۞بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
4:0அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப் படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன்.( 6:162)
இந்த அத்தியாயம் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைப்பை ஆதரிப் பவர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடந்த பத்ரு களத்திற்குப் பின் அருளப்பட்டது. எனவே இதிலுள்ள சட்டங்கள் போர்க் கால அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டவை ஆகும்.(Laws proclaimed under Emergency period)
4:1يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ
4:1. மனிதர்களே! உங்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் வகுத்துத் தந்துள்ள வழிகாட்டுதல்களை மனதார ஏற்று அதன் படி செயலாற்றுங்கள். இறைவனின் செயல்திட்டத்தின் படி உங்கள் அனைவரின் படைப்பும் உயிர் அணு (Life Cell) என்ற ஓரே அடிப்படையில் தான் துவங்கியது. (பார்க்க 6:98 & 39:6). பின்பு அந்த உயிர் அணுக்களுள் ஆண் பெண் (Spermatozoon & Ovum) என இரண்டாகப் பிரிந்தன.பின்பு ஆண் பெண் சேர்க்கையின் மூலம் உலகம் முழுவதும் மனித இனம் பெருகி விட்டது.
وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا١
மனித தேவைகள் அனைத்தும் நிறைவேற அல்லாஹ் ஏற்படுத்திய பரிபாலன ஏற்பாட்டைக் கடைப்பிடித்து வாருங்கள். (பார்க்க 14:32-33) உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்தே இருக்கிறீர்கள். ஏக இறைவனாகிய அல்லாஹ் நிர்ணயித்துள்ள வாழ்வாதார பங்கீட்டு முறையின் வழிகாட்டுதலை ஏற்று செயலாற்றுங்கள். ஆரம்ப கட்டமாக உங்களுள் இருக்கும் இரத்த பந்த உறவினர்களை ஆதரித்து வாருங்கள். பின் அனைத்து தரப்பு மக்களின் பரிபாலனத்திற்கும் ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு செய்வீர்களானால், அல்லாஹ்வின் நியதிப்படி உங்களுக்கு நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும்
அதாவது மக்களின் அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றிற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இறைவனின் படைப்பைப் பற்றி கவனத்தில் கொண்டால், தாம் பெற்ற குழந்தைக்கும் அநாதை களுக்கும் இடையே ஒரு பேதமும் இருக்க வாய்ப்பில்லை. எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்த்து வருகிறீர்களோ, அவ்வாறே அநாதைகளின் உரிமைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
4:2وَءَاتُواْ ٱلۡيَتَٰمَىٰٓ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَتَبَدَّلُواْ ٱلۡخَبِيثَ بِٱلطَّيِّبِۖ وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَهُمۡ إِلَىٰٓ أَمۡوَٰلِكُمۡۚ إِنَّهُۥ كَانَ حُوبٗا كَبِيرٗا ٢
4:2. அநாதைகளின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வகிப்பவர்கள், மிகவும் நியாயமான முறையில் செயல்பட வேண்டும். உங்களுக்குச் சொந்தமான உதவாத பொருட்களை அவர்களுடைய பொருட்களோடு சேர்த்து, கணக்கிட்டு தவறான முறையில் அவர்களுடைய செல்வங்களை அபகரிக்கக் கூடாது. எனவே அவர்களுடைய பொருட்களை தனியாக வைத்து அவர்கள் வாலிப வயதை அடையும் வரை (பார்க்க 4:6) பாதுகாத்து வர வேண்டும். அவர்களுடைய பொருட்களை அநியாயமாக அபகரிப்பது பெரும் குற்றமாகும். அதாவது இதற்கு மன்னிப்பே கிடையாது.
சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அநாதைகளைப் பாதுகாப்பதில் அவர்களுடைய சொத்துக்களை பாதுகாத்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. அதையும் மீறி சில பிரச்சினைகள் இருக்கும். உதாரணமாக போர், கலவரம் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நாட்டை துறந்து அகதிகளாக வந்த பெண்கள், (பார்க்க 60:10) கணவனை இழந்த பெண்கள் (பார்க்க 4:127) என சமுதாயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இருக்க நேரிடும்.
4:3وَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تُقۡسِطُواْ فِي ٱلۡيَتَٰمَىٰ فَٱنكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۖ
4:3. அப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டங்களில் ஆதரவற்ற பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் மாற்று ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், (Emergent Situation) ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும். அதாவது அப்படிப்பட்ட காலக் கட்டத்தில் இஸ்லாமிய ஆட்சியமைப்பு அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க ஒன்றுக்கு மேல் இரண்டு, மூன்று அல்லது நான்கு பெண்கள் வரை தமக்குப் பிடித்தமானவர்களை மணமுடித்துக்கொள்ள அனுமதி அளிக்கும்.
فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تَعۡدِلُواْ فَوَٰحِدَةً أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَلَّا تَعُولُواْ٣
அப்படி ஆட்சியமைப்பு இல்லாத சூழ்நிலையில் தனிப்பட்ட முறையிலும் அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க இவ்வாறு முடிவு எடுக்கலாம். இவ்வாறு மணமுடித்துக் கொண்டு அவர்களிடையே சரி சமமான முறையில் நியாயமாக வாழ முடியாது என்ற பயமுள்ளவர்கள், ஒரு மனைவி என்ற நிலையான சட்டப் படி போதுமாக்கிக் கொள்ளட்டும். (பார்க்க 4:129) அல்லது ஏற்கனவே அவர்களிடம் இருக்கும் பணிவிடைப் பெண்களையே மணமுடித்துக் கொள்ளட்டும். இதுவே சமுதாயத்தில் அநியாயம் நடைபெறாமல் பாதுகாப்பாக வாழ சிறந்த வழிமுறையாகும்.
நினைவில் கொள்ளுங்கள். மனைவியர்களிடையே பொருளாதார ரீதியாக சரிசமமாக நடந்துக் கொள்ள முடியுமே அன்றி, உளப்பூர்வமாக நீதமான முறையில் ஒருபோதும் நடக்க முடியாது என்று இறைவனே ஆணித்தரமாகச் சொல்லி விட்டான் (பார்க்க 4:129). இருப்பினும் போர், கலவரம் போன்ற காலங்களில் ஆதரவற்றப் பெண்களின் பாதுகாப்புக் கருதியே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துக் கொள்ள இறைச் சட்டத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் சுமுகமான சூழ்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது முறையாகாது.
மேலும் திருக்குர்ஆன் அருளப்படுதற்கு முன் அரபு நாட்டில் அடிமைப் பெண்களை விலைக்கு வாங்கி பணிவிடைக்காக வைத்துக் கொள்வது பழக்கமாக இருந்து வந்தது. அவர்களை மணமுடித்து மனைவி என்ற அந்தஸ்து அளித்து அடிமைத்தனத்திற்கு திருக்குர்ஆன் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.
4:4وَءَاتُواْ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحۡلَةٗۚ فَإِن طِبۡنَ لَكُمۡ عَن شَيۡءٖ مِّنۡهُ نَفۡسٗا فَكُلُوهُ هَنِيٓٔٗا مَّرِيٓٔٗا٤
4:4 இவ்வாறு மணந்துக் கொள்ளும் மனைவிக்கு, ‘மஹர்’ எனும் குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய ஏற்பாடுகளை தன் தகுதிக்கு ஏற்றவாறு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த மஹர் என்னும் அன்பளிப்புப் பொருட்கள் திரும்பப் பெறும் நோக்கத்துடன் இருக்கக் கூடாது. ஏனெனில் அவை அன்புடன் அளிக்கப்படுவதாகும். அதே சமயத்தில் அவர்களே மனமுவந்து கொடுத்தால், அதை நீங்கள் வாங்கிக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை.
நினைவில் கொள்ளுங்கள். சொத்து செல்வங்கள் யாவும் அல்லாஹ் அருளியுள்ள முக்கியமான வாழ்வாதாரங்களாகும். ஒரு சமுதாயம் தன் சொந்தக் காலில் நின்று செயல்பட, இந்தச் செல்வங்கள் துணை நிற்கின்றன. எனவே தக்க சமயத்தில் பயன்படுத்த அவற்றை பாதுகாப்பது மிகவும்
4:5وَلَا تُؤۡتُواْ ٱلسُّفَهَآءَ أَمۡوَٰلَكُمُ ٱلَّتِي جَعَلَ ٱللَّهُ لَكُمۡ قِيَٰمٗا وَٱرۡزُقُوهُمۡ فِيهَا وَٱكۡسُوهُمۡ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا٥
4:5. சொத்து செல்வங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஞானம் இல்லாத சிறுவர்களிடம் (Minors) இருப்பது சரியல்ல. எனவே அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பாளர் (Guardians) அவசியமாகிறது. எனினும் அந்த அநாதைகளின் அத்தியாவசியத் தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் ஏற்பாடுகளை செய்து தருவது முக்கிய கடமையாகும். எனவே அவர்களுடன் அழகிய முறையில் கனிவாகப் பேசி அவர்களுக்கு உலகக் கல்வி மற்றும் ஒழுக்க மாண்புகளை கற்பித்து அவர்களை நன்றாக பழக்குங்கள்.
4:6وَٱبۡتَلُواْ ٱلۡيَتَٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُواْ ٱلنِّكَاحَ فَإِنۡ ءَانَسۡتُم مِّنۡهُمۡ رُشۡدٗا فَٱدۡفَعُوٓاْ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَأۡكُلُوهَآ إِسۡرَافٗا وَبِدَارًا أَن يَكۡبَرُواْۚ
4:6. அது மட்டுமின்றி அநாதைகளின் அறிவாற்றலும் சயல்திறனும் எந்த அளவிற்கு வளர்ந்து வருகின்றன என்பதையும் கண்காணியுங்கள். அவர்கள் திருமண வயதை அடையும் வரை அவர்களை வளர்த்து வாருங்கள். (பார்க்க 6:153,17:34&40:67) மேலும் அவர்கள் தங்கள் சொத்துக்களை பராமரிக்கும் அளவிற்கு மனப் பக்குவம் அடைந்துள்ளதாக நீங்கள் கருதினால், அவற்றை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் வாலிப வயதை (Major) அடைந்த பின் அவர்களுடைய சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டுமே என்ற எண்ணத்துடன், செலவு செய்ததாக அவசர அவசரமாக பொய்க் கணக்கு காட்டி அதை அபகரிக்க எண்ணாதீர்கள்.
وَمَن كَانَ غَنِيّٗا فَلۡيَسۡتَعۡفِفۡۖ وَمَن كَانَ فَقِيرٗا فَلۡيَأۡكُلۡ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِذَا دَفَعۡتُمۡ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡ فَأَشۡهِدُواْ عَلَيۡهِمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا٦
மேலும் அநாதைச் சொத்துக்களைப் பாதுகாக்க பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் செல்வந்தர்களாக இருந்தால், அவற்றின் பராமரிப்பு செலவுகளை விட்டுக் கொடுக்கட்டும்.அவர் வசதியற்றவராக இருந்தால், அவற்றின் பராமரிப்பு செலவுகளை நியாயமான முறையில் பெற்றுக் கொள்ளட்டும். மேலும் அச்சொத் துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, சாட்சிகள் இருவரை ஏற்படுத்தி அவர்கள் முன்னிலையில் ஒப்படையுங்கள். ஆக கணக்கெடுப்பதில் சகல வல்லமையுடைய அல்லாஹ்வின் முன்னிலையில் ஒப்படைப்பதாக எண்ணி அவற்றை நல்ல முறையில் ஒப்படையுங்கள்.
4:7لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ مِمَّا قَلَّ مِنۡهُ أَوۡ كَثُرَۚ نَصِيبٗا مَّفۡرُوضٗا٧
4:7. தாய் தந்தையரோ நெருங்கிய உறவினர்களோ, விட்டுச் சென்ற சொத்துக்களில் ஆண்களுக்குப் பங்குண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பங்குண்டு. விட்டுச்சென்ற சொத்து சிறியதோ பெரியதோ, அவரவர் பங்கை பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. பாகப் பிரிவினையில் ஆண்களுக்கு மட்டும்தான் பங்கு என்பதல்ல. பெண்களும் அதற்கு உரிமை பெற்றவர்களே. (பார்க்க 4:32) இது இறைவனால் வரையறுக்கப் பட்ட சட்டமாகும்.
4:8وَإِذَا حَضَرَ ٱلۡقِسۡمَةَ أُوْلُواْ ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينُ فَٱرۡزُقُوهُم مِّنۡهُ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا٨
4:8. பாகப் பிரிவினை செய்யும் போது, சொத்திற்குப் பாத்தியப்படாத உறவினர்களோ (அல்லது) அநாதைகளோ இருந்தால் அவர்களையும் கவனத்தில் கொண்டு அச்சொத்திலிருந்து முறைப்படி வழங்குங்கள். இந்தப் பாகப்பிரிவினை முறைப் படி செய்யப்படுவதால் அவர்களைப் பற்றியும் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர்களிடம் கனிவான முறையில் எடுத்துரையுங்கள்.
வாரிசுதாரர்கள் கடின சித்தமுள்ளவர்களாக இருந்தால், சொத்திற்குப் பாத்தியப்படாத ஏழை உறவினர்களுக்கு வஸியத்து செய்து தவருவது அந்த செல்வந்தர் மீதுள்ள கடமையாகும். (பார்க்க 2:180)
4:9وَلۡيَخۡشَ ٱلَّذِينَ لَوۡ تَرَكُواْ مِنۡ خَلۡفِهِمۡ ذُرِّيَّةٗ ضِعَٰفًا خَافُواْ عَلَيۡهِمۡ فَلۡيَتَّقُواْ ٱللَّهَ وَلۡيَقُولُواْ قَوۡلٗا سَدِيدًا٩
4:9. தம் மரணத்திற்குப் பின் வரும் வாரிசுதாரர்கள் மிகவும் மனோபலம் குன்றிய நிலையில் இருப்பதாக நீங்கள் அஞ்சினால், அவர்களுக்கு ஒருபோதும் அநீதி நடக்காதவாறு ஏற்பாடு செய்யுங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடந்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வாரிசுதாரர்களின் சொத்துப் பராமரிப்பு விஷயமாக பொறுப்பாளர்களிடம் தெளிவான முறையில் யோசனை கூற வேண்டும்.
4:10إِنَّ ٱلَّذِينَ يَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلۡيَتَٰمَىٰ ظُلۡمًا إِنَّمَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ نَارٗاۖ وَسَيَصۡلَوۡنَ سَعِيرٗا١٠
4:10. நினைவில் கொள்ளுங்கள். இப்படியாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தம் வயிறுகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளட்டும். சொத்துக் குவிப்பின் பேராசையும் வெறியும் அவர்களுக்கு நிம்மதியற்ற வேதனை மிக்க வாழ்வையே தேடித் தரும்.
4:11. இதன்பின் பாகப்பிரிவினைச் சட்டம் பின்வருமாறு வருகிறது.
يُوصِيكُمُ ٱللَّهُ فِيٓ أَوۡلَٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ
1. இறந்தவரின் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கு, பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற விகிதாசாரப்படி பிரிக்கப்படும்.
فَإِن كُنَّ نِسَآءٗ فَوۡقَ ٱثۡنَتَيۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَۖ
2. பெண்கள் மட்டும் இரண்டோ அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கிடைக்கும். ஒரு பெண் மட்டும் இருந்தால் அச்சொத்தில் பாதி பாகம் கிடைக்கும். மீதமுள்ளது நெருங்கிய உறவினர்களுக்குச் சேரும்.
وَإِن كَانَتۡ وَٰحِدَةٗ فَلَهَا ٱلنِّصۡفُۚ
3. இறந்தவருக்கு ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுப்பு சொத்தில் சரி பாதி கிடைக்கும்.
وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٞۚ
4. இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்து தாய் தந்தையர் உயிருடன் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்.
மீதமுள்ள நான்கு பங்குகள் பிள்ளைகளுக்கு சேரும்.
فَإِن لَّمۡ يَكُن لَّهُۥ وَلَدٞ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ
4. இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்தால், தாய் தந்தையர் அச்சொத்திற்கு வாரிசுதாரர்கள் ஆவார்கள். அதில் தாய்க்கு மூன்றில் ஒரு பங்கும் தந்தைக்கு மூன்றில் இரண்டு பங்கும் சேரும்.
فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ
5. இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்து, சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு சேரும். அதாவது சொத்தை ஆறு பங்குகளாகப் பிரித்து ஒரு பங்கு தாய்க்கு போக, மீதமான ஐந்து பங்கில் ஒரு பங்கு சகோதரர்களுக்கும் நான்கு பங்கும் தந்தைக்கும் சேரும்.
مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِي بِهَآ أَوۡ دَيۡنٍۗ
நினைவில் கொள்ளுங்கள். இந்த பாகப் பிரிவினை இறந்தவரின் மீதுள்ள கடன்களை அடைத்த பின்புதான் செய்யப்படும். அவருக்குக் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, அந்தச் சொத்திலிருந்து அதை முதலில் ஒதுக்க வேண்டும். அதன்பின் அவர் மரண சாஸனத்தில் உள்ள சொத்துக்கள் போக, மீதமுள்ள சொத்திலிருந்து தான் பாகப் பிரிவினை செய்ய வேண்டும்.
4:12ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ لَا تَدۡرُونَ أَيُّهُمۡ أَقۡرَبُ لَكُمۡ نَفۡعٗاۚ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا١١
ஒரு வேளை அவர் உயில் என்ற மரண சாஸனம் எழுதவில்லை என்றால் மேற்சொன்ன முறைப்படி பாகப்பிரிவினை செய்யுங்கள். ஆக உங்கள் பெற்றோர், பிள்ளைகள் ஆகிய இவர்களில் நன்மை செய்வதில் யார் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். இதனால் தான் இந்த பாகப் பிரிவினை செய்யும் முறை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிர்ணயிக்கப் படுகிறது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்வின் இந்தச் சட்ட விதிமுறைகள் கல்வி ஞானத்தின் அடிப்படையில் செய்யப்பட்டவையாகும்.
4:12. இப்போது திருமண பந்தங்களின் மூலமாக கிடைக்கும் சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றியது.
۞وَلَكُمۡ نِصۡفُ مَا تَرَكَ أَزۡوَٰجُكُمۡ إِن لَّمۡ يَكُن لَّهُنَّ وَلَدٞۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٞ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡنَۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِينَ بِهَآ أَوۡ دَيۡنٖۚ
(1) உங்கள் மனைவி விட்டுச் சென்ற சொத்துக்களில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருக்கு சரி பாதி பங்குண்டு. பிள்ளைகள் இருந்தால் அதில் நான்கில் ஒரு பங்கு சேரும். அதுவும் அவர் பெயரில் இருக்கும் கடன்கள் மற்றும் மரண சாஸனத்தை நிறைவேற்றிய பின் மீதமுள்ள சொத்துலிருந்து பிரித்துக் கொடுக்க வேண்டும்.
وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡتُمۡ إِن لَّمۡ يَكُن لَّكُمۡ وَلَدٞۚ فَإِن كَانَ لَكُمۡ وَلَدٞ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكۡتُمۚ مِّنۢ بَعۡدِ وَصِيَّةٖ تُوصُونَ بِهَآ أَوۡ دَيۡنٖۗ
(2) கணவர் விட்டுச் சென்ற சொத்துக்களில் மகப்பேறு இல்லாத நிலையில் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு சேரும். பிள்ளைகள் இருந்தால் அதில் எட்டில் ஒரு பங்கு சேரும். இதுவும் அவர் பெயரில் இருக்கும் கடன்கள் மற்றும் தாமே எழுதிய உயில் சொத்துக்கள் போக மீதமுள்ள சொத்திலிருந்து பாகப் பிரிவினை செய்யப்படும்.
அதாவது நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் முதலில் இறந்தவர் பேரில் கடன் எவ்வளவு இருக்கிறது என்பதையும் அவர் என்ன உயில் எழுதி வைத்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும். அது போக மீதமுள்ளதைக் கணக்கெடுத்து கணவன் மனைவி உறவுமுறையில் பாகப்பிரி வினை கணக்கு எடுக்கவேண்டும் (பார்க்க 4:33). இதைக் கழித்து மீதமுள்ள சொத்திலிருந்து வாரிசுகளான மகன் மகள் பேரன் பேத்தி அல்லது பெற்றோர்களில் தாய் தந்தை பாட்டனார் ஆகியவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.
وَإِن كَانَ رَجُلٞ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمۡرَأَةٞ وَلَهُۥٓ أَخٌ أَوۡ أُخۡتٞ فَلِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُۚ فَإِن كَانُوٓاْ أَكۡثَرَ مِن ذَٰلِكَ فَهُمۡ شُرَكَآءُ فِي ٱلثُّلُثِۚ
(3) இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாதிருந்து, தாய் தந்தையர் உயிருடன் இருந்து, உடன் பிறந்த ஒரு சகோதரன் ஒரு சகோதரி இருந்தால் இவர்கள் இருவருக்கும் தலா ஆறில் ஒரு பங்கு கிடைக்கும். ஒன்றுக்கு மேல் கோதர சகோதரிகள் இருந்தால் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு எடுத்து சரிசமமாகப் பிரித்து தரப்படும்.
இறந்தவருக்கு தாய் தந்தையர் இல்லை என்றால் 4:176இல் சொன்ன படி பிரித்து தரப்படும்.
مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصَىٰ بِهَآ أَوۡ دَيۡنٍ غَيۡرَ مُضَآرّٖۚ وَصِيَّةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٞ١٢
நினைவில் கொள்ளுங்கள். இந்த பாகப் பிரிவினை எல்லாம் இறந்தவர் பேரில் இருக்கும் கடன்கள் மற்றும் அவர் எழுதிவிட்டுச் சென்ற உயில் சொத்துக்கள் போக மீதமுள்ள சொத்திலிருந்து தான் செய்து தர வேண்டும். ஒருவேளை அவர் எழுதிய மரண சாஸனம் வாரிசுகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று இஸ்லாமிய நீதிமன்றம் கருதினால், அதை தீர விசாரித்து சரி செய்யலாம் (பார்க்க 2:182) இதுவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளாகும். அவற்றை யாரும் மீறக்கூடாது. ஏனெனில் இவையாவும் அவசரப்பட்டு செய்யப்பட்ட விதிமுறைகள் அல்ல. எல்லா வல்லமையும் உடைய அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும்.
4:13تِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ١٣
4:13. இவை யாவும் அல்லாஹ்வின் (Constitutions) நிலையான அடிப்படை சட்டங்களாகும். இதை மையமாக வைத்து தான் செயல்முறைச் சட்டங்கள் (By Laws) ஏற்படுத்தப்படுகின்றன. எந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் சட்டத்திற்கும், (Constitution) அதனடிப்படையில் இறைத்தூதர் உருவாக்கும் ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் (Laws Governing the State) அடிபணிந்து செயல்படுமோ, அது சுவர்க்கத்திற்கு ஒப்பான நாடாகத் மாறும். அதாவது வற்றாத ஜீவநதி போல் தாராள பொருதார வசதிகளும் பெருகி, நிலையான சந்தோஷங்கள் நிறைந்த நாடாக விளங்கும். இது ஒரு மாபெரும் வெற்றி ஆகும் அல்லவா?
4:14وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ١٤
4:14. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சிமுறைச் சட்டங்களுக்கும் மாறு செய்யும் சமுதாயம் நரகமாக மாறிவிடும். அதாவது அல்லாஹ்வின் வரையறைகளை மீறி நடக்கும் போது, சமுதாயத்தினர் தம் மனோ இச்சையின் படி சுயநலத்துடன் தான் செயல் படுவார்கள். அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நிம்மதியற்ற நிலை உருவாகும். இதிலிருந்து விடுபட எந்த வழிமுறையும் இருக்காது. இப்படியாக அந்த சமுதாயம் இழிவும் வேதனையும் அனுபவிக்க நேரிடும்.
இதுவரையில் நாட்டு மக்களின் சொத்து செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் பாகப் பிரிவினை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பார்த்தோம். இனி நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்க மாண்புகளைப் பற்றி பார்ப்போம். இதுவும் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே இதைப் பேணி நடப்பது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் சமுதாயத்தில் ஆண் பெண் உறவுமுறை ஏற்படுவதில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இதற்காக சமூக அங்கீகாரம் அளிக்கும் பதிவுத் திருமணமுறை ஏற்படுத்தப்படுகிறது. அவ்வாறின்றி அவரவர் விருப்பப்படி சமூக அங்கீகாரம் பெறாமலேயே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்றிருந்தால், சமுதாயம் காலப் போக்கில் சீர்கெட்டு போய்விடும்.
4:15وَٱلَّٰتِي يَأۡتِينَ ٱلۡفَٰحِشَةَ مِن نِّسَآئِكُمۡ فَٱسۡتَشۡهِدُواْ عَلَيۡهِنَّ أَرۡبَعَةٗ مِّنكُمۡۖ فَإِن شَهِدُواْ فَأَمۡسِكُوهُنَّ فِي ٱلۡبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّىٰهُنَّ ٱلۡمَوۡتُ أَوۡ يَجۡعَلَ ٱللَّهُ لَهُنَّ سَبِيلٗا١٥
4:15. எனவே பெண்கள் தரப்பிலிருந்து முறையற்ற செயல்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் வந்தால், அதைத் தீர விசாரிக்க வேண்டும். குறைந்தது நான்கு சாட்சிகளையாவது கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால், அப்படிப்பட்டவர்ளை ஆயுட்காலம் வரை மகளிர் சீர்திருத்த மையத்தில் அடைத்து வைக்க வேண்டும். அல்லது அவளுக்கு மறுவாழ்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்யலாம். அதாவது திருமணம் ஆகாதவளாக இருந்தால் திருமண ஏற்பாடு செய்து தரலாம். இப்படியாக மாற்று ஏற்பாடுகள் ஏற்படும் வரையில் அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.
இதனால் மானக்கேடான செயல்கள் சமுதாயத்தில் நடைபெறுவதை தடுத்து விடலாம். அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்றால் புகார் கொடுத்தவர் மீது அவதூரு வழக்குத் தொடர்ந்து அவருக்கு எண்பது கசையடி அடிக்கப்படும் (பார்க்க 24:4) சாட்சியங்கள் விஷயத்தில் நான்கு சாட்சிகள் என்பது ஆதாரங்களாகவும் (Circumstantial Evidence) இருக்கலாம்.
கள்ள தொடர்பு ஏற்படும் விஷயத்தில் பெண்களை மட்டும் பொறுப்பாளியாக கருத முடியாது. முறையற்ற பாலியல் உறவுமுறையில் பெண்கள் ஈடுபட்டிருந்தால் பெண்களுக்கும் ஆண்கள் ஈடுபட்டிருந்தால் ஆண்களுக்கும் தண்டனை அளிக்க சிபாரிசு செய்ய வேண்டும்.
4:16وَٱلَّذَانِ يَأۡتِيَٰنِهَا مِنكُمۡ فََٔاذُوهُمَاۖ فَإِن تَابَا وَأَصۡلَحَا فَأَعۡرِضُواْ عَنۡهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ تَوَّابٗا رَّحِيمًا١٦
4:16. எனவே தண்டனை விஷயத்தில் ஆண் பெண் ஆகிய இருவரும் சமமானவர்களே. ஆனால் அறியாமையில் தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, மன்னிப்புக் கோரினால், அவர்களை எச்சரித்து மன்னிப்பு அளிக்க அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு.இது அல்லாஹ்வின் கிருபையாகும்.
அதாவது அடைத்து வைக்கப்பட்டுள்ள இத்தகைய குற்றவாளிகள் திருந்தியுள்ளனர் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்குப் பரிந்துரை செய்தால், அவர்களை தீர விசாரித்து சரி பார்த்து விடுதலை செய்து ஒழுக்கத்துடன் வாழ மற்றும் ஒரு அவகாசம் அளிக்கலாம்.
4:17إِنَّمَا ٱلتَّوۡبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٖ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٖ فَأُوْلَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيۡهِمۡۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا١٧
4:17. ஆக தீய செயல்கள் எதுவாக இருந்தாலும், அறியாமையில் செய்திருந்தால், அதனை உடனே விட்டுவிட்டு திருந்திக் கொள்ள வேண்டும். அப்படி மன்னிப்பு கோரி திருந்தி வாழ்பவர்களுக்கே அல்லாஹ்வின் சட்டத்தில் மன்னிப்பு உண்டு. ஏனெனில் இத்தகைய சட்ட திட்டங்கள் யாவும் அல்லாஹ், தன் கல்வி ஞானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியவை ஆகும்.
4:18وَلَيۡسَتِ ٱلتَّوۡبَةُ لِلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّئَِّاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ إِنِّي تُبۡتُ ٱلۡـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمۡ كُفَّارٌۚ أُوْلَٰٓئِكَ أَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابًا أَلِيمٗا١٨
4:18. இதற்கு மாறாக ஒருவர் காலமெல்லாம் தீய செயல்களில் ஈடுபட்டுவிட்டு, தனக்கு மரணம் நெருங்கும் தருவாயில், பாவ மன்னிப்புக் கோரினால் அத்தகையவர்க்கு மன்னிப்பு அளிக்கப்பட மாட்டாது. மேலும் யார் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு மாற்றமாக தொடர்ந்து செயல்பட்டு மரிக்கிறார்களோ, அவர்களுக்கும் பாவமன்னிப்பு கிடையாது. அத்தகைய தீயவர்களுக்கு துயரமிக்க வேதனைகள் சித்தப் படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை சொத்து செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க மாண்புகளின் விதிமுறைகளைப் பார்த்தோம். இதற்கு அடுத்தப்படியாக குடும்ப வாழ்வியல் விதிமுறைகளைப் பார்ப்போம். இது சம்பந்தமாக ஓர் அடிப்படை விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது திருமண விஷயத்தில் தமக்குப் பிடித்தமான பெண்களை மணமுடித்துக் கொள்ள அனுமதி உண்டு (பார்க்க 4:3). அதேபோல் மணமுடித்துக் கொள்ள பெண்களின் ஒப்புதலும் அவசியமாகிறது.
4:19يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَحِلُّ لَكُمۡ أَن تَرِثُواْ ٱلنِّسَآءَ كَرۡهٗاۖ
4:19. எனவே உங்களை விரும்பாத பெண்களை பலவந்தமாக திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது.
وَلَا تَعۡضُلُوهُنَّ لِتَذۡهَبُواْ بِبَعۡضِ مَآ ءَاتَيۡتُمُوهُنَّ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ
நீங்கள் மணமுடித்த பெண்களுக்கு அளித்துள்ள பொருட்களைத் திரும்பப் பெறும் பொருட்டு அவர்களை துன்புறுத்தக் கூடாது. அவர்ளுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்களை உங்களிடமே நிறுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் மானக்கேடான செயல்களைச் செய்வதாக உங்களுக்குத் தெளிவானால், இஸ்லாமிய நீதிமன்றத்தின் மூலமாக, அப்பொருட்களில் இருந்து சிலவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள உரிமை உண்டு.
وَعَاشِرُوهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِن كَرِهۡتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡٔٗا وَيَجۡعَلَ ٱللَّهُ فِيهِ خَيۡرٗا كَثِيرٗا١٩
நீங்கள் உங்கள் மனைவியிடம் கனிவான முறையில் நடந்து கொள்ளுங்கள். அவளுடைய செயல்களில் ஏதாகிலும் உங்களுக்குப் பிடிக்காதிருந்தால், அவளை வெறுத்து ஒதுக்கிடாமல் சீர்செய்ய முயற்சி செய்யுங்கள். எதையும் பொறுமையுடன் கையாளுங்கள். இந்த விதிமுறை உங்களுக்கு வெறுக்கத்தக்கதாய் தோன்றலாம். அல்லாஹ்வின் இந்த அறிவுரைகளைக் கொண்டு உங்களுக்கு சிறந்த சந்தோஷமான வாழ்க்கை கிடைக்க வழிகள் பிறக்கும்.
4:20وَإِنۡ أَرَدتُّمُ ٱسۡتِبۡدَالَ زَوۡجٖ مَّكَانَ زَوۡجٖ وَءَاتَيۡتُمۡ إِحۡدَىٰهُنَّ قِنطَارٗا فَلَا تَأۡخُذُواْ مِنۡهُ شَيًۡٔاۚ أَتَأۡخُذُونَهُۥ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا٢٠
4:20. நீங்கள் வேறு பெண்ணை மணந்துக் கொள்ளும் நோக்கத்துடன், உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய நாடினால், அவளுக்கு நீங்கள் கொடுத்துள்ள பொருட்களிலிருந்து திரும்பப் பெறுவது முறையாகாது. நீங்கள் அவளுக்கு பொற் குயவியலையே கொடுத்திருந்தாலும் சரியே, அவற்றை திரும்பப் பெறக் கூடாது. அவளிடமிருந்து சொத்துக்களைத் திரும்பப் பெறும் பொருட்டு, அவள் மீது அபாண்டமாக பழி சுமத்துவதோ துன்புறுத்துவதோ கூடாது. இது மிகப் பெரிய பாவகரச் செயலாகும்.
4:21وَكَيۡفَ تَأۡخُذُونَهُۥ وَقَدۡ أَفۡضَىٰ بَعۡضُكُمۡ إِلَىٰ بَعۡضٖ وَأَخَذۡنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظٗا٢١
4:21. கணவன் மனைவி உறவுமுறை என்பது நகமும் சதையும் போன்றதாகும். ஒருவர் மற்றவரின் நலனை வாழ்நாள் முழுவதும் பேணிக் காப்பதாக வாக்குறுதி அளித்து, திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு, மிகவும் அன்யோனியமாக வாழ்ந்த பின்னர், அவளை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டால், அவளிடமிருந்து பொருட்களைத் திரும்பப் பெற நினைப்பது எப்படி நியாயமாகும்?
4:22وَلَا تَنكِحُواْ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدۡ سَلَفَۚ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَمَقۡتٗا وَسَآءَ سَبِيلًا٢٢
4:22. மேலும் எந்தெந்தப் பெண்ணோடு மணமுடித்துக் கொள்ள தடை உள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். அந்த பட்டியலில் முதலில் வருவது உங்கள் தந்தை மணமுடித்த பெண். அவர் உங்கள் தாய்க்குச் சமமானவர். எனவே அவருடன் திருமணம் செய்யக் கூடாது. ஏனெனில் இது மானக்கேடானதும் வெறுக்கக் கூடியதும் தீமையான செயலும் ஆகும். ஆனால் அறியாமைக் காலத்தில் ஏற்கனவே அவ்வாறு மணமுடித்துஇருந்தால், அதை அப்படியே தக்கவைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. இனி இவ்வாறு நடக்கக் கூடாது.
4:23حُرِّمَتۡ عَلَيۡكُمۡ أُمَّهَٰتُكُمۡ وَبَنَاتُكُمۡ وَأَخَوَٰتُكُمۡ وَعَمَّٰتُكُمۡ وَخَٰلَٰتُكُمۡ وَبَنَاتُ ٱلۡأَخِ وَبَنَاتُ ٱلۡأُخۡتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِيٓ أَرۡضَعۡنَكُمۡ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمۡ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِي دَخَلۡتُم بِهِنَّ فَإِن لَّمۡ تَكُونُواْ دَخَلۡتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ وَحَلَٰٓئِلُ أَبۡنَآئِكُمُ ٱلَّذِينَ مِنۡ أَصۡلَٰبِكُمۡ وَأَن تَجۡمَعُواْ بَيۡنَ ٱلۡأُخۡتَيۡنِ إِلَّا مَا قَدۡ سَلَفَۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا٢٣
4:23. இது தவிர வேறு எந்தெந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள தடை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைப் பெற்றெடுத்த தாய், உங்கள் மகள்கள், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள் (அத்தை), உங்கள் தாயின் சகோதரிகள், உங்கள் சகோதரனின் மகள்கள், உங்கள் சகோதரியின் மகள்கள், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய், பால்குடி சகோதரிகள், உங்கள் மனைவியின் தாய் ஆகியவர்களுடன் மணமுடிக்க தடை செய்யப்படுகிறது. அதே போல் நீங்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டு, அவளுடன் உறவு கொண்டபின் அவளுடைய முந்தைய கணவருக்குப் பிறந்து உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது. ஆனால் நீங்கள் மணமுடித்துக் கொண்ட பெண்ணிடம் வீடு கூடாமல் இருந்தால், அவளை விவாகரத்து செய்து, அவளுடைய முந்தைய கணவனுக்குப் பிறந்த மகளை மணந்துக் கொள்வதில் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த மகன்களின் மனைவியையும் (மருமகள்) திருமணம் செய்து கொள்ளக் கூடாது. மேலும் இரு சகோதரிகளை ஒரே சமயத்தில் மனைவிகளாக ஆக்கிக் கொள்வது தடை செய்யப்படுகிறது. இருந்தும் அறியாமைக் காலத்தில் ஏற்கனவே இதற்கு மாற்றமாகத் திருமணங்கள் நடந்திருந்தால் அதை அப்படியே விட்டு விடுங்கள். அதாவது இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதும் விவாகரத்து செய்துவிட எண்ணாதீர்கள். அல்லாஹ்வின் ஏற்பாடு பாதுகாப்பும் கருணையும் மிக்கதாய் இருக்கின்றது.
பகுதி : 5
4:24۞وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ
4:24. மேலும் திருமண உறவில் இருக்கும் கணவனுள்ள பெண்களை நீங்கள் மணந்துக் கொள்ளக் கூடாது. இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய பெண் அகதிகளாக, பாதுகாப்பு கருதி உங்களிடம் வந்து தங்கியிருந்து அவர்களும் விரும்பினால், அவர்களை மணமுடித்துக் கொள்ளலாம். இவை யாவும் அல்லாஹ் உங்களுக்கு நிர்ணயித்துத் தந்துள்ள வரையறைகளாகும்.
وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمۡ أَن تَبۡتَغُواْ بِأَمۡوَٰلِكُم مُّحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَۚ
மேலே தடை செய்யப்பட்டுள்ள பெண்களைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் மணந்துக் கொள்ளலாம். ஆனால் அவர் திருமணச் சட்ட விதிமுறைகளின் படி பதிவுத் திருமணம் (நிக்காஹ்) செய்துக் கொள்ள வேண்டும். இப்படியாக ஒருவர் மற்றவரின் நலனைப் பேணிக் காக்கும் வாழ்நாள் காலத்து தம்பதிகளாக ஆகிவிடவேண்டும்.
فَمَا ٱسۡتَمۡتَعۡتُم بِهِۦ مِنۡهُنَّ فََٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةٗۚ
இதை விட்டுவிட்டு வெறும் சிற்றின்பத்தை மட்டும் அனுபவிக்கும் எண்ணத்துடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது முறையல்ல. கணவன் மனைவி என்ற உறவுமுறையின் அடிப்படையில் இருக்கவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ‘மஹர்’ என்னும் வாழ்க்கை நடத்த வசதிகளை நன்கொடையாக அளித்திடல் வேண்டும்.
وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا تَرَٰضَيۡتُم بِهِۦ مِنۢ بَعۡدِ ٱلۡفَرِيضَةِۚ
இதில் இருவரின் சம்மதத்துடன் அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ செய்யலாம். அதில் குற்றம் ஏதுமில்லை.
إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا٢٤
அல்லாஹ்வின் சட்டம் முழு ஞானத்துடன் உங்களை எப்போதுமே கண்காணித்துக் கொண்டு இருப்பதை மறவாதீர்.
4:25وَمَن لَّمۡ يَسۡتَطِعۡ مِنكُمۡ طَوۡلًا أَن يَنكِحَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ فَمِن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن فَتَيَٰتِكُمُ ٱلۡمُؤۡمِنَٰتِۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِإِيمَٰنِكُمۚ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۚ
4:25. சுதந்திரமுள்ள மூஃமினான பெண்ணை திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு பெறாதோர், இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிய மற்றவர் பாதுகாப்பில் இருக்கும் பணிவிடைப் பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம். இப்படியாக பெண்கள் அடிமைத்தனம் படிப்படியாக நீங்கி சமுதாயத்தில் சீர்நிலை ஏற்படும். ஆக நீங்கள் செயல்பட்டு வருவதும், உங்களில் எந்த அளவிற்கு மார்க்க ஈடுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே பணிவிடைப் பெண்களை மணமுடித்துக் கொள்வது இழிவான செயல் என்று எண்ணாதீர்கள். எப்போது அவள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி உங்களுடன் நிக்காஹ் செய்து திருமண உறவுக்குள் வந்து விடுகிறாளோ, அப்போதிலிருந்தே அவள் மற்ற மூஃமினான பெண்களுக்குச் சமமானவளாக ஆகிவிடுகிறாள்.
فَٱنكِحُوهُنَّ بِإِذۡنِ أَهۡلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلۡمَعۡرُوفِ مُحۡصَنَٰتٍ غَيۡرَ مُسَٰفِحَٰتٖ وَلَا مُتَّخِذَٰتِ أَخۡدَانٖۚ
ஆனால் பணிவிடைப் பெண்ணை மணமுடிக்க அவளுடைய எஜமானிடமிருந்து அனுமதி பெற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும். அதன்பின் அவளுக்கு ‘மஹர்’ என்னும் நன்கொடையை அளித்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆக கணவன் மனைவி ஆகிய இருவரும் கற்புடன் தூய்மையமான வாழ்க்கை வாழ்வதற்காகவே நிக்காஹ் என்ற ஒப்பந்தம் செய்யப்படுகிறது. (பார்க்க– 5:5)
فَإِذَآ أُحۡصِنَّ فَإِنۡ أَتَيۡنَ بِفَٰحِشَةٖ فَعَلَيۡهِنَّ نِصۡفُ مَا عَلَى ٱلۡمُحۡصَنَٰتِ مِنَ ٱلۡعَذَابِۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ ٱلۡعَنَتَ مِنكُمۡۚ وَأَن تَصۡبِرُواْ خَيۡرٞ لَّكُمۡۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ٢٥
இவ்வாறாக பணிவிடைப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின் ஒருவேளை அவள் மானக்கேடான செயலில் ஈடுபடுவதாக தெரிய வந்தால், மற்ற சுதந்திரமான பெண்களுக்கு கிடைக்கக் கூடிய கசையடி தண்டனையில் இவளுக்கு சரிபாதி விதிக்கப்படும்.* அவ்வாறு பணிவிடைப் பெண்களை மணந்துகொண்டு இறைவழிகாட்டுதலைப் பேணி நடக்க இயலாது என்று அஞ்சினால், நீங்கள் மணக்காதீர்கள். எனினும் யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி உறுதிப்படுடன் நிலைத்திருந்து செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்.
கசையடி சரி பாதி ஆக்கியதன் காரணம் அவர்கள் வளர்ந்து வந்த சூழ்நிலை சந்தர்ப்பத்தால், தகாத செயல்களுக்கு பழக்கமாகி இருப்பார்கள். அப்படிப்பட்ட செயல்கள் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கு சில காலம் ஆகும். எனவே தான் அவர்களுக்கு தரப்படும் தண்டனை பாதியாக குறைக்கப்படுகிறது. நீங்கள் நிதானத்தோடு பக்குவமாக எடுத்துச் சொல்லி, அவளை திருத்தவேண்டும். ஏனெனில் இவர்களிடமுள்ள தீய பழக்கங்களை நீக்கி, சிறந்த முஸ்லிம் பெண்மணியாக உருவாக்குவதே உங்களுடைய நோக்கமாகும்.
4:26يُرِيدُ ٱللَّهُ لِيُبَيِّنَ لَكُمۡ وَيَهۡدِيَكُمۡ سُنَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ وَيَتُوبَ عَلَيۡكُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ٢٦
4:26. இப்படியாக இல்லற வாழ்வியல் தொடர்பாக விரிவான சட்ட திட்டங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தெளிவாக்கப்படுகின்றன. முன்சென்ற சமுதாயங்கள் இவற்றை முறைப்படி பேணி நடந்து, எந்த அளவிற்கு மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ்ந்தார்கள் என்பதை உங்களுக்கு தெளிவாக்கிடத் தான் இவை உங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. அவ்வாறே உங்களையும் சிறப்பாக வாழ வைக்கவேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் தெளிவான கல்வி ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையே ஆகும்.
4:27وَٱللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيۡكُمۡ وَيُرِيدُ ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلشَّهَوَٰتِ أَن تَمِيلُواْ مَيۡلًا عَظِيمٗا٢٧
4:27. உங்களை தீய செயல்களிலிருந்து விலக்கி சிறப்பாக வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். ஆனால் மனம் போன போக்கில் வாழ்பவர்களோ, நீங்களும் பாவகர செயல்களில் ஈடுபட்டு அதிலேயே மூழ்கி அழிந்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
4:28يُرِيدُ ٱللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمۡۚ وَخُلِقَ ٱلۡإِنسَٰنُ ضَعِيفٗا٢٨
4:28. உங்களுடைய துயரங்களை நீக்கி உங்கள் வாழ்க்கையை இலேசாக்கிடவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் நாடுகின்றன. ஆனால் மனிதப் படைப்பில் எந்த தீய பழக்கங்களுக்கும் எளிதில் அடிமையாகும் பலவீனம் உள்ளது.
இறைவழிகாட்டுதல்கள் இன்றி, தன் மனம் போன போக்கில் மனிதன் வாழ நினைத்தால், அவன் எளிதில் தன் மனோ இச்சைக்கு அடிமையாகி விடுவான். இதனால் அவனது வாழ்வில் சிக்கல்கள் பல ஏற்பட்டு அவன் துயரத்திற்கு ஆளாகி விடுவான். இது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே பாவச் செயலில் ஈடுபட்டு துன்பங்களுக்கு ஆளாகாமல் சுகமான வாழ்க்கை பெறவே இறை வழிகாட்டுதல்கள் நாடுகின்றன. மனிதன் தன் மனோ இச்சைக்கு அடிமை ஆகிவிட்டால் பிறருடைய பொருட்கள் எல்லாம் தன்னிடம் வந்துவிட வேண்டும் என்ற பேராசையும் அவனுக்குள் வளர ஆரம்பிக்கும். அவனுடைய இந்த பேராசையை நிறைவேற்றிக் கொள்ள எந்த வழிமுறையையும் கையாள பின்வாங்க மாட்டான். இப்படியாக தவாறான வழியில் ஈடுபட்டால் சமுதாயத்தில் தீய விளைவுகள்தான் ஏற்படும்.
