாவற்றையும் அறிந்துக் கொள்ளும் பேராற்றல் உடையவனே அல்லாஹ்.
இந்த வழிகாட்டுதல்கள் ஏழைக்கு ஆதரவாகவோ செல்வந்தர்களுக்கு எதிராகவோ அல்லது செல்வந்தர்களை ஆதரித்து ஏழை எளிய மக்களுக்கு எதிராகவோ இருப்பதில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் வழிகாட்டியாக இருப்பதில்லை. உலக மக்கள் அனைவருக்கும் சரி சமமான அறிவுரைகள் அடங்கிய வேதமாகும்.
24:36فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ٣٦
24:36. எனவே மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு வழிகாட்டியாக விளங்கும் இவ்வேத அறிவுரைகள் ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட வேண்டும். அவற்றை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் உயர்வைப் பற்றியும் கண்ணியமான வாழ்வைப் பற்றியும் வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது. எனவே அதற்குச் சரியான நேரங்கள் காலையும் மாலையுமாகும்.
24:37رِجَالٞ لَّا تُلۡهِيهِمۡ تِجَٰرَةٞ وَلَا بَيۡعٌ عَن ذِكۡرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ يَخَافُونَ يَوۡمٗا تَتَقَلَّبُ فِيهِ ٱلۡقُلُوبُ وَٱلۡأَبۡصَٰرُ٣٧
24:37. மற்ற நேரங்களில் மக்களிடையே வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் போன்ற தொழில் ரீதியான அன்றாட அலுவல்கள் இருக்கும். ஆனால் இவை அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. காரணம் அவர்கள் அந்த அறிவுரையின் படியே தம் தொழிலையும் மேற்கொள்வார்கள். இப்படியாக அல்லாஹ் காட்டிய வழியில் சட்டம் ஒழுங்கை பேணிக் காத்து, சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்து வருவார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்படுவதால் ஏற்படும் வேதனையும் கதிகலங்கிய நிலை ஏற்படும் என்பதைப் பற்றியும் அஞ்சி செயல்படுவார்கள்.
24:38لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ٣٨
24:38. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சமுதாய ஒற்றுமைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உழைப்பது ஒருபோதும் வீண்போகாது. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து மென்மேலும் பலன்கள் கிடைத்து வரும். இப்படியாக அல்லஹ்வின் வழிகாட்டுதலின்படி உழைப்பவர்களுக்கு அளவில்லா வாழ்வாதார வசதிகளும் கிடைத்துவிடுகின்றன.
24:39وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَعۡمَٰلُهُمۡ كَسَرَابِۢ بِقِيعَةٖ يَحۡسَبُهُ ٱلظَّمَۡٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمۡ يَجِدۡهُ شَيۡٔٗا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ٣٩
24:39. இதற்கு மாறாக எந்த சமுதாயம் வானுலக ஒளியாக இருக்கும் இறை வழிகாட்டுதலை ஏற்க மறுத்து, அதற்கு மாற்றமாக செயல்படுமோ, அவர்களுடைய செயல்களின் பலன்கள் திறந்த வெளியில் தென்படும் கானல் நீரைப் போன்று இருக்கும். தாகமுள்ளவன் அந்த கானல் நீரைப் பார்த்து தண்ணீர் என நினைக்கிறான். அதுபோல, தான் செய்து வரும் செயல்கள் யாவும் நன்மையானவை என்றே நம்புகிறான். அவன் அந்த கானல் நீரின் பக்கம் வரும்போது, அங்கு ஒன்றும் இல்லாததைக் காண்கின்றான். அதாவது அவன் செய்து வந்த செயல்களின் எதிர் பார்த்த பலன்கள் ஒருபோதும் கிடைப்பதில்லை. அவனுடைய செயல்களின் விளைவுகள் அல்லாஹ் நிர்ணயித்த விதிமுறைப்படியே ஏற்படுவதைக் காண்பான். மேலும் ஒவ்வொரு செயலின் விளைவுகளை ஏற்படுத்தும் விஷயத்திலும் அல்லாஹ்வின் கணக்கு வழக்கு ஒருபோதும் தவறாது.
24:40أَوۡ كَظُلُمَٰتٖ فِي بَحۡرٖ لُّجِّيّٖ يَغۡشَىٰهُ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ سَحَابٞۚ
24:40. இறைவழிகாட்டுதலை பின்பற்றாத சமூகத்தவர்களின் வாழ்வு இருளில் மூழ்கி சூனியம் ஆகிவிடுகிறது. எவ்வாறு ஒருவர் ஆழ்கடல் இருளில் மூழ்கி தத்தளிக்கிறானோ, அது போல சமுதாய பிரச்சனைகள் பல ஏற்பட்டு அதற்கு தீர்வு காணமுடியாமல் தத்தளித்து வரும். அது மட்டுமின்றி ஒருவரை அந்த கடல் அலைகள் இழுத்துச் சென்று, மூழ்கடித்து, அலைக்கு மேல் அலைகளும் அதன்மேல் மேகங்களும் அவரை இருளில் தத்தளிக்க வைப்பது போல, சமுதாயத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளும், அவற்றை தீர்த்துவைக்க முயன்றால் அந்த தீர்வால் மேலும் பல சிக்கல்களும் ஏற்பட்டு வரும். (பார்க்க 2:17-20)
ظُلُمَٰتُۢ بَعۡضُهَا فَوۡقَ بَعۡضٍ إِذَآ أَخۡرَجَ يَدَهُۥ لَمۡ يَكَدۡ يَرَىٰهَاۗ وَمَن لَّمۡ يَجۡعَلِ ٱللَّهُ لَهُۥ نُورٗا فَمَا لَهُۥ مِن نُّورٍ٤٠
எவ்வாறு இத்தகைய இருளில் சிக்கித் தவிப்பவர் தன் கைகளை வெளியே நீட்ட முடியாதோ அல்லது தன் கையை வெளியே நீட்டினாலும் அதை பார்க்க முடியாதோ, அவ்வாறே சமுதாய சிக்கல்களுக்கு ஒருபோதும் நிலையான தீர்வை காணவே முடியாது. இதுவே அல்லாஹ்வின் பேரொளியாக இருக்கும் இறைவழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழும் சமுதாயங்களின் இழிநிலையாகும்.
ஆனால் இறைவனின் சட்டங்களுக்கு உட்பட்டு வாழும் மற்ற படைப்பினங்களில் இத்தகைய பிரச்சனைகள் எதுவும் இருப்பதில்லை. ஏனெனில் மற்ற படைப்புகள் யாவும் அல்லாஹ் விதித்த விதிமுறைகளின்படி, தம் இயல்பில் அடிப்படையிலேயே வாழ்கின்றன. அதாவது
24:41أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱلطَّيۡرُ صَٰٓفَّٰتٖۖ
24:41. வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற படைப்புகள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன (தஸ்பீஹ்)என்பதை கவனித்துப் பாருங்கள். விண்ணில் பறக்கும் பறவைகள் தம் இறக்கைகளை விரித்து அணி அணியாய் பறந்து செல்வதை நீங்கள் பார்ப்பதில்லையா? அந்தப் படைப்புகள் யாவும் தமக்கு இடப்பட்ட கடமைகளை (தஸ்பீஹ்) செவ்வன நிறைவேற்றி வருகின்றன.
كُلّٞ قَدۡ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسۡبِيحَهُۥۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِمَا يَفۡعَلُونَ٤١
ஏனெனில் அவற்றிற்குத் தம் கடமைகள் (ஸலாத்) என்னவென்பதும் அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் (தஸ்பீஹ்) என்பதும் நன்கு தெரியும். அதுமட்டுமின்றி உலகிலுள்ள எல்லா படைப்புகளின் செயல்பாடுகள் என்னவென்பதும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருப்பதில்லை.
அதாவது உலகில் வாழும் மற்ற உயிரினங்கள் தம் இயல்பின் அடிப்படையில் வாழ்கின்றன. தம் ஆகாராம் என்ன? அவற்றை எப்படி அடைவது? தம் இனப் பெருக்கத்தை எவ்வாறு செய்துக் கொள்வது? தமக்கு யாரால் ஆபத்து வரும்? அந்த ஆபத்திலிருந்து எவ்வாறு தம்மை பாதுகாதுக் கொள்வது? இதுபோன்ற வழிகாட்டுதல்கள் அதனதன் உடல் அமைப்பிலேயே பொருத்தப்பட்டு உள்ளன. இனப் பெருக்கத்தைப் பொறுத்த வரையில் பறவைகள் மற்றும் மீன் இனங்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று தம் குஞ்சுகளை பொரிக்கின்றன. அந்த குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகி தம் சொந்த இடத்திற்கு திரும்பி சென்றுவிடுகின்றன. இவற்றிற்கு அதைப்பற்றி யாரும் கற்றுக் கொடுப்பதில்லை.