4:29يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٖ مِّنكُمۡۚ وَلَا تَقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمۡ رَحِيمٗا٢٩
4:29. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஒருவரையொருவர் பரிமாறிக் கொள்கிறீர்கள். இது வியாபாரமாகும். இதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் ஒருவர் மற்றவரின் பொருட்களை அநியாயமாக அபகரித்துக் கொள்வது முறையாகாது. (2:188) ஏனெனில் அதனால் சண்டைச் சச்சரவு, கொலை என அசம்பாவிதங்கள் தான் ஏற்படும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் நலனை முன்வைத்தே தரப்படுகின்றன. இதுவே அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையாகும்.
4:30وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ عُدۡوَٰنٗا وَظُلۡمٗا فَسَوۡفَ نُصۡلِيهِ نَارٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا٣٠
4:30. இவ்வாறாக தெளிவான எச்சரிக்கைகள் வந்த பின்பும், ஒருவர் மற்றவரின் பொருட்களை அநியாயமாக அபகரித்து, வரம்பு மீறின செயலில் ஈடுபடும் சமுதாயமாக உருவானால், அது விரைவில் நரக வேதனைகளில் சிக்கிக் கொள்ளும். ஏனெனில் பொது நலனில் அக்கறை காட்டாத சுயநலவாதிகள் வாழும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு குழப்பங்கள் உண்டாகி அழிந்து போவது இயல்பு தானே.
4:31إِن تَجۡتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنۡهَوۡنَ عَنۡهُ نُكَفِّرۡ عَنكُمۡ سَئَِّاتِكُمۡ وَنُدۡخِلۡكُم مُّدۡخَلٗا كَرِيمٗا٣١
4:31. எனவே தடை செய்யப்பட்ட இந்த விஷயங்கள் சாதாரணமானவை அல்ல. ஏனெனில் இவை மனித நேயத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதை நீங்கள் தவிர்த்துக் கொண்டால் உங்களிடையே உள்ள தீமைகள் நீங்கி சுமுகமான சூழ்நிலையாக மாறி, மதிப்பும் மரியாதையும் கூடிவரும்.
மேலும் சொத்துரிமை விஷயத்தில் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம், பெண்களுக்கு உரிமை இல்லை என்பதல்ல. அவர்களுக்கும் பங்குண்டு என்பதை ஏற்கனவே 4:7இல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சமுதாயத்தில் சம்பாத்தியம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உரிமை, பெண்களுக்கு உரிமை இல்லை என்றோ அல்லது அவர்கள் தகுதியற்றவர்கள் என்றோ தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் சமூகப் பணிகளில் ஆண்கள் செய்யக் கூடிய எல்லா பணிகளையும் பெண்களாலும் செய்ய முடியும் (பார்க்க 33:35).
4:32وَلَا تَتَمَنَّوۡاْ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبُواْۖ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبۡنَۚ وَسَۡٔلُواْ ٱللَّهَ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا٣٢
4:32. ஆக ஆண் பெண் என்று உடல் ரீதியாகப் பார்க்கும் போது, அல்லாஹ்வின் நியதிப்படி சில வேற்றுமைகளும், தனிச் சிறப்புகளும் இருக்கின்றன. இதை வைத்து யாரும் மற்றவர் மீது பெருமை கொள்ளத் தேவையில்லை. வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பெண்களும் அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளலாம். ஆக பெண்கள் தம் பங்கிற்கும், ஆண்கள் தம் பங்கிற்கும் சம்பாதித்துக் கொள்ளலாம். யார் எவ்வாறு செயல்பட முடியும் என்ற முழு ஞானமும் உள்ள அல்லாஹ்விடமிருந்து வரும் வழிகாட்டுதல் இது.
4:33وَلِكُلّٖ جَعَلۡنَا مَوَٰلِيَ مِمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَۚ وَٱلَّذِينَ عَقَدَتۡ أَيۡمَٰنُكُمۡ فََٔاتُوهُمۡ نَصِيبَهُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا٣٣
4:33. ஆண்கள் மற்றும் பெண்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து பாகப் பிரிவினை செய்யும் விகிதத்தை 4:11இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய் தந்தையர் மற்றும் நெருங்கிய உறவினர் பெயரில் இருக்கும் சொத்துக்களை முறைப்படி பாகப்பிரிவினை செய்யவேண்டும். ஆனால் வாரிசுதாரர்களுக்கு பாகப்பிரிவினை செய்வதற்கு முன் திருமண பந்தத்தில் உள்ளவர்களுக்கு முதலில் பங்கு கொடுத்து விட்டு மீதமுள்ளவற்றில் பங்கு பிரிக்க வேண்டும். அதாவது கணவன் பெயரில் உள்ள சொத்திலிருந்து முதலில் மனைவிக்கும் அல்லது மனைவி பெயரில் உள்ள சொத்திலிருந்து கணவனுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆக உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ் சாட்சியாக இருப்பதை மறவாதீர்.
ஆண் பெண் ஆகிய இரு பாலரில் உடல் ரீதியான தனித் தன்மைகளைப் பற்றி 4:31இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மகப்பேறு மற்றும் பாலூட்டி வளர்த்தல் போன்ற காரியங்கள் பெண்களால் மட்டுமே செய்ய முடியும். இதனால் சம்பாதிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு குறைவாக இருக்கும். இந்தக் குறையை ஆண்கள் நிவர்த்தி செய்கிறார்கள்.
4:34ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ وَبِمَآ أَنفَقُواْ مِنۡ أَمۡوَٰلِهِمۡۚ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٞ لِّلۡغَيۡبِ بِمَا حَفِظَ ٱللَّهُۚ
4:34. இப்படியாக அல்லாஹ்வின் நியதிப்படி சில விஷயங்களில் ஆணுக்கும் சிலவற்றில் பெண்ணுக்கும் தனிச் சிறப்புகள் இருக்கின்றன. இதனால் குடும்ப நிர்வாகப் பொறுப்பை ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்களின் வருவாயிலிருந்து பெண்கள் குடும்ப செலவுகளை கவனித்துக் கொள்கிறார்கள். இந்த குடும்பப் பெண்கள் அல்லாஹ் நிர்ணயித்துள்ள படி நல்லொழுக்கத்தையும் சட்ட விதிமுறைகளையும் பேணி நடந்து கொள்கிறார்கள். இவர்கள் தம் கற்பை பாதுகாத்துக் கொள்வார்கள்.
وَٱلَّٰتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهۡجُرُوهُنَّ فِي ٱلۡمَضَاجِعِ وَٱضۡرِبُوهُنَّۖ فَإِنۡ أَطَعۡنَكُمۡ فَلَا تَبۡغُواْ عَلَيۡهِنَّ سَبِيلًاۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيّٗا كَبِيرٗا٣٤
இப்போது, சமூக நல்லொழுக்கம் சீரழியும் செயல்களில் ஈடுபடும் பெண்களைப் பற்றியது. அவர்களைத் திருத்த தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சமுதாயத் தலைவர்கள் அப்படிப்பட்ட பெண்களை அழைத்து நல்லுபதேசம் செய்ய வேண்டும். அதாவது அவர்களுடைய முறையற்ற செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும். அதையும் மீறி அவர்களுடைய முறையற்ற செயல்கள் தொடர்வதாகத் தெரிந்தால், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி ஒதுக்கி வையுங்கள். அப்படியும் அவர்கள் திருந்தாவிடில் அல்லாஹ்வின் சட்டப்படி நீதிமன்றம் மூலமாக அவர்களுக்கு தண்டனை வழங்கலாம். இப்படிப்பட்ட நடவடிக்கையால் சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கு சீர்படும். சமூக நல்லிணக்கமும் ஏற்படும். ஆக அவர் கள் உங்களுடைய அறிவுரைகளை ஏற்று திருந்திக் கொண்டால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காதீர்கள். இதே சட்டம் ஆண்களுக்கும் பொருந்தும் (பார்க்க 4:128).
4:35وَإِنۡ خِفۡتُمۡ شِقَاقَ بَيۡنِهِمَا فَٱبۡعَثُواْ حَكَمٗا مِّنۡ أَهۡلِهِۦ وَحَكَمٗا مِّنۡ أَهۡلِهَآ إِن يُرِيدَآ إِصۡلَٰحٗا يُوَفِّقِ ٱللَّهُ بَيۡنَهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرٗا٣٥
4:35. இதுவே ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளாகும். இதைத் தவிர தனிப்பட்ட முறையில் கணவன் மனைவி இடையே விரிசல் இருப்பதாக புகார் வந்தால் - அந்த விரிசல் திருமண ஒப்பந்தத்தில் முறிவு ஏற்படும் அளவிற்குச் சென்றுவிடும் என்று பயந்தால், அதன் பிரச்னையை தீர்த்து வைக்க கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் நடுவர்களாக நியமித்து, சமாதானமாக வாழ வைக்க முயலுங்கள். அப்படி அவர்கள் இருவரும் சமாதானமாகிவிட விரும்பினால், அவர்கள் இருவரும் பழையபடி சேர்ந்து வாழ அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு. எனவே நடுவர்கள் கணவன் மனைவி இடையே ஏற்பட்டுள்ள பிணக்கை நீக்கும் நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் கல்வி ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவை ஆகும்.
இதையும் மீறி கணவன் மனைவி இடையே உள்ள விரிசல் நீங்கவில்லை என்றால் 2ஆம் அத்தியாயம் 227 முதல் 242 வரை மற்றும் 65இல் 1 – 6 வரை உள்ள வாசகங்களுக்கு ஏற்ப விவாகரத்து வழங்க இஸ்லாமிய நீதிமன்றம் அல்லது ஜமாஅத்திற்கு அனுமதி உண்டு.
கணவன் மனைவி குடும்ப விவகாரத்துக்குப் பின், உறவினர்கள் விஷயம் எழுகிறது. கணவன் மனைவி விஷயமோ, உறவினர்கள் விஷயமோ எதுவாக இருந்தாலும்,
4:36۞وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا
4:36. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு எந்த வழிமுறையை யும் கடைப்பிடிக்காதீர்கள். சமுதாய சீர்திருத்தம் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதை உங்கள் தாய் தந்தையரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்விருவரிடமும் அன்போடும் பரிவோடும் நடந்து கொள்ள வேண்டும் (பார்க்க 17:23-24 & 31:14). அவர்களுடைய தேவைகளை அழகிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ
அதே போல் நெருங்கிய உறவினர்கள், சமுதாயத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள், சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோர்கள், அண்டை வீட்டார்களில் வசதியற்ற நிலையில் இருப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையில் பணியாற்றும் தோழர்கள், அதற்காகப் பயணத்தை மேற்கொள்பவர்கள், உங்களிடம் இருக்கும் பணியாட்கள் ஆகிய அனைவருக்கும் உங்கள் வசதி வாய்ப்புக்கு ஏற்றவாறு அவர்களுடைய துயரங்கள் நீங்க உதவி செய்யுங்கள்.
إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخۡتَالٗا فَخُورًا٣٦
ஆக சமுதாய நலனில் அக்கறையுள்ள அன்பு உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட நற்காரியங்களில் ஈடுபட்டு,தம் வாழ்வில் பேரானந்தம் அடைவார்கள். மாறாக வெறும் வார்த்தை ஜாலங்களால் தற்பெருமை அடித்துக் கொண்டு சுயநலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்கள், இதைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் மாட்டார்கள். அவர்களிடம் எடுத்துரைத்தாலும் அதை பின்பற்றவும் மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு அல்லாஹ்வின் நேசம் கிடைக்காது.
4:37ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِ وَيَكۡتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا٣٧
4:37. இத்தகையோர், தாம் சம்பாதிக்கும் சொத்து செல்வங்கள் அனைத்தும் தமக்காகத் தான் என்று நினைக்கிறார்கள். அது மட்டுமின்றி இதில் தவறு ஒன்றும் இல்லை என்று பிறருக்கும் போதிக்கிறார்கள். எனவே அவை யாவும் தமக்கு மட்டுமே சொந்தமானவை என்று எண்ணி, அவற்றை மறைத்து வைத்துக் கொள்கின்றனர். நினைவில் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் அருட்கொடை களாகிய வாழ்வாதாரங்களை தம் தேவைக்கு அதிகமாகவே குவித்துக் கொள்வது – அதாவது சமுதாய மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தாமல் அவை எல்லாம் தமக்காகத் தான் என்று தேக்கி வைத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு நன்றி மறந்த செயல்களாகும். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனைகள் சித்தப் படுத்தப்பட்டு உள்ளன.
4:38وَٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ وَمَن يَكُنِ ٱلشَّيۡطَٰنُ لَهُۥ قَرِينٗا فَسَآءَ قَرِينٗا٣٨
4:38. சிலர் புகழ்வேண்டி மக்களுக்குக் காட்டிக் கொள்வதற்காக தம் செல்வங்களை செலவழிப்பார்கள். மேலும் இவர்கள்தாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். (மேலும் பார்க்க 2:263) இவர்களே தம் மனோ இச்சையை கூட்டாளிகளாக்கிக் கொண்டவர்கள். அது அவர்களை தீமையின் பக்கமே இழுத்துச் செல்லும்.
அதாவது தான் ஒரு “தர்மகர்த்தா” என்று பெயரும் புகழும் பெற வேண்டும் என்று ஏழை எளிய மக்களுக்கு தருமம் செய்து வருவார்கள். இது மிகவும் அழகான செயல் என்ற நினைப்பும் இருக்கும். ஆனால் மக்களிடம் கையேந்தும் பழக்கம் அதிகமாகி, சமுதாயம் முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவு ஏற்படுவதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
4:39وَمَاذَا عَلَيۡهِمۡ لَوۡ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَنفَقُواْ مِمَّا رَزَقَهُمُ ٱللَّهُۚ وَكَانَ ٱللَّهُ بِهِمۡ عَلِيمًا٣٩
4:39. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் மனித செயலுக்கு ஏற்ற விளைவுகள் என்ற சட்டத்தையும் ஏற்று, அல்லாஹ்வின் அறிவுரைகளின் படி ஆக்கப்பூர்வமாக நலத் திட்டங்களுக்காக செயல்படும் ஆட்சி அமைப்புக்கு அல்லது சமூக அமைப்பிற்கு வழங்குவதால் அவர்களுக்கு என்ன குறை வந்துவிடப் போகிறது? அந்த ஆட்சியமைப்பு அனைவரின் வளர்ச்சியையும் கவனித்தில் கொள்ளுமே. மேலும் மனிதனின் அனைத்து செயல்களைப் பற்றியும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போவதில்லையே!
ஒவ்வொருவரின் செயலின் பின்னணியில் அவர்களின் எண்ணங்களும் நோக்கங்களும் இருக்கும். ஆக யார் எவ்வாறு செயல்படுகிறார்களோ அதன் படியே பலன்களும் விளைவுகளும் ஏற்படும்.
4:40إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ وَإِن تَكُ حَسَنَةٗ يُضَٰعِفۡهَا وَيُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِيمٗا٤٠
4:40. எனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து யாருக்கும் ஒருபோதும் ஓர் அணு அளவு கூட அநியாயாம் ஏற்படாது. மாறாக எந்த ஒரு நன்மையான செயலாக இருந்தாலும் அதற்கேற்ப பலன்கள் பன்மடங்காகி மகத்தான நற்கூலியாக அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும்.