ஆனால் மனிதனின் நிலை அவ்வாறில்லை. மனிதனுக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லித் தரவேண்டும். காரணம் மனிதனுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிலிருந்து தான் கிடைக்கின்றன. அவனுக்குள் வைக்கப்படவில்லை. எனவே தான் அவனுடைய வாழ்வும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அவனுக்கு இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல்கள் நபிமார்கள் மூலமாக அளிக்கப்படுகின்றன. அவை இந்த இறைவேதமான குர்ஆனில் அசல் வடிவில் உள்ளன. (விளக்கத்திற்கு நாம் எழுதிய அல்லாஹ்வும் மனிதனும் என்ற நூலை படிக்கவும்)
24:42وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ٤٢
24:42. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் அதிகராத்திற்கு உட்பட்டே செயல்பட்டு வருகின்றன. அதாவது அல்லாஹ் நிர்ணயித்த வழிமுறைகளின் படியே அவை செயல்பட்டு வருகின்றன. எனவே மனிதனின் ஒவ்வொரு செயலும் இறைவன் நிர்ணயித்த விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் மனித பிரசச்னைகளுக்கு தீர்வு காண அவன் இறைவழிகாட்டுதலின் பக்கமே வந்தாகவேண்டும்.
மனித செயல்கள் - ஆக்கப்பூர்வமன செயல்களோ தீய செயல்களோ அவற்றின் விளைவுகள் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. அந்த விளைவுகள் உணரா வண்ணம் படிப்படியாக வளர்ந்து, அவை தோற்றத்திற்கு வரும். உதாரணத்திற்கு மழையை எடுத்துக் கொள்ளுங்கள்.
24:43أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُزۡجِي سَحَابٗا ثُمَّ يُؤَلِّفُ بَيۡنَهُۥ ثُمَّ يَجۡعَلُهُۥ رُكَامٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦ
24:43. மழை எவ்வாறு பொழிகிறது என்பதை நீங்கள் கவனிப்பதில்லையா? அல்லாஹ்வின் நியதிப்படி காற்று மண்டலத்தில் மேகங்கள் மெதுவாக உருவாகி, அவை ஒன்றிணைந்து, ஒன்றன் மேல் ஒன்றாக அடர்த்தியாகி விடுகின்றன. அதன் நடுவே உருவாகும் மழை நீரை நீங்கள் பார்க்கிறீர்கள்.
وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٖ فِيهَا مِنۢ بَرَدٖ فَيُصِيبُ بِهِۦ
அதுமட்டுமின்றி சில சமயங்களில் வானத்தில் மலைகளைப் போல உருவாகும் மேகக் கூட்டங்களின் நடுவே பனிக் கட்டிகள் உருவாகி, ஆலாங்கட்டி மழையாகவும் பொழிகிறது. அல்லாஹ் நிர்ணயித்த நியதியின்படி காற்றின் திசைப் படி அந்த மேகக் கூட்டங்கள் நகர்ந்து சென்று, ஆங்காங்கே மழை பொழிவதையும்,
مَن يَشَآءُ وَيَصۡرِفُهُۥ عَن مَّن يَشَآءُۖ يَكَادُ سَنَا بَرۡقِهِۦ يَذۡهَبُ بِٱلۡأَبۡصَٰرِ٤٣
அதன்பின் அந்த மேகங்கள் கலைந்து போவதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அது மட்டுமின்றி அந்த மேகங்களுக்கிடையே உங்கள் கண்களைப் பறிக்கும் மின்னொளி உருவாவதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
அதாவது காற்றிலுள்ள ஈரப்பதம் உங்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அது மேகமாக உருவாகும் போதுதான் உங்கள் கண்களுக்குத் தென்படுகின்றன. அதன்பின் அவை அடர்த்தியாகி மழை நீராகவும் இடி மின்னலாகவும் உருவாகின்றன. அதுபோல உங்களுடைய நற்செயல்களோ தீய செயல்களோ, அதன் விளைவுகள் முதலில் தோற்றத்திற்கு வருவதில்லை. அவை படிப்படியாக வளர்ந்து மழை நீரைப் போல நற்செயல்களின் பலன்களாகவும், இடி மின்னல்கள் போல தீய செயல்களின் விளைவுகளாகவும் ஏற்படுகின்றன.
24:44يُقَلِّبُ ٱللَّهُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ٤٤
24:44. மேலும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படியே இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. நிச்சயமாக சிந்தனை உள்ள மக்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
அதாவது எவ்வாறு இரவும் பகலும் ஏற்பட்டு வருகின்றதோ, இறைவழிகாட்டுதல்கள் இல்லாத சமுதாயங்களில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். மேலும் அவர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நிலையும் சில நாட்கள் வெளிச்சத்தைத் தரக் கூடியதாகவும் இருக்கும். இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் வாழும்போது அவர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நிலை ஏற்படாது. எனவே மனிதன் இறை வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும்.
உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை, இரவு பகல் மாற்றங்களால் மட்டுமே கிடைக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று நிலையாக இருந்தால், இந்த பூமியில் உயிரினங்கள் வாழ சாத்தியமில்லை.
24:45وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٖ مِّن مَّآءٖۖ فَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ بَطۡنِهِۦ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰ رِجۡلَيۡنِ وَمِنۡهُم مَّن يَمۡشِي عَلَىٰٓ أَرۡبَعٖۚ يَخۡلُقُ ٱللَّهُ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ٤٥
24:45. மேலும் அல்லாஹ்வின் படைப்பு சட்டத்தின் படியே எல்லா உயிரினங்களும் நீரிலிருந்து உருவாயின. அவற்றில் ஊர்வன, இருகால்களால் நடப்பன மற்றும் நாற்கால் பிராணிகள் என பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இவை யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டப் படி உருவானவை. அவற்றை படைத்ததோடு அவை ஒவ்வொன்றும் எவ்வாறு வாழவேண்டும் என்பதையும் நிர்ணயித்து அவற்றை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதும் அல்லாஹ்வே.
24:46لَّقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖۚ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ٤٦
24:46. இவ்வாறாக நீங்கள் வாழும் உலகத்தைப் பற்றியும் அதிலுள்ள படைப்புகளைப் பற்றியும் தெளிவாக அறிந்துக்கொண்டு சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காகவே இறைவழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. இதை ஏற்று செயல்பட முன்வருபவர்களுக்கு அல்லாஹ்வின் நேர்வழி கிடைத்து விடுகிறது.
24:47وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعۡنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ٤٧
24:47. இந்த அளவுக்கு தெளிவான ஆதாரங்களை அருளிய பின்பும், மக்களுள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதை நடைமுறைப்படுத்த இறைத்தூதர் கொண்டு வரும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று நடப்பதாக உதட்டளவில் சொல்லிக் கொண்டு, அவற்றிற்கு மாற்றமாக செயல்படுகிறார்கள். அத்தகையவர்கள் யாவரும் மூஃமின்கள் பட்டியலில் இடம்பெறவே மாட்டார்கள்.
24:48وَإِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ إِذَا فَرِيقٞ مِّنۡهُم مُّعۡرِضُونَ٤٨
24:48. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி அவர்களுடைய சமூக பிரச்சனைகளுக்கு, அமைப்பு ரீதியாகத் தீர்வு காண இறைத்தூதர் அழைப்பு விடுத்தால், அவர்களின் ஒரு பிரிவார் அதில் பங்கெடுப்பதில்லை.
24:49وَإِن يَكُن لَّهُمُ ٱلۡحَقُّ يَأۡتُوٓاْ إِلَيۡهِ مُذۡعِنِينَ٤٩
24:49. ஆனால் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிந்தால், அவர்கள் அதன் பக்கம் விரைந்தோடி வருகிறார்கள்.
அவர்களுடைய செயல்களைப் பார்த்து மூஃமின்கள் மனதில் பல கேள்விகள் எழலாம். அதாவது
24:50أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ٱرۡتَابُوٓاْ أَمۡ يَخَافُونَ أَن يَحِيفَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَرَسُولُهُۥۚ بَلۡ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ٥٠
24:50. அவர்களுடைய உள்ளங்களில் நோய் எதாவது உள்ளதா? அல்லது அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் நடைமுறைச் சட்டங்கள் அவர்களுக்கு எதிராக உள்ளதாக சந்தேகப் படுகிறார்களா? அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என அஞ்சுகிறார்களா? வேறு எதற்காக அவர்கள் இதை எதிர்த்து செயல்பட நினைக்கிறார்கள்? உண்மை என்ன வென்றால் அவர்களுடைய அநியாய அக்கிரமச் செயல்களுக்கு இறை ஆட்சியமைப்பு தடை விதிக்கிறது. எனவே தான் அவர்கள் இதை எதிர்த்து செயல்படுகிறார்கள்.