4:41فَكَيۡفَ إِذَا جِئۡنَا مِن كُلِّ أُمَّةِۢ بِشَهِيدٖ وَجِئۡنَا بِكَ عَلَىٰ هَٰٓؤُلَآءِ شَهِيدٗا٤١
4:41. எனவே ஒரு சமுதாயம் சிறப்பாக உருவாக, ஒவ்வொரு ஊரிலிருந்தும் நேர்மைக்கு சாட்சி பகரும் தகுதிமிக்க பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பொறுப்பாளர்களின் தலைவராக சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் உமக்கு துணை நின்று, அனைவரும் செயல்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? (பார்க்க: 2-143)
4:42يَوۡمَئِذٖ يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ وَعَصَوُاْ ٱلرَّسُولَ لَوۡ تُسَوَّىٰ بِهِمُ ٱلۡأَرۡضُ وَلَا يَكۡتُمُونَ ٱللَّهَ حَدِيثٗا٤٢
4:42. அப்படி ஓர் ஆட்சியமைப்பு உருவாகும் காலக் கட்டத்தில், அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நிராகரித்து இறை ஆட்சி/சமூக அமைப்புக்கு எதிராகச் செயல் படுபவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள். அதன் வேதனையை தாங்க முடியாமல் இப்படி ஓர் இழிநிலை ஏற்படுவதற்கு முன்னமே தங்களை இந்த பூமி விழுங்கிக் கொள்ளக்கூடாதா என்று ஏங்குவார்கள். அதாவது தாம் செத்து மடிந்து விடலாமே என்று எண்ணுவார்கள். இப்படி ஒரு நிலைமை இந்த உலகில் ஏற்படவில்லை என்றாலும், மரணத்திற்குப் பின் இவர்களுக்கு நிச்சயமாக இந்த வேதனை ஏற்படும். ஏனெனில் அகிலங்கள் அனைத்திலும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் சட்டமே செயல்பட்டு வருகின்றது. எந்த செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை.
இந்த உலகில் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உருவாக அவனுடைய கொள்கைக் கோட்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியமாகிறது. இந்தப் பணி கூட்டு ஸலாத் மூலம், இறைக் கொள்கைகளை அனைவருக்கும் விளக்கி, சிந்தித்து அறிந்து செயல்படும் வண்ணம் செயல்படுத்தலாம். அப்படி இந்த ஸலாத்திற்கு வருபவர்கள் அங்கு கூறப்படும் விஷயங்களைப் புரிந்துக் கொள்ளும் தகுதியை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
4:43يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقۡرَبُواْ ٱلصَّلَوٰةَ وَأَنتُمۡ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعۡلَمُواْ مَا تَقُولُونَ
4:43. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! மதி மயங்கிய நிலையில் கூட்டு ஸலாத்தின் பக்கம் நெருங்காதீர்கள். ஏனெனில் அங்கு பேசப்படும் விஷயத்தைப் பற்றிய ஞானம் பெற முடியாமல் போய் விடும். அங்கு சொல்லப்படுவதை சிந்தித்துணரும் நிலையில் தான் கலந்துக் கொள்ள வேண்டும்.
وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغۡتَسِلُواْۚ
ஸலாத்தில் கலந்து கொள்பவர்கள், உடல் சுத்தத்தையும் பேணிக் கொள்வது அவசியம். கணவன் மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் இருவரும் குளித்து சுத்தமாகிய பின்னரே கூட்டு ஸலாத்துக்கு வரவேண்டும்.
وَإِن كُنتُم مَّرۡضَىٰٓ أَوۡ عَلَىٰ سَفَرٍ أَوۡ جَآءَ أَحَدٞ مِّنكُم مِّنَ ٱلۡغَآئِطِ
மற்றவர்கள் கை கால்களை கழுவி தலையை வாரி சரி செய்துக் கொண்டு வரவேண்டும். (பார்க்க-5:6) உடல் நலம் குன்றியவர்கள், வழிப் போக்கர்கள் மலஜலம் கழித்து தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், கூட்டு ஸலாத்தில் கலந்து கொள்ள வருபவர்கள், சுத்தமான பொருளைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளட்டும். மேலும் தம் கைகளை சுத்தமான மண்ணில் பதித்து முகம், மற்றும் கைகளைத் தடவி சுத்தம் செய்து கொண்டு ஸலாத்தில் கலந்து கொள்ளலாம். இதையே தயம்மம் முறை என்பார்கள்.
أَوۡ لَٰمَسۡتُمُ ٱلنِّسَآءَ فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ صَعِيدٗا طَيِّبٗا فَٱمۡسَحُواْ بِوُجُوهِكُمۡ وَأَيۡدِيكُمۡۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا٤٣
அதே போன்று கணவன் மனைவி கூடலில் ஈடுபட்டிருந்து தண்ணீர் கிடைக்காத பட்சத்திலும் தயம்மம் செய்து கொண்டு கூட்டு ஸலாத்தில் கலந்து கொள்ளலாம். அதாவது நீங்கள் சுத்தமாக இருக்க பழகிக் கொள்ளவே இவை உதவிகரமாக நிற்கும். அதே சமயம் ஸலாத்தில் அல்லாஹ்வின் முக்கியமான ஞான விஷயங்கள் திரும்பத் திரும்ப ஓதிக் காட்டி போதிக்கப்படுவதால், அதில் கலந்துக் கொள்வது மிகமிக அவசியம். ஸலாத்தில் கலந்து கொள்ளாததால் ஏற்படும் இழப்பிலிருந்து உங்களைப் பாதுகாதுக் கொள்ளவே இந்தச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
4:44أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يَشۡتَرُونَ ٱلضَّلَٰلَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّواْ ٱلسَّبِيلَ٤٤
4:44. இதை அடுத்து வேததத்தின் ஒரு பகுதி (சமய நூல்கள்) அளிக்கப்பட் டோர்களின் பேச்சும் செயலும் எவ்வாறு முரண்படுகின்றன என்பதை கவனியுங்கள். அவர்களுடைய செயல்கள் வழிகேட்டையே விலைக்கு வாங்கிக் கொள்வதாக உள்ளன. அது மட்டுமின்றி நீங்களும் வழிகெட்டுப் போய் விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
முழுமையாக்கப் பட்ட இந்த இறை வேதமாகிய குர்ஆன் (பார்க்க-5:3) அவர்களிடமுள்ள வேத உண்மைகளை எடுத்துரைத்து (பார்க்க 3:4&5) அனைவரையும் நேர்வழிப் படுத்தவே அருளப்படுகிறது.
4:45وَٱللَّهُ أَعۡلَمُ بِأَعۡدَآئِكُمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيّٗا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرٗا٤٥
4:45. அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செயல்படு பவர்கள் நீங்கள். உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யார் என்று அலலாஹ்வுக்கு நன்கு தெரியும். எனவே நீங்கள் அச்சமின்றி உங்கள் செயல் திட்டத்தில் முன்னேறிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி போதுமான பாதுகாப்பும் உதவியும் உங்களுக்குக் கிடைக்கும்.
4:46مِّنَ ٱلَّذِينَ هَادُواْ يُحَرِّفُونَ ٱلۡكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَيَقُولُونَ سَمِعۡنَا وَعَصَيۡنَا وَٱسۡمَعۡ غَيۡرَ مُسۡمَعٖ وَرَٰعِنَا لَيَّۢا بِأَلۡسِنَتِهِمۡ وَطَعۡنٗا فِي ٱلدِّينِۚ
4:46. இத்தகையவர்களில் யூதர்கள் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வேத சொற்களையே உருமாற்றி விடுகின்றனர். அவர்களுடைய பேச்சுகளும் இரு அர்த்தம் தரக்கூடிய வகையில் உள்ளன. உதாரணத்திற்கு “இறைச் சொல்லை நாம் கேட்டோம். நிச்சயமாக அதன் படி செயல்படுவோம் என்று சொல்வதற்குப் பதிலாக “கேட்டோம் அதற்கு மாறு செய்வோம்” என்று தங்களின் நாவைக் கோணி இரு அர்த்தங்கள் தரும் வகையில் கேலி செய்து, அவற்றை மறுப்பது போல் பேசி வருகிறார் கள். மேலும், “நீங்கள் எங்கள் பேச்சை முதலில் கேளுங்கள் அப்புறம் நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்கிறோம்” என்று நிபந்தனையிட்டுப் பேசுகின்றனர்.
وَلَوۡ أَنَّهُمۡ قَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَا وَٱسۡمَعۡ وَٱنظُرۡنَا لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَقۡوَمَ وَلَٰكِن لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا٤٦
மாறாக, “நாம் இறைச் சொல்லை செவி மடுத்தோம் இன்னும் அதன் படி செயல்படுவோம். இருப்பினும் நம் பேச்சையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர நாடுகிறோம். நம்மையும் நீங்கள் கனிவோடு கவனியுங்கள்” (பார்க்க –2:104) என்று பெருந்தன்மையோடு பேசி இருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். மேலும் அது அவர்களுக்கு நன்மை அளிப்பதாகவும் இருந்திருக்குமே. ஆனால் அவர்களின் பேச்சுத் தரமும் கெட்டுப் போய் இருக்கிறது. அதனால் சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் இழந்து இழிவிற்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உண்மையை அவர்களுள் சிலரைத் தவிர பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதாக இல்லை.
4:47يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ ءَامِنُواْ بِمَا نَزَّلۡنَا مُصَدِّقٗا لِّمَا مَعَكُم
4:47. சமய நூல்கள் வழங்கப்பட்டவர்களே! உங்களிடமுள்ள வேதத்தில் சொல்லப்பட்டவற்றை நடைமுறைப்படுத்தி, உண்மைப்படுத்திக் காட்டவே இவ்வேதம் அளிக்கப்படுகிறது. இதை முழு மனதோடு ஏற்று செயல்பட முன்வாருங்கள். இல்லை என்றால் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். அதாவது சத்தியம் நிலைக்கும், அதர்மம் அழியும், இந்த உலகில் அல்லாஹ்வின் செயல்திட்டப் படியே எல்லாம் செயல்படும். இது போன்ற விஷயங்கள் உங்கள் வேதங்களிலும் உள்ளன. இதை உண்மைப்படுத்தவே இவ்வேதம் அருளப்படுகிறது.
مِّن قَبۡلِ أَن نَّطۡمِسَ وُجُوهٗا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدۡبَارِهَآ أَوۡ نَلۡعَنَهُمۡ كَمَا لَعَنَّآ أَصۡحَٰبَ ٱلسَّبۡتِۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولًا٤٧
உங்களுடைய நிலைமை மோசமடைவதற்கு முன், இதை சிந்தித்து ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இறுதியில், “அஸ்ஹாபுஸ் ஸப்த்” போன்ற உங்கள் முன்னோர்களுக்கு ஏற்பட்ட கதியே உங்களுக்கும் ஏற்பட்டுவிடும். அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தையும் இழந்து, வானரங்கள் மற்றும் பன்றிகள் போன்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு, கொத்தடிமையாகவே வாழ நேர்ந்தது என்பது வரலாறாகும். (பார்க்க 7:166&167) இது வெறும் அச்சுறுத்தல் அல்ல. அல்லாஹ்விட மிருந்து வரும் அறிவிப்புகளாகும். இவ்வாறு நடந்தே தீரும்.
4:48إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰٓ إِثۡمًا عَظِيمًا٤٨
4:48. நினைவில் கொள்ளுங்கள்! சிறு சிறு தவறுகள் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உங்களால் மீளமுடியும். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் பின்பற்றினால் அது இணை வைத்தலே ஆகும். இத்தகையவர்களுக்கு உலகில் பாதுகாப்பான வாழ்க்கை ஒருபோதும் கிடைக்காது. சிறு சிறு பிழைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் கிடைக்கலாமே அன்றி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளை பின்பற்றி செயல்படும் சமுதாயங்கள் பலம் இழந்து அழிவைத் தான் சந்திக்க நேரிடும்.
4:49أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمۚ بَلِ ٱللَّهُ يُزَكِّي مَن يَشَآءُ وَلَا يُظۡلَمُونَ فَتِيلًا٤٩
4:49. ஆக கற்பனையின் அடிப்படையில் உருவாகிய வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களின் மனோ நிலையைக் கவனித்தீர்களா? அவர்கள் கடைப்பிடித்து வரும் ஆன்மிக வழிமுறைகளைக் கொண்டே மனித நேயம் வளர்ந்து வருவதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் மனித மாண்புகளின் மேம்பாட்டிற்குத் தேவையான கொள்கை கோட்பாடுகள் இவ்வேதத்தில் அருளப்பட்டுள்ளன. இதை பின்பற்றுவதைக் கொண்டே மனித ஒழுக்கத்தையும் மாண்புகளையும் வளர்க்க முடியும் . மனித நேயம் வளர முயல்பவர்களுக்கே அதன் பலன்கள் கிடைக்கும். இதில் சிறிதளவும் குறை வைக்கப்பட மாட்டாது.
4:50ٱنظُرۡ كَيۡفَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَكَفَىٰ بِهِۦٓ إِثۡمٗا مُّبِينًا٥٠
4:50. ஆனால் “இறைவழிபாடு” என்ற பெயரில் இவர்களே சில வழிமுறைகளை உருவாக்கி வைத்துக் கொண்டு, அதை அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளதாக இட்டுக் கட்டிக் கூறி வருவதையும் கவனியுங்கள். இது எவ்வளவு பெரிய அபாண்டமான பொய்யாகும். இதனால் அல்லாஹ்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இதுவே அவர்களுடைய அழிவிற்கு காரணியாக அமைந்துவிடும்.
4:51أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُواْ نَصِيبٗا مِّنَ ٱلۡكِتَٰبِ يُؤۡمِنُونَ بِٱلۡجِبۡتِ وَٱلطَّٰغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُواْ هَٰٓؤُلَآءِ أَهۡدَىٰ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ سَبِيلًا٥١
4:51. வேதத்தின் ஒரு பகுதியைப் பெற்றவர்களின் செயல்பாடுகளைக் கவனியுங்கள். யாதொரு பலனும் அளிக்காத சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபட்டுள்ளார்கள். அல்லாஹ் அல்லாத பிறரை தெய்வங்களாகவும், மத குருமார்கள் மற்றும் தன்னிச்சையாக செயல்படும் தலைவர்கள் ஏற்படுத்தி உள்ள ஷரீஅத் சட்டங்களையும் ஏற்று செயல்படுகிறார்கள். வேடிக்கை என்ன வென்றால் இந்தக் குர்ஆனை ஏற்று செயல்படும் உங்களைவிட அவர்களே மேல் என்றும், அவர்களே நேரான பாதையில் இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.
4:52أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُۖ وَمَن يَلۡعَنِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ نَصِيرًا٥٢
4:52. இவர்கள் தாம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து நிற்பவர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு, அவனது அருட்கொடைகளை இழந்து நிற்கும் சமூகத்தவர்களுக்கு உதவி செய்வோர் வேறு யார் இருக்க முடியும்?
அதாவது நடப்பவை எல்லாம் இறைவனின் நாட்டப்படி தான் என எண்ணி எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் தாம் அருட்கொடைகளை இழந்து நிற்பவர்கள் ஆவார்கள்.
4:53أَمۡ لَهُمۡ نَصِيبٞ مِّنَ ٱلۡمُلۡكِ فَإِذٗا لَّا يُؤۡتُونَ ٱلنَّاسَ نَقِيرًا٥٣
4:53. நல்லவேளை இப்படிப்பட்டவர்களிடம் ஆட்சிஅதிகாரம் எதுவுமில்லை அவ்வாறு இருந்திருந்தால் அதன் மூலம் செல்வங்களைக் குவித்து வைத்துக் கொண்டு அதிலிருந்து சல்லிக் காசும் கொடுத்து உதவி இருக்க மாட்டார்கள்.
4:54أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ فَقَدۡ ءَاتَيۡنَآ ءَالَ إِبۡرَٰهِيمَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَءَاتَيۡنَٰهُم مُّلۡكًا عَظِيمٗا٥٤
4:54. உண்மை நிலவரம் என்னவென்றால் அல்லாஹ்வின் நியதிப் படி இறை வழிகாட்டுதல்கள் என்ற அருட்கொடைகளைப் பெற்றிருக்கும் உங்களைப் பார்த்து, அவர்கள் பொறாமைப் படுகிறார்கள். இந்த அருட்கொடைகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குத் தான் கிடைக்கும் என்று நினைக்கிறார்களா? அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, அதைப் பின்பற்றி நடந்த இப்ராஹீம் மற்றும் அவருடைய சந்ததியர்களுக்கும் கிடைத்தன. அதுமட்டுமின்றி அவர்களுக்கு வேத உபதேசங்களும் அவற்றின் ஞானமும் அளிக்கப்பட்டன. கூடவே மாபெரும் ஆட்சி அதிகார மும் கிடைத்தன.