24:51إِنَّمَا كَانَ قَوۡلَ ٱلۡمُؤۡمِنِينَ إِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ أَن يَقُولُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ٥١
24:51. ஆனால் மூஃமின்களிடையே இத்தகைய மன நிலையும் செயல்பாடுகளும் ஒருபோதும் இருக்காது. சமூகப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அவர்களுக்கு அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை உடனே ஏற்று அதற்கு அடிபணிந்து வருவதாக கூறுவார்கள். இத்தகையவர்களே வெற்றி இலக்கை எளிதில் அடையும் மூஃமின்கள் ஆவர்.
24:52وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخۡشَ ٱللَّهَ وَيَتَّقۡهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ٥٢
24:52. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக\ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படும் சமுதாயமே தம் செயல் திட்டத்தில் வெற்றி இலக்கை எளிதில் அடையும். ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுவதால் ஏற்படும் தீய விளைவுக்ளுக்கு அஞ்சி அதற்கு உட்பட்டே அவர்கள் செயல்படுவார்கள்.
24:53۞وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِنۡ أَمَرۡتَهُمۡ لَيَخۡرُجُنَّۖ قُل لَّا تُقۡسِمُواْۖ طَاعَةٞ مَّعۡرُوفَةٌۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ٥٣
24:53. மேலும், இறை ஆட்சியமைப்பு போருக்கு புறப்படும்படி கட்டளை பிறப்பித்தால், வெறும் வார்த்தை ஜாலத்தில் சத்தியம் செய்து போருக்குப் புறப்படுவதாக கூறுபவர்கள் நயவஞ்சகர்கள் ஆவர். அவர்களின் சத்தியங்கள் எந்த அளவுக்கு உண்மையானது என்பது அந்த கட்டளைப்படி போருக்கு புறப்படுவதைக் கொண்டுதான் தெரியவரும். உங்கள் செயல்பாடுகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போகுமா?
24:54قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡهِ مَا حُمِّلَ وَعَلَيۡكُم مَّا حُمِّلۡتُمۡۖ وَإِن تُطِيعُوهُ تَهۡتَدُواْۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ٥٤
24:54. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படும்படி மக்களுக்கு அறிவித்து விடுங்கள். இறைவழிகாட்டுதலின்படி ஆட்சியமைப்பு சட்டங்களைப் பிறப்பிப்பது ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் மீதுள்ள கடமையாகும். அவற்றைப் பின்பற்றுவது மக்களின் பொறுப்பாகும். அதன்படி நடந்தால் அவர்களுடைய வாழ்வு சிறப்பாக இருக்க எல்லா வழிகளும் பிறக்கும். அதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள் வேதனைகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். எனவே இறைச் சட்டங்களை பிறப்பித்து அவற்றை மக்களிடம் அறிவித்து விடுவதே இறைத்தூதரின் கடமையாகும்.
24:55وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَيَسۡتَخۡلِفَنَّهُمۡ فِي ٱلۡأَرۡضِ كَمَا ٱسۡتَخۡلَفَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَلَيُمَكِّنَنَّ لَهُمۡ دِينَهُمُ ٱلَّذِي ٱرۡتَضَىٰ لَهُمۡ
24:55. இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களில், யார் சிறப்பாக ஆற்றல்மிக்க செயல்களை செய்யும் தகுதியுடையவராக இருக்கிறார்களோ, அத்தகையவர்களிடமே ஆட்சி பொறுப்பு ஒப்படைக்கப்படும். இதுவே அல்லாஹ்வின் நிலையான வாக்குறுதியாகும். (பார்க்க 33:27&39:74) உங்களுக்கு முன்சென்ற சமூகத்தவர்க்கும் இதே போன்று, தகுதி உடையவர்களிடமே ஆட்சி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது ( பார்க்க 21:105 & 28:6). அவ்வாறு பொறுப்பெடுத்துக் கொண்டவர்கள், அல்லாஹ்வின் மார்க்க அறிவுரைகளின் படியே ஆட்சி செய்வார்கள். அதாவது அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் இஸ்லாம் என்பதே இறைவன் பொருந்திக் கொண்ட மார்க்கமாகும். (பார்க்க 3:19 & 85)
وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعۡدِ خَوۡفِهِمۡ أَمۡنٗاۚ يَعۡبُدُونَنِي لَا يُشۡرِكُونَ بِي شَيۡٔٗاۚ وَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ٥٥
அதன் பலனாக மக்களிடையே நிலவி வரும் அச்சம் நீங்கி, அவர்களுக்கு மனஅமைதி ஏற்படும். இதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அளிக்கப்படுகின்ற வாக்குறுதியாகும். மேலும் அந்த ஆட்சியாளர்கள் இறைச் சட்டங்களுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையும் கடைப்பிடிக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து செயல்படுவார்கள். இதையும் மீறி எவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாறு செய்வார்களோ, அவர்கள் பாவிகளின் பட்டியலில் இடம்பெறுவர்.