4:55فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ بِهِۦ وَمِنۡهُم مَّن صَدَّ عَنۡهُۚ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا٥٥
4:55. அவருக்குப் பின் வந்த சந்ததியர்களில் சிலர் இறைவழிகாட்டுதலின் படியே செயல்பட்டு சிறப்பாக வாழ்ந்தவர்களும் உண்டு. காலப் போக்கில் அவற்றைப் புறக்கணித்து அழிவை தேடிக் கொண்டவர்களும் உண்டு. அவர்களுக்கு ஏற்பட்ட இழிநிலையும் வேதனைகளுமே அதற்குப் போதுமான சான்றுகளாகும்.
4:56إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَِٔايَٰتِنَا سَوۡفَ نُصۡلِيهِمۡ نَارٗا كُلَّمَا نَضِجَتۡ جُلُودُهُم بَدَّلۡنَٰهُمۡ جُلُودًا غَيۡرَهَا لِيَذُوقُواْ ٱلۡعَذَابَۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمٗا٥٦
4:56. நிச்சயமாக இறை வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுபவர்கள் தோல்வியையும் நரக வேதனைகளை சந்திக்க நேரிடும். அப்போது அவர்கள் தம் சக்தியை இழந்துவிடுவார்கள். மீண்டும் அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டும் நீதமான முறையில் நடைபெறும் அரசமைப்புடன் மோதும் போது மீண்டும் தோல்வியைத் தழுவி சக்தி இழந்து உருக்குலைந்து போவார்கள். இவ்வாறாக அவர்கள் திரும்ப திரும்ப மோதும் போது தோல்விகளையும் வேதனைகளையும் ருசிக்க நேரிடும். ஏனெனில் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற சட்டம் எக்காலத்திலும், உலகில் எல்லாப் பகுதி மக்களுக்கும் பொருந்தக் கூடியதும், நிலைமாறாததும் ஆகும்.
4:57وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَنُدۡخِلُهُمۡ ظِلّٗا ظَلِيلًا٥٧
4:57. இதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி தலைசிறந்த சமுதாயம் உருவாக செயல் திட்டங்களைத் தீட்டி, ஆற்றல் மிக்க செயல்களைச் செய்வோரின் சமுதாயம், சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அவர்கள் வாழும் நாட்டில் பொருளாதாரம் வற்றாத ஜீவநதி போல் பெருகி வரும். அது மட்டுமின்றி அச்சுவனத்தில் தூய உள்ளம் படைத்த சக தோழர்களும் வந்து இணைவார்கள். (பார்க்க 110:1-2) அவர்களுக்கு இறைவனின் அருளும் மனக் குளிர்ச்சியும் கூடிய வளமான வாழ்வும் கிடைக்கும்.
4:58۞إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا وَإِذَا حَكَمۡتُم بَيۡنَ ٱلنَّاسِ أَن تَحۡكُمُواْ بِٱلۡعَدۡلِۚ إِنَّ ٱللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ كَانَ سَمِيعَۢا بَصِيرٗا٥٨
4:58. இவ்வாறாக அவர்கள் வாழும் இடம் சுவர்க்க பூமியாக உருவாகி வரும். அதன் நிர்வாகப் பொறுப்பு, அதை வழிநடத்திச் செல்லும் தகுதி உடையவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். இரண்டாவதாக மக்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்ப்பு வழங்கும் போது, அல்லாஹ் அறிவித்துள்ள சட்டங்களின் படியே நியாயமான தீர்ப்பே வழங்க வேண்டும். அதுவும் அந்த தீர்ப்பு தீவிர விசாரணைக்குப் பின் மக்களுக்கு துரிதமாக கிடைக்க வேண்டும். இவை யாவும் அல்லாஹ்வின் நல்லுபதேசங்களாகும். இவற்றை எப்போதும் பேணி நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை மட்டும் மறவாதீர்.
4:59يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ
4:59. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே அடிபணிந்து செயல்பட வேண்டும். மேலும் அதன் அடிப்படையில் இறைத்தூதர் உருவாக்கும் ஆட்சியமைப்புச் சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுவதும் மிகவும் அவசியமாகும். அது மட்டுமின்றி இந்த ஆட்சி அமைப்பின் கீழ் செயல்படும் அதிகாரிகளுக்கும் நீங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள்.
فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا٥٩
ஒருவேளை அதிகாரிகள் எடுத்த முடிவில் உங்களுக்கு உடன்பாடு இல்லாது போனால், ஆட்சியமைப்பின் உயர் அதிகாரிகளிடம் மேல்முறையிடுங்கள். அங்கு அல்லாஹ்வின் சட்டங்களின் படி சரியான தீர்வு கிடைத்து விடும் (பார்க்க -42:10). மேலும் உயர்மட்ட குழு எடுக்கும் தீர்ப்பே இறுதியானது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாகாது. அதன் தீர்ப்பே இறுதியானது. ஏனெனில் அவர்கள் செய்யும் தீர்ப்பு அல்லாஹ்வின் சட்டத்திற்கு உட்பட்டே இருக்கும். (விளக்கம் 3:32) எனவே அல்லஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட நீங்கள் இந்த தீர்ப்பிற்கு எதிராக விமர்சிக்காதீர்கள். (பார்க்க– 4:65, 33:36)
இதுவே தலைசிறந்த சமுதாயம் உருவாவதற்குத் துணை நிற்கும். மேலும் அல்லாஹ்வையும் “மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக்கொண்டதற்கு இதுவே உண்மையான அர்த்தமாகும்.
4:60أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزۡعُمُونَ أَنَّهُمۡ ءَامَنُواْ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓاْ إِلَى ٱلطَّٰغُوتِ وَقَدۡ أُمِرُوٓاْ أَن يَكۡفُرُواْ بِهِۦۖ وَيُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُضِلَّهُمۡ ضَلَٰلَۢا بَعِيدٗا٦٠
4:60. இவை தான் மூஃமின்களின் நன்நடத்தையாகும். இதற்கு மாறாக இந்தக் குர்ஆனையும் இதற்கு முன்வந்த வேதத்தையும் உதட்டளவில் ஏற்றுக் கொள்வதாக வாதிடுபவர்களின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். தமக்குச் சாதகமாக தாமே உருவாக்கி வைத்துள்ள ஷரீஅத் சட்டங்களுக்கு ஏற்ப, தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். உண்மை விஷயம் என்னவென்றால், இறைச் சட்டங்களுக்கு மாற்றமான தீர்ப்புகளை வழங்கக் கூடாது என்று அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இறைக் கட்டளைக்குப் பதிலாக தம் மனோ இச்சையின் படி வாழவே விரும்புகிறார்கள். இப்படி செயல்படுவதால் அவர்கள் அனைவரும் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விடுகிறார்களே! இதைப் பற்றி அவர்கள் சிந்தித்து உணர மாட்டார்களா?
4:61وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيۡتَ ٱلۡمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودٗا٦١
4:61. அவர்களிடம் அல்லாஹ்வின் கொள்கை கோட்பாடுகளையும் அவற்றை நடைமுறைப்படுத்த இறைத்தூதர் ஏற்படுத்தும் ஆட்சியமைப்புச் சட்டங்களையும் ஏற்று அதன்படி செயலாற்றுங்கள் என்று கூறினால், அவர்களோ இவற்றை விட்டு விலகி இருக்கவே நாடுகிறார்கள். இறைத்தூதரே! நீரும் இதைப் பார்க்கின்றீர். அவர்கள் தம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உம்மிடம் வருவதை விரும்பாமல் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். இது நயவஞ்சகத்தனம் அல்லவா?
4:62فَكَيۡفَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ ثُمَّ جَآءُوكَ يَحۡلِفُونَ بِٱللَّهِ إِنۡ أَرَدۡنَآ إِلَّآ إِحۡسَٰنٗا وَتَوۡفِيقًا٦٢
4:62. இப்படியாக இவர்கள் செய்து வந்த தீய செயல்களால் துன்பம் ஏற்படும் போது, இவர்கள் உம்மிடம் வந்து, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் சமூக நல்லிணக்கத்தையும் நன்மையையும் தவிர வேறெதையும் நாடவில்லை” என்று கூறுவார்கள்.
4:63أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَعۡلَمُ ٱللَّهُ مَا فِي قُلُوبِهِمۡ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَعِظۡهُمۡ وَقُل لَّهُمۡ فِيٓ أَنفُسِهِمۡ قَوۡلَۢا بَلِيغٗا٦٣
4:63. ஆனால் அவர்கள் உள்ளங்களில் இருப்பதும், உதடுகளில் வெளிவருவதும் எல்லாம் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். (பார்க்க – 63:1) எனவே இப்படிப்பட்ட நயவஞ்சகர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது. இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் சிறப்புகளையும் அவற்றை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் தொடர்ந்து எடுத்துரைப்பீராக. எதுவரை மனமாற்றம் ஏற்படுவதில்லையோ அதுவரை சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியாது. எனவே இறைவழிகாட்டுதலை மனதில் பதியும்படி தெளிவாக எடுத்துரையுங்கள்.
4:64وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذۡنِ ٱللَّهِۚ وَلَوۡ أَنَّهُمۡ إِذ ظَّلَمُوٓاْ أَنفُسَهُمۡ جَآءُوكَ فَٱسۡتَغۡفَرُواْ ٱللَّهَ وَٱسۡتَغۡفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُواْ ٱللَّهَ تَوَّابٗا رَّحِيمٗا٦٤
4:64. இதற்கு முன் வந்த ஒவ்வொரு இறைத்தூதரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே இணங்கி மக்களை வழிநடத்தி, சீர்திருத்தம் செய்தே வந்தார்கள். எனவே இறைத் தூதரைப் பின்பற்றுவது இறைவனைப் பின்பற்றுவதற்கு ஒப்பானதாகும். எனவே ஒருவர் தமக்குத் தாமே தீங்கிழைத்திருந்தால் அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்று உம்மிடம் வந்து கேட்டிருந்தால், நீரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி அதன் விளைவுகளிலிருந்து நிவாரணம் பெற என்ன வழிமுறையை கையாள வேண்டும் என்பதை கூறியிருப்பாய். காரணம் பிரச்சனைக்குத் தீர்வு பெற விரைந்து, அதற்கேற்ப செயல்பட அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் வழிமுறைகள் உள்ளன. இது அல்லாஹ்வின் மாபெரும் கிருபைய ஆகும் அல்லவா?
ஒருவர் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து, பாவகர செயல்களைச் செய்தால், அதன் பாதிப்புகள் ஏற்படாமல் போகாது. இப்படியாக அவர் தம்மை தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். அவர் வீட்டில் ஒரு மூலையில் அமர்ந்த படியே, பாவ மன்னிப்புக் கோரி சில வார்த்தைகளை ஜபித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்ற எண்ணத்தில் இருப்பார். ஆனால் அவர் தம் வாழ்வில் செய்த பாவச் செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபோதும் நீங்காது. எனவே அவர் அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் சட்டப் படி அதற்குப் பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து பாதிக்கப்பட்டவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அதற்கேற்ப ஆக்கப்பூர்வமான நன்மையான செயல்களைச் செய்தால், நன்மையின் எடைத் தட்டை மிகைக்கச் செய்து, அவரிடமுள்ள பாவச் சுமைகள் குறைந்து பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழி பிறக்கும். (பார்க்க – 25:70)
4:65فَلَا وَرَبِّكَ لَا يُؤۡمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيۡنَهُمۡ ثُمَّ لَا يَجِدُواْ فِيٓ أَنفُسِهِمۡ حَرَجٗا مِّمَّا قَضَيۡتَ وَيُسَلِّمُواْ تَسۡلِيمٗا٦٥
4:65. ஆக மக்களிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்குத் தீர்வு காண சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவராகிய உம்மை நீதிபதியாவும் தலைவராகவும் மக்கள் ஏற்றுக்கொள்ள அல்லாஹ்வின் புறத்திலிருந்தே அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் சட்டப் படி அவர் தீர்ப்பு அளிப்பதால், அந்த தீர்ப்பைப் பற்றி யாரும் அதிருப்தி அடையக் கூடாது. அந்த தீர்ப்புகளை நீங்கள் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். (பார்க்க – 33:36 & 24:63)
4:66وَلَوۡ أَنَّا كَتَبۡنَا عَلَيۡهِمۡ أَنِ ٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ أَوِ ٱخۡرُجُواْ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٞ مِّنۡهُمۡۖ وَلَوۡ أَنَّهُمۡ فَعَلُواْ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَشَدَّ تَثۡبِيتٗا٦٦
4:66. மேலும் மனிதகுல மேம்பாட்டிற்காக அத்தகைய சமூக அமைப்பு உருவாக தம் ஆசைகளை புறந்தள்ளி விட்டு, அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, தம் வீட்டை விட்டு வெளியேறி, பொது வாழ்வில் ஈடுபட கட்டளை இடப்பட்டால், சிலரைத் தவிர பெரும்பாலோர் அவ்வாறு செய்யவில்லை. அதாவது மிகச் சிலரே அல்லாஹ்வின் கட்டளைக்கு முழு அளவில் அடிபணிந்து செயல்படுகிறார்கள். அல்லாஹ்வின் அறிவுரையின் படி செயல்பட்டால் அவர்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும். ஆக சமுதாய நலனில் பங்கெடுத்துக் கொள்ள மன உறுதியும் செயல் வேகமும் மிகவும் அவசியமானவை ஆகும்.
4:67وَإِذٗا لَّأٓتَيۡنَٰهُم مِّن لَّدُنَّآ أَجۡرًا عَظِيمٗا٦٧
4:67. அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி பொதுப் பணியில் ஈடுபட்டு இருந்தால், “மனித செயல்களுக்குரிய பலன்கள்” என்ற விதி முறைகளின் படி நன்மைகள் பல கிடைத்துக் கொண்டே இருக்கும்.
4:68وَلَهَدَيۡنَٰهُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا٦٨
4:68. அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்வின் சரியான இலக்கு என்ன என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கும். அதை அடைய சரியான பாதை என்ன என்பதும் அனுபவ ரீதியாகத் தெரிந்திருக்கும்.
4:69وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّۧنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَۚ وَحَسُنَ أُوْلَٰٓئِكَ رَفِيقٗا٦٩
4:69. இத்தகையவர்களே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறும் பாக்கியம் உடையவர்கள் ஆவார்கள். அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நேரடியாகப் பெற்று செயல்பட்ட நபிமார்கள் அவற்றை உண்மைபடுத்திக் காட்டிய ஸித்தீஃகீன்கள், அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆட்சி அமைப்பு சிறப்பாகச் செயல்பட தம் வாழ்வை அர்ப்பணித்த ஷுஹதாக்கள், மற்றும் சமுதாய மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களில் அல்லும் பகலும் பாடுபட்ட ஸாலிஹீன்கள் ஆகியவர்களே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்று சிறப்பாக வாழ்ந்து, உலக வரலாற்றில் “சான்றோர்கள்” என்ற முத்திரை பதித்துச் சென்றவர்கள் ஆவார்கள். ஆக யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆட்சியமைப்புச் சட்டங்களையும் பின்பற்றி அதற்காக துணைபுரிந்து செயல்படுகிறார்களோ, அவர்கள் அனைவரும் மேற்சொன்ன அல்லாஹ் வின் அருட்கொடைகளைப் பெற்ற சான்றோர்களின் பட்டியலில் இடம் பெறுவர். யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கிறதோ, அவருக்கு இதைவிட சிறப்பான சந்தோஷம் வேறு என்னவாக இருக்க முடியும்?