24:56وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ٥٦
24:56. மேலும் அவர்கள் தீமையை தடுத்து ஒழுக்க மாண்புகளை கட்டிக் காக்கும் “சமூக அமைப்பை” (பார்க்க 29:45) நிலைநிறுத்துவார்கள் (பார்க்க 23:1). மேலும் தம் வசமுள்ள உபரியான செல்வங்களை அதற்கு வழங்குவார்கள். மேலும் ஆட்சி அமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுவார்கள். அத்தகையவர்களுக்கு இறைவனின் ஆட்சியமைப்பின் ஆதரவு முழுஅளவில் கிடைத்து வரும்.
24:57لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۚ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَلَبِئۡسَ ٱلۡمَصِيرُ٥٧
24:57. அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்க உருவாக்கப்படும் இறைவனின் ஆட்சியமைப்புத் திட்டங்கள் நிறைவேறாதவாறு, இறை நிராகரிப்பவர்கள் இடையூறுகளை விளைவிப்பார்கள் என்று நீர் எண்ண வேண்டாம். அதாவது அவர்களால் அப்படி எதுவும் செய்ய முடியாது. இறுதியாக அவர்கள்தாம் தோல்வி அடைந்து நரக வேதனைக்கு ஆளாவார்கள். அவ்வாறு அவர்கள் சென்றடையும் இடம் மிகவும் கெட்டதாகும்.
24:58يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِيَسۡتَٔۡذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ وَٱلَّذِينَ لَمۡ يَبۡلُغُواْ ٱلۡحُلُمَ مِنكُمۡ ثَلَٰثَ مَرَّٰتٖۚ مِّن قَبۡلِ صَلَوٰةِ ٱلۡفَجۡرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعۡدِ صَلَوٰةِ ٱلۡعِشَآءِۚ ثَلَٰثُ عَوۡرَٰتٖ لَّكُمۡۚ
24:58. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் உங்கள் இல்லங்களில் பொதுவாக சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் உங்களை சந்திக்க வருபவர்கள் மூன்று சமயங்களில் முன்அனுமதி பெற்றே வரவேண்டும். அதாவது விடியற்காலைத் தொழுகைக்கு முன்பும், மத்தியம் வேளையில் உணவுக்குப் பின் மேலாடைகளைக் களைந்து ஓய்வெடுக்கும் நேரங்களிலும், இஷா தொழுகைக்குப் பின்பும் ஆகிய வேளைகளில் முன்அனுமதி பெற்றே வரும்படி சொல்லுங்கள். காரணம் இந்த நேரங்கள் யாவும் தனிமையில் இருக்கும் நேரங்களாகும்.
لَيۡسَ عَلَيۡكُمۡ وَلَا عَلَيۡهِمۡ جُنَاحُۢ بَعۡدَهُنَّۚ طَوَّٰفُونَ عَلَيۡكُم بَعۡضُكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ٥٨
இதைத் தவிர மற்ற நேரங்களில் அலுவலக மற்றும் அவசிய விஷயங்களைக் கவனிக்க உங்களை சந்திக்க முன்அனுமதியின்றி அவர்கள் வரலாம். அவர்கள் உங்களிடம் அடிக்கடி வரவேண்டிய நிலையில் இருப்பதால் இந்த வரையறைகள் தரப்படுகின்றன. இவ்வாறே நீங்கள் தெளிவாக புரிந்துக் கொண்டு சிறப்பாக செயல்படவேண்டும் என்பதற்காக சின்ன சின்ன விஷயங்களையும் விவரமாக எடுத்துரைக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையாகும் என்பது இதிலிருந்து புரியவில்லையா?
24:59وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَٔۡذِنُواْ كَمَا ٱسۡتَٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ٥٩
24:59. சிறுவர் சிறுமியர் பருவம் அடைந்துவிட்டால், பெரியவர்கள் முன்அனுமதிப் பெற்று வருவது போலவே இவர்களும் அனுமதி பெற்றே மேற்சொன்ன நேரங்களில் உங்களிடம் வரவேண்டும். இவ்வாறே நீங்கள் தெளிவாகும் பொருட்டு ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையை கொண்டவை ஆகும்.
24:60وَٱلۡقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا يَرۡجُونَ نِكَاحٗا فَلَيۡسَ عَلَيۡهِنَّ جُنَاحٌ أَن يَضَعۡنَ ثِيَابَهُنَّ غَيۡرَ مُتَبَرِّجَٰتِۢ بِزِينَةٖۖ وَأَن يَسۡتَعۡفِفۡنَ خَيۡرٞ لَّهُنَّۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ٦٠
24:60. உங்களிலுள்ள வயதான மூதாட்டிகள் தம் வயதான காலத்தில், இளம் பெண்கள் மேலாடைகளை அணிந்து கொள்வது போல் இவர்களும் அணிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும் அவர்களும் தம் மேலாடைகளை அணிந்து ஒழுக்கத்தை பேணிக் கொள்வது மிகவும் நல்லதே ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வின் கேட்கும் வல்லமையும் அறிந்துக் கொள்ளும் வல்லமையும் அளவற்றவை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்த வரையறைகள் யாவும் வெப்பமான பிரதேசங்களில் வாழ்பவர்களுக்குப் பொருந்தும். காரணம் கோடைக் காலங்களில் ஆடை அணிவது சிரமமாக இருக்கும். மற்றபடி குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் இயல்பாகவே ஆடைகளை அணிய வேண்டி இருக்கும். மேலும் அன்னியர்களின் வீட்டிற்குச் செல்லும் போது, அவ்வீட்டாரின் அனுமதி பெற்றபின்பே வீட்டிற்குள் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. (பார்க்க 24:27).
இதனால் உற்றார் உறவினர்களும் அன்னியர்கள் ஆகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. உறவுமுறை என்பது வேறு பண்பாடு என்பது வேறு விஷயமாகும். ஒழுக்கத்தை பேணிக் காக்கவே அந்த அறிவுரைகள் தரப்பட்டன. ஏனெனில் நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் உணவருந்தும் விஷயத்தில் நீங்கள் சங்கோசப்பட மாட்டீர்கள். ஆனால் அன்னியர்கள் வீட்டிற்குச் செல்லும்போது அவ்வாறு செய்யமாட்டீர்கள்.
24:61لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞ وَلَا عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَن تَأۡكُلُواْ مِنۢ بُيُوتِكُمۡ أَوۡ بُيُوتِ ءَابَآئِكُمۡ أَوۡ بُيُوتِ أُمَّهَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ إِخۡوَٰنِكُمۡ أَوۡ بُيُوتِ أَخَوَٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَعۡمَٰمِكُمۡ أَوۡ بُيُوتِ عَمَّٰتِكُمۡ أَوۡ بُيُوتِ أَخۡوَٰلِكُمۡ أَوۡ بُيُوتِ خَٰلَٰتِكُمۡ أَوۡ مَا مَلَكۡتُم مَّفَاتِحَهُۥٓ أَوۡ صَدِيقِكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَأۡكُلُواْ جَمِيعًا أَوۡ أَشۡتَاتٗاۚ
24:61. உணவு அருந்துவதற்காக அனைவரும் சமப் பந்தியில் அமரும்போது, உங்களுடன் குருடர்கள், முடவர்கள், நோயாளிகள் ஆகியோர் சேர்ந்து உணவு அருந்துவதில் குற்றம் ஏதுமில்லை. அதே போல் உங்கள் சொந்த வீடுகளிலோ உங்கள் தாய் தந்தையர் வீடுகளிலோ உங்கள் சகோதாரர், சகோதரி, அத்தை, சித்தப்பா, சின்னம்மா, மாமன், அல்லது உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் வீடுகளுக்கோ செல்ல நேர்ந்து, அவர்களுடன் உணவருந்த நேர்ந்தால், தனித் தனியாகவோ அல்லது அவர்களுடன் சேர்ந்தோ உணவருந்துவதில் தவறு ஒன்றுமில்லை.
فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ٦١
ஆனால் நீங்கள் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்குள்ளவர்களுக்கு பிரச்சனையோ பாதிப்போ ஏற்படும் படியான எந்த செயலையும் செய்யக் கூடாது. மாறாக நல்ல பரஸ்பர உறவு நாடி அங்குள்ளவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே செல்ல வேண்டும். மேலும் அங்குள்ளவர்களில் குறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நீக்க தம்மாலான உதவி செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நன்றாக அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இவை அருளப்படுகின்றன.