4:70ذَٰلِكَ ٱلۡفَضۡلُ مِنَ ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ عَلِيمٗا٧٠
4:70. அல்லாஹ்வின் இந்த நற்பேறுகளையும், அருட்கொடைகளையும் நாடி உழைப்பவர்கள் அனைவரும் இதற்குத் தகுதியானவர்கள். இது வெறும் வாய்ச் சொற்கள் அல்ல. அனைத்து ஞானங்களையும் உடைய அல்லாஹ்வின் உறுதி மொழியாகும். இதுவே போதுமானதாகும்.
4:71يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ خُذُواْ حِذۡرَكُمۡ فَٱنفِرُواْ ثُبَاتٍ أَوِ ٱنفِرُواْ جَمِيعٗا٧١
4:71. அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பை கட்டிக் காப்பதற்காக முன்னெச் சரிக்கையும் முன்னேற்பாடுகளும் அவசியமான ஒன்றாகும். இதற்காக நீங்கள் அனைத்து உபாயங்களையும் பயிற்சிகளையும் ஒழுங்கு படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். தேவை ஏற்படின் தற்காப்புக்காக களத்தில் இறங்கவும் தயாராக இருக்கவேண்டும். அதுசமயம் தேவைக்கு ஏற்ப பிரிவுகளாகவோ (Battalion) அனைவரும் ஒன்று சேர்ந்தோ களத்தில் இறங்கலாம்.
இதற்குக் காரணம் என்னவென்றால், உங்களில் சிலர் களத்தில் இறங்க தயக்கம் காட்டலாம். ஏதாவது காரணம் காட்டி பின்தங்கியும் விடலாம். இதனால் மற்றவர்களை அது பாதிக்கும்.
4:72وَإِنَّ مِنكُمۡ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنۡ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَالَ قَدۡ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيَّ إِذۡ لَمۡ أَكُن مَّعَهُمۡ شَهِيدٗا٧٢
4:72. மேலும் போரில் ஏதாவது துயரச் சம்பவம் நிகழ்ந்தால், பின்தங்கியவர்களில் சிலர், “நாம் அவர்களோடு போரில் கலந்து கொள்ளாதது அல்லாஹ் நமக்கு அளித்த அருளாகும்” என்று பேசிக் கொள்வார்கள்.
4:73وَلَئِنۡ أَصَٰبَكُمۡ فَضۡلٞ مِّنَ ٱللَّهِ لَيَقُولَنَّ كَأَن لَّمۡ تَكُنۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُۥ مَوَدَّةٞ يَٰلَيۡتَنِي كُنتُ مَعَهُمۡ فَأَفُوزَ فَوۡزًا عَظِيمٗا٧٣
4:73. அவ்வாறே அல்லாஹ்வின் அருளைக் கொண்டு வெற்றி கிடைத்து விட்டால், “நாமும் அதில் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே. அந்த வெற்றியில் நமக்கும் பெரும் பாக்கியம் கிடைத்திருக்குமே” என்று ஏங்குவார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே எந்த ஒட்டும் உறவும் இல்லாதது போலவே பேசுவார்கள்.
4:74۞فَلۡيُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يَشۡرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا بِٱلۡأٓخِرَةِۚ وَمَن يُقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَيُقۡتَلۡ أَوۡ يَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا٧٤
4:74. உண்மை என்னவென்றால் இவர்கள் நிலையான சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கைக்குப் பதிலாக, தற்காலிக சுக வாழ்விற்கே முக்கியத்துவம் அளிப்பவர்கள். ஆனால் மூஃமின்கள், தம் வாழ்வை அர்ப்பணித்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இதில் இரு வகையான பலன்கள் உண்டு. போரில் வெற்றி பெற்றால் மிகச் சிறப்பான வாழ்க்கை இவ்வுலகில் கிடைக்கும். ஒருவேளை அதில் மாண்டு போனாலும் அல்லாஹ்விடத்தில் அதற்குரிய சன்மானங்கள் நிச்சயமுண்டு.
4:75وَمَا لَكُمۡ لَا تُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيّٗا وَٱجۡعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا٧٥
4:75. அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்ட மக்கமா நகர மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஊரைவிட்டு வெளியே வர இயலாத முதியவர்களும், சிறு பிள்ளைகளும் அக்கிரமக்காரர்களால் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றும் படி இறைவனிடம் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டு இருக்கின்றனர். “எங்களை பரிபாலிப்பவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இந்த ஊரை விட்டு வெளியேற எங்களுக்கு உதவி செய்வாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் உன்னிடமிருந்து உதவியாளனையும் அனுப்பி வைப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்களுடைய கூக்குரல் இவ்வாறு இருக்க, அல்லாஹ்வின் பாதையில் அக்கிரமக்காரர்களை எதிர்த்து போரிடுவதற்கு புறப்படாமல் இருக்க இந்த மூஃமின்களுக்கு என்ன வந்தது? உலகில் நிகழும் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் அழிக்கத்தானே போர் எனும் உபாயம்? (பார்க்க 22:39)
பொதுவாக போரை யாரும் விரும்ப மாட்டார்கள். காரணம் அதில் உயிர்ச் சேதமும் பொருட் சேதங்களும் ஏற்படுகின்றன. ஆனால் யார் யாருக்கு எதிராக எதற்காகப் போரிடுகிறார்கள் என்பதே கவனிக்க வேண்டிய விஷயமாகும். இரண்டாவதாக, உலகில் துயரத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற மனிதன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைவனுடைய உதவி நேரடியாக இல்லாமல், தான் உருவாக்கிய சட்டத்தின் படி உதவியாளர்கள் மூலமாகத் தான் வரும் என்று இவ்வாசகத்திலிருந்து நமக்குப் புலனாகிறது. (மேலும் பார்க்க 2:251)
4:76ٱلَّذِينَ ءَامَنُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱلطَّٰغُوتِ فَقَٰتِلُوٓاْ أَوۡلِيَآءَ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّ كَيۡدَ ٱلشَّيۡطَٰنِ كَانَ ضَعِيفًا٧٦
4:76. ஆக ஒரு பிரிவினர் உலகில் நிகழும் அநியாயத்தையும் அட்டூழியத்தையும் ஒழித்துக் கட்ட போரிடுகிறார்கள். இது அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்பதாகும். மற்றொரு பிரிவினர் எத்தேச்சதிகார ஆட்சிமுறை மற்றும் அங்கு நடைபெற்று வரும் அடக்குமுறை ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போரிடுவார்கள். இது தாஃகூத்திய ஆட்சியாளரின் படை எனப்படும். ஆக மூஃமின்களே! நீங்கள் எப்போதும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். போருக்கான எல்லா உபாயங்களையும் பயிற்சிகளையும் அளித்து உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பகைவர்களிடம் பல்வேறு பலவீனங்கள் இருக்கும். இதனால் அவர்கள் உங்களை வெற்றி கொள்வது சாத்தியமல்ல.
4:77أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ قِيلَ لَهُمۡ كُفُّوٓاْ أَيۡدِيَكُمۡ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ إِذَا فَرِيقٞ مِّنۡهُمۡ يَخۡشَوۡنَ ٱلنَّاسَ كَخَشۡيَةِ ٱللَّهِ أَوۡ أَشَدَّ خَشۡيَةٗۚ وَقَالُواْ رَبَّنَا لِمَ كَتَبۡتَ عَلَيۡنَا ٱلۡقِتَالَ لَوۡلَآ أَخَّرۡتَنَآ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖۗ قُلۡ مَتَٰعُ ٱلدُّنۡيَا قَلِيلٞ وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّمَنِ ٱتَّقَىٰ وَلَا تُظۡلَمُونَ فَتِيلًا٧٧
4:77. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முதலில் சமுதாயத்தை உருவாக்கி, சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்காக செலவு செய்ய சொல்லப் பட்டது. அப்போது போரிடும் நிலை ஏற்படவில்லை. ஆனால் போரிடும் கட்டாயம் ஏற்பட்டதும் போருக்காக அழைப்பு விடுத்த போது, அவர்களுடைய நிலையை நீர் கவனித்தீரா? அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுவது போல் அதைவிட அதிகமாகவே மக்களுக்கு பயப்பட்டு, “எங்கள் இறைவனே! எங்கள் மீது நீ போரை ஏன் விதியாக்கினாய்? இன்னும் சிறிது காலம் எங்களுக்காக பிற்படுத்தியிருக்கக் கூடாதா?” என்று கூறுகிறார்கள். நீர் அவர்களிடம், “வருங்காலத்தில் கிடைக்க விருக்கும் நிலையான பலன்களுக்காக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தற்காலிக உலக சுகத்தை தியாகம் செய்வது அவர்களுடைய நன்மைக்கே என்றும், அவர்கள் அணு அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் என்றும்” கூறுவீராக.
4:78أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ مُّشَيَّدَةٖۗ
4:78. இப்போது மிஞ்சி நிற்பது போர்க் களத்தில் ஏற்படும் மரண பயம் பற்றியதாகும். மரணம் யாரை விட்டு வைக்கப் போகிறது? ஒரு நாள் இல்லை ஒரு நாள் மரணம் சம்பவித்தே தீரும். யார் எங்கு இருந்த போதிலும் சரியே. உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டையில் இருந்தாலும் சரியே. மரணம் உங்களை அடைந்தே தீரும்.
உண்மை இவ்வாறிருக்க, கோழைகளாய் நூறாண்டுகள் வாழ்வதை விட சிறந்த செயல் வீரனாய் ஒரே ஒரு நாள் வாழ்வதே மேல் அல்லவா? உயர் இலட்சியத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணிப்பதைக் கொண்டே மனிதனுக்கு நிலையான வாழ்க்கை கிடைக்கிறது என்பது தான் உண்மை.?
وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلّٞ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثٗا٧٨
இப்போது இவர்களுடைய போக்கு எவ்வாறு இருக்கின்றது தெரியுமா? இவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் போது, இதில் இந்த இறைத்தூதரின் பங்கு என்ன இருக்கின்றது? எல்லாமே இறைவன் புறத்திலிருந்து கிடைப்பவை என்கிறார்கள். இவர்களுக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால், உடனே இவை இறைத் தூதரின் தவறான வழிகாட்டுதலால் தான் என்று அவர் மீது பழி சுமத்துகிறார்கள். உண்மை அதுவல்ல. மனிதச் செயல்களுக்கு ஏற்பத் தான் விளைவுகள் ஏற்படும். நற்செயல்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தவறான செயல்களுக்கு தீய விளைவுகள். ஆக இவை இரண்டுமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிலை நிறுத்தப்பட்ட சட்டமாகும். (குல்லும் மின் இன்தல்லாஹ்) இந்த மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது. இதைக் கூட அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே.
4:79مَّآ أَصَابَكَ مِنۡ حَسَنَةٖ فَمِنَ ٱللَّهِۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٖ فَمِن نَّفۡسِكَۚ وَأَرۡسَلۡنَٰكَ لِلنَّاسِ رَسُولٗاۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا٧٩
4:79. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயலாற்றினால் அவை நற்பலன்களையே தரும். யார் இதற்கு மாற்றமாகத் தம் சுயவிருப்பப் படி செயல்படுகிறார்களோ, அதற்கு ஏற்ப பின்விளைவுகள் தான் ஏற்படும். எனவே உங்களுக்கு வந்தடையும் துயரங்கள் யாவும் நீங்கள் உங்கள் கைகளால் சம்பாதித்தவையே ஆகும். (பார்க்க – 42:30) அல்லாஹ்வின் புறத்திலிருந்து அணு அளவும் அநியாயம் நிகழ்வதில்லை. (பார்க்க – 4:40). அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ப விளைவுகள்” என்ற சட்டத்தைப் பற்றிய உண்மையை இதற்கு முன் வந்த நபிமார்களும் அவரவர் சமூகத்தார்க்கு எடுத்துரைத்து வந்தனர் (பார்க்க 7:131) இந்த உண்மையை எடுத்துக் கூறி செயல்பட வைக்கவே இந்த இறைத் தூதரும் வந்துள்ளார். இவரும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படியே செயல்படுகிறார். (பார்க்க 6:106) எனவே அவர் புறத்திலிருந்து தவறு ஏற்பட வாய்ப்பில்லை என்பதற்கு அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமே சாட்சியாக இருக்கிறது.
4:80مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا٨٠
4:80. எனவே யார் இறைத் தூதரைப் பின்பற்றுகிறாரோ, அவர் அல்லாஹ்வைப் பின்பற்றுவதற்கு சமம் ஆகும். யார் இதற்கு மாற்றமாக செயல் படுகிறாரோ, அதன் பின் விளைவுகளுக்கு அவரே பொறுப்பாளி ஆவார். சமுதாயத்தை வழிநடத்தி செலபவரே! நாம் உம்மை அவர்களின் பொறுப்பாளராக அனுப்ப வில்லை.
4:81وَيَقُولُونَ طَاعَةٞ فَإِذَا بَرَزُواْ مِنۡ عِندِكَ بَيَّتَ طَآئِفَةٞ مِّنۡهُمۡ غَيۡرَ ٱلَّذِي تَقُولُۖ وَٱللَّهُ يَكۡتُبُ مَا يُبَيِّتُونَۖ فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا٨١
4:81. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! உம்மைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்களில் சிலர், உம்மை விட்டு விலகிச் சென்றதும் உமக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டுகின்றனர். அதிலேயே தம் இரவுப் பொழுதையும் கழிக்கின்றனர். அவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் பதிவாகி வருகின்றன. அவர்களுடைய சதித் திட்டங்களை நீர் பொருட்படுத்தாதீர். அல்லாஹ்வின் செயல் திட்டங்களில் முழு கவனம் செலுத்தி வாரீர். அதன்படி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளே அவர்கள் தீட்டும் சதி திட்டங்களை முறியடிக்க போதுமானது.
இப்படியாக இவர்களின் செயல்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். நிமிடத்திற்கு ஒரு பேச்சும், நேரத்திற்கு தகுந்தாற் போல் செயலும், நிலையற்ற தன்மைகளும் காணப்படும். இப்படித் தான் இவர்களுடைய உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருக்கும். சமுதாயத்தில் எத்தனையோ முரண்பட்ட கருத்துகளும் செயல்பாடுகளும் நிலவி வரும். அவற்றிற்கு தீர்வுகள் எதுவும் அவர்களிடம் இருக்காது.
4:82أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَۚ وَلَوۡ كَانَ مِنۡ عِندِ غَيۡرِ ٱللَّهِ لَوَجَدُواْ فِيهِ ٱخۡتِلَٰفٗا كَثِيرٗا٨٢
4:82. ஆனால் குர்ஆனின் நிலை அவ்வாறில்லை. இதை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எங்கும் முரண்பட்ட கருத்துகள் இருப்பதாகக் காண மாட்டீர்கள். துவக்கம் முதல் கொண்டு கடைசி வரை உள்ள கொள்கை கோட்பாடுகள் ஒரே அடிப்படையில் தான் இருக்கும். ஆனால் அது பல கோணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ளன என்பதற்கு இதுவே ஆதாரமாகும். அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகள் இருந்திருக்கும்.
குர்ஆனின் மூலமொழியான அரபி மொழியில் சொல்லப்பட்ட விஷயங்களில் எங்கும் முரண்பாடுகள் இல்லை என்பது இதிலிருந்து புலனாகிறது.