இப்படியாக உறவினர்கள் மற்று நண்பர்களிடம் நீங்கள் நடக்கவேண்டிய முறையைப் பற்றி அறிந்துகொண்ட பின் பொது வாழ்வைப் பற்றி மேலும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
24:62إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَإِذَا كَانُواْ مَعَهُۥ عَلَىٰٓ أَمۡرٖ جَامِعٖ لَّمۡ يَذۡهَبُواْ حَتَّىٰ يَسۡتَٔۡذِنُوهُۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَٔۡذِنُونَكَ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ
24:62. இறைவழிகாட்டுதலையும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று நடக்கும் மூஃமின்கள், பொது விஷயங்களைப் பற்றி கலந்து ஆலோசிக்க தலைமைப் வகிப்பவர் சபையைக் கூட்டும்போது, அந்த ஆலோசனைக் கூட்டம் முடியும் வரையில் அங்கேயே இருந்து முழு விஷயங்களையும் அறிந்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன் ஆட்சியமைப்பு சட்டங்களையும் மனதார ஏற்றுக் கொண்டதாக பொருள்படும்.
فَإِذَا ٱسۡتَٔۡذَنُوكَ لِبَعۡضِ شَأۡنِهِمۡ فَأۡذَن لِّمَن شِئۡتَ مِنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمُ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ٦٢
அதையும் மீறி சில அவசர தேவைக்காக தலைமைத் தாங்கியிருக்கும் நபியிடம் யாராவது அனுமதி கேட்டால் அவர்களின் நிலைமைக்கு ஏற்றவாறு அவர் அனுமதி கொடுக்கலாம். இவ்வாறு அவர் சபையை விட்டு செல்வதால் அவருடைய பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பை கருதியே கருணையோடு அரவணைத்துக் கொள்கிறது.
24:63لَّا تَجۡعَلُواْ دُعَآءَ ٱلرَّسُولِ بَيۡنَكُمۡ كَدُعَآءِ بَعۡضِكُم بَعۡضٗاۚ قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ مِنكُمۡ لِوَاذٗاۚ
24:63. மேலும் ஒரு விஷயத்தை முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள். இந்த சபைக் கூட்டம் என்பது நீங்கள் ஒருவரையொருவர் அழைத்து பேசிக்கொள்ளும் சாதராண கூட்டம் போல எண்ணிக் கொள்ளாதீர்கள். அங்கு நாட்டின் பொது விஷயங்களைப் பற்றி கலந்து ஆலோசித்து முக்கியமான முடிவுகளை எடுக்க அழைக்கப்படும் அழைப்பே ஆகும். (மேலும் பார்க்க 42:38 & 62:9).
فَلۡيَحۡذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنۡ أَمۡرِهِۦٓ أَن تُصِيبَهُمۡ فِتۡنَةٌ أَوۡ يُصِيبَهُمۡ عَذَابٌ أَلِيمٌ٦٣
எனவே எவர் ஒருவர் அந்த சபையிலிருந்து மறைமுகமாக நழுவிச் சென்று விடுகிறாரோ, அவரைப் பற்றி இந்த சபைக்கு தெரியாமல் போகாது. மேலும் அவருடைய போக்கு என்னவென்பதும் தெரிந்துவிடும். ஆகவே அவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள். அல்லது அவர் முனாஃபிக்கு என்று நிரூபணமானால் பல வேதனைகளுக்கும் ஆளாவார். இதற்கு அஞ்சி நடந்துக் கொள்ளட்டும். அவ்வாறு சபையை விட்டு இடையில் வெளியேறி விட்டால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திட்டங்கள் நிறைவேறாமல் போகுமா? அல்லது அதனால் ஏற்படும் பாதிப்புகள் அல்லாஹ்வுக்கா?
24:64أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قَدۡ يَعۡلَمُ مَآ أَنتُمۡ عَلَيۡهِ وَيَوۡمَ يُرۡجَعُونَ إِلَيۡهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ٦٤
24:64. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே செயல்பட்டு வருகின்றன என்பதை அவர்கள் அறிந்துக் கொள்ளட்டும். உங்களில் ஒவ்வொருவரும் எந்த மன நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் அறியக் கூடியவன் தான் அல்லாஹ். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் நிர்ணயித்த இலக்கை நோக்கியே செல்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும். அவர்களுடைய செயல்களின் விளைவுகள் தோற்றத்திற்கு வரும்போது, அவர்களுக்கு உண்மை என்னவென்பது புரிந்துவிடும். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் என்பதை அப்போது அவர்கள் அறிந்து கொள்வார்கள்.