4:83وَإِذَا جَآءَهُمۡ أَمۡرٞ مِّنَ ٱلۡأَمۡنِ أَوِ ٱلۡخَوۡفِ أَذَاعُواْ بِهِۦۖ وَلَوۡ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُوْلِي ٱلۡأَمۡرِ مِنۡهُمۡ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسۡتَنۢبِطُونَهُۥ مِنۡهُمۡۗ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَٱتَّبَعۡتُمُ ٱلشَّيۡطَٰنَ إِلَّا قَلِيلٗا٨٣
4:83. மேலும் நயவஞ்சகர்கள், அமைதியை காக்கும் நற்செய்தியோ அல்லது ஆபத்திலிருந்து பாதுகாக்க எச்சரிக்கைகளோ வந்தால், உடனே அவர்கள் மக்களிடம் குழப்பம் ஏற்படும் வண்ணம் வதந்திகளைப் பரப்பி விடுகின்றனர். இதனால் தக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இப்படிப்பட்ட செய்திகளை முறையாக சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மூலமாக விளக்கி அறிவிக்கப்பட்டால், இத்தகைய குழப்பங்களை தடுத்துக்கொள்ள முடியும். அவர்களுக்கு அந்த ஆற்றல் உண்டு. ஆக “அல்லாஹ்வின் வழிகாட்டுதல்” என்ற அருள் இல்லாதிருந்தால், இப்படிப்பட்ட புரளிகளை (ஷைத்தான்களை) நம்பி உங்களில் பலர் உடனே செயலில் இறங்கி இருப்பீர்கள். பிரச்சனைகள் தீர்வதற்குப் பதிலாக அது மேலும் சிக்கலாகி இருக்கும்.
எந்தப் பிரச்சனையை எவ்வாறு அணுகுவது என்று பொது மக்களுக்கு தெரியாது. அதனால் சட்ட ஒழுங்கு சீர்கெடும். இப்படி செயல்படுபவர்களுக்கே எதிர் பாராத பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்காக மக்கள் புரளிகளை நம்பாமல், தீர விசாரித்து உண்மைகளை கண்டறிந்த பின்பே செயல்பட வேண்டும். (பார்க்க 25:73)
4:84فَقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفۡسَكَۚ وَحَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَۖ عَسَى ٱللَّهُ أَن يَكُفَّ بَأۡسَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَٱللَّهُ أَشَدُّ بَأۡسٗا وَأَشَدُّ تَنكِيلٗا٨٤
4:84. சமுதாய சீர்திருத்தத்தில் அக்கரையுள்ளவரே! பொதுமக்களின் நலனைக் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்த அரசமைப்பை வலுப்படுத்துவதிலும், அதை நடத்திச் செல்ல பாதுகாப்பு வீர்ர்களை பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்துவீராக. இது விஷயமாக உம்மைத் தவிர்த்து மற்றவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. எனினும் உன்னுடைய சக தோழர்களாகிய மூஃமின்களுக்கு தக்க ஆயுதப் பயிற்சிகளையும் போர் தந்திரங்களையும் கற்றுக் கொடுத்து, அவர்களிடமுள்ள குறைகளை நீக்கி முறையாக ஊக்கமளித்து, அவர்களுடைய ஆற்றல்களை வளர்த்து வருவீராக. இவை யாவும் பகைவர்களின் பலத்தை ஒடுக்கி வைக்க உதவி புரியும் . இவ்வாறாக அல்லாஹ்வின் செயல் திட்டம் மிகவும் வலிமை மிக்கதாகவும் குற்றம் புரிபவர்களுக்குத் தண்டனை அளிப்பதில் கடுமையாகவும் இருக்கின்றது.
4:85مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ وَمَن يَشۡفَعۡ شَفَٰعَةٗ سَيِّئَةٗ يَكُن لَّهُۥ كِفۡلٞ مِّنۡهَاۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقِيتٗا٨٥
4:85. இப்படியாக நீரும் உம்மைச் சார்ந்த மூஃமின்களும் இணைந்து செயலாற்றுங்கள். எவரேனும் ஆக்கப்பூர்வமான நற்காரியங்களுக்காக பரிந்துரை செய்து உதவி செய்தால் அதன் நன்மைகளில் அவருக்கும் பங்குண்டு. அவ்வாறே தீய காரியங்களின் பக்கம் அழைத்தால், அதில் அவருக்கும் பங்குண்டு. எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிந்துக் கொள்ளும் பேராற்றலும் கண்காணிக்கும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு உண்டு.
அதாவது நன்மையான செயல்களைச் செய்ய அறிவுரை செய்பவர்களுக்கு அரசின் சார்பாக உதவியும் பாராட்டும் கிடைக்கும். தீய காரியங்களைச் செய்ய தூண்டுபவர்களுக்கு அதற்குத் தக்க தண்டனை கிடைக்கும். எனவே தீய செயல்களின் பின்னணியில் இருக்கும் தீயவர்களை கண்டறிந்து அவர்களையும் வேரறுக்க வேண்டும். அது மட்டுமின்றி அல்லாஹ்வின் புறத்தலிருந்தும் அவரவர் செயலுக்கு ஏற்ப சன்மானங்களும் தண்டனைகளும் மரணத்திற்குப் பின்பும் கிடைக்கும்.
4:86وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَسِيبًا٨٦
4:86. இப்படியாக அவர்கள் உம்முடன் ஒருங்கிணைந்து, இந்த அரசமைப்பின் நலனையும் பாதுகாப்பையும் கருதி செயல்பட்டால், அதற்குப் பிரதி உபகாரமாக அவர்களுக்கு உரிய வாழ்க்கை வசதிகளை சிறந்த முறையில் செய்து தாருங்கள். அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் குறைந்தபட்ச வசதிகளையாவது செய்து தாருங்கள். அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பு முறை எல்லா விஷயத்திலும் அளவோடு அணுகும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
4:87ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۗ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثٗا٨٧
4:87. ஆக பொதுமக்கள் உங்களுடைய செயல் திட்டத்தில் பங்கெடுத்தாலும் புறக்கணித்தாலும் சரியே. நீர் அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றியும், அகிலங்கள் அனைத்திலும் அவனுடைய ஆதிக்கமே செயல்படுகின்றன என்பதையும், அவனைத் தவிர வேறு யாருடைய அதிகாரமும் செயல்பாட்டில் இல்லை என்பதையும் மக்களுக்கு எடுத்துரையுங்கள். அது போல மனிதனும் அவனுடைய கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நேர்வழியில் செயல்பட வேண்டும் என்பதையும் விளக்குங்கள். மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கப் படும் காலம் வரும் என்பதையும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் எடுத்துரையுங்கள். அல்லாஹ்வின் இச்சொல்லை விட வேறு யார் உண்மைப் படுத்திக் காட்ட முடியும்?
4:88۞فَمَا لَكُمۡ فِي ٱلۡمُنَٰفِقِينَ فِئَتَيۡنِ وَٱللَّهُ أَرۡكَسَهُم بِمَا كَسَبُوٓاْۚ أَتُرِيدُونَ أَن تَهۡدُواْ مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا٨٨
4:88. உங்களிலுள்ள சிலர், உள்ளத்தில் ஒன்று புறத்தில் ஒன்று என செயல்படும் நயவஞ்சகர்கள் உள்ளனர். இவர்களைப் பற்றி அறியாமல் உங்களில் சிலர் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டதாக சொல்லி, அதற்கு எதிராகச் செயல்படுபவர்களை நேர்வழியில் செலுத்த நீங்கள் விரும்புகிறீர்களா? இப்படி நீங்கள் விரும்புவதால் மட்டுமே அவர்களுக்கு நேர்வழி கிடைத்து விடாது. நேர்வழியைப் பெற நாடி அதற்காக முயல்பவர்களுக்கே நேர்வழி கிடைக்கும். (பார்க்க-18:29) இது அல்லாஹ்வின் நியதி. எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலை அவர்களாகவே ஏற்று செயல்பட்டால் அன்றி, வழிகேட்டில் செல்பவர்களை அதிலிருந்து நீங்கள் மீளவைக்க முடியாது.
4:89وَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ كَمَا كَفَرُواْ فَتَكُونُونَ سَوَآءٗۖ فَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ أَوۡلِيَآءَ حَتَّىٰ يُهَاجِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِۚ
4:89. அந்த நயவஞ்சகர்கள் நேர்வழி பெற்று உங்களுடன் வந்து இணைந்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் அவர்களோ நீங்கள் அனைவரும் நேர்வழியை விட்டுவிட்டு அவர்களோடு இணைந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செயல்படுவதாகத் தெளிவாகும் வரையில், அவர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
فَإِن تَوَلَّوۡاْ فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡۖ وَلَا تَتَّخِذُواْ مِنۡهُمۡ وَلِيّٗا وَلَا نَصِيرًا٨٩
அவர்களும் உங்களைப் போன்று அல்லாஹ்வின் பாதையில் சீரமைப்புப் பணியில் பங்கெடுத்து, பொது வாழ்வில் ஈடுபட தயாராகிவிட வேண்டும். அதற்கு முன்வராமல் அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால், இறை ஆட்சியமைப்பு அவர்களை பிடித்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கும். ஏனெனில் அன்னியர்களைவிட உள்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துபவர்களே பயங்கரவாதிகள் ஆவர். (பார்க்க – 2:191) எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக போர் தொடுத்தால் அவர்களை உயிருடன் விட்டு வைக்காதீர்கள். அல்லது சமூக விரோதிகள் தப்பி ஓட முயன்றால் கண்ட இடத்திலேயே கொன்று விடுங்கள். இது விஷயமாய் நீங்கள் யாரையும் பாரபட்சம் காட்டாதீர்கள்.
ஆனால் இவையாவும் ஆட்சி அதிகார சட்டத்திற்கு உட்பட்டவை ஆகும். தனிப்பட்ட முறையில் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இறைச் சட்டத்தில் இடமில்லை.
4:90إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوۡمِۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٌ أَوۡ جَآءُوكُمۡ حَصِرَتۡ صُدُورُهُمۡ أَن يُقَٰتِلُوكُمۡ أَوۡ يُقَٰتِلُواْ قَوۡمَهُمۡۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمۡ عَلَيۡكُمۡ فَلَقَٰتَلُوكُمۡۚ فَإِنِ ٱعۡتَزَلُوكُمۡ فَلَمۡ يُقَٰتِلُوكُمۡ وَأَلۡقَوۡاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمۡ عَلَيۡهِمۡ سَبِيلٗا٩٠
4:90. ஆனால் யாருடன் நீங்கள் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டு இருக்கிறீர்களோ, அவர்களுடன் பகைவர்கள் தஞ்சம் அடைந்து கொண்டால் அப்போது, அங்கு சென்று அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். மேலும் போரிட மனம் ஒப்பாது உங்களுடன் வந்து சரணடைபவர்ளையும் நீங்கள் கொன்று விடாதீர்கள். உயிர்களைப் பறிப்பதே போரின் நோக்கமாக இருந்திருந்தால்,அவர்களும் வேறு வழியின்றி உங்களிடம் போரிடவே முனைந்து இருப்பார்கள். வெவ்வேறு இரு கொள்கைகளுக்கும் இடையே நடக்கின்ற மோதல் என்பதால், அவர்கள் உங்களுடன் சமாதானம் பேச முன்வந்தால், சமாதானம் செய்துக் கொள்ளுங்கள். எனவே அப்படி சமாதானம் பேச வருபவர்களுக்கு எதிராக போர் புரிவது முறையாகாது. அப்படிப்பட்ட வழிகாட்டுதலை அல்லாஹ் உங்களுக்கு அளிக்கவில்லை.
4:91سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأۡمَنُوكُمۡ وَيَأۡمَنُواْ قَوۡمَهُمۡ كُلَّ مَا رُدُّوٓاْ إِلَى ٱلۡفِتۡنَةِ أُرۡكِسُواْ فِيهَاۚ فَإِن لَّمۡ يَعۡتَزِلُوكُمۡ وَيُلۡقُوٓاْ إِلَيۡكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓاْ أَيۡدِيَهُمۡ
4:91. அதே சமயம் உங்களிடம் சரணடைந்தவர்களையும் தொடர்ந்து கண்காணியுங்கள். ஏனெனில் தம் சமூகத்தவர்களை ஆதரிப்பதற்காகவும் உங்களிடம் சரணடைவது போல் நடிக்கவும் செய்யலாம். அதன்பின் தருணம் பார்த்து குழப்பவாதிகளிடம் கைகோர்த்துக் கொண்டு, கண்மூடித்தனமாக விஷமம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதாவது இத்தகையவர்கள் உங்களிடம் கூட இருந்து கொண்டே உங்களுக்குக் சதி செய்ய எண்ணுவார்கள். உங்கள் கொள்கைகளை ஏற்று உங்களுடன் சமாதானமாக வாழ விரும்பாதவர்கள்.
فَخُذُوهُمۡ وَٱقۡتُلُوهُمۡ حَيۡثُ ثَقِفۡتُمُوهُمۡۚ وَأُوْلَٰٓئِكُمۡ جَعَلۡنَا لَكُمۡ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا مُّبِينٗا٩١
இப்படிப் பட்டவர்களை சமுதாயத்தில் விட்டு வைத்தால் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். அது மட்டுமன்றி மக்கள் நலத் திட்டங்களையும் உங்களால் சரிவர நிறைவேற்ற முடியாது. எனவே இவர்களைக் கண்ட உடன் பிடித்து சிறையில் அடையுங்கள். தப்பி ஓட முயன்றால் கொன்று விடுங்கள். உங்களிடம் போரிட்டால் நீங்களும் அதற்குத் தக்க பதிலடி கொடுங்கள். ஆக யாரைக் கொல்ல வேண்டும் யாரை விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ்விடம் இருந்து அளிக்கப்படுகின்ற தெளிவான விளக்கங்கள் இவையே.
4:92وَمَا كَانَ لِمُؤۡمِنٍ أَن يَقۡتُلَ مُؤۡمِنًا إِلَّا خَطَٔٗاۚ وَمَن قَتَلَ مُؤۡمِنًا خَطَٔٗا فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖ وَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُواْۚ فَإِن كَانَ مِن قَوۡمٍ عَدُوّٖ لَّكُمۡ وَهُوَ مُؤۡمِنٞ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ
4:92. அதே சமயம் சமுதாயத்தில் வாழும் மக்களிடையே கொலைச் சம்பவம் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப சட்டங்களை பிறப்பிக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக கொலை நடந்து விட்டால், அதற்குப் பரிகாரமாக இவ்வாறு செய்துக் கொள்ள சட்டத்தில் அனுமதி உண்டு. அதாவது அவர் மூஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். கொலையுண்டவனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.(பார்க்க – 2:178) கொலைச் சம்பவத்தின் சூழ்நிலையை அறிந்து அந்தக் குடும்பத்தார் விட்டுக் கொடுத்தால் நஷ்டஈடு அளிக்க வேண்டியதில்லை.
وَإِن كَانَ مِن قَوۡمِۢ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞ فَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦ وَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ تَوۡبَةٗ مِّنَ ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا٩٢
கொலை செய்யப்பட்டவன் பகை இனத்தவனில் இருந்து, அவர் மூஃமினானவர் என்று தெரிந்தால் அதற்கு ஈடாக ஒரு முஃமின் அடிமையை விடுதலை செய்தால் போதும். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த வகுப்பினரைச் சேர்ந்த மூஃமின் கொல்லப்பட்டதாக நி &பிக்கப்பட்டால், அதற்குப் பரிகாரமாக அவர் குடும்பத்தைச் சோந்த வாரிசுதாரர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பதுடன் ஒரு மூஃமின் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும். இவ்வாறு நஷ்டஈடு தர சக்தி இல்லாதவனாக இருந்தால் அவன் திருந்தி வாழ தொடர்ந்து 60 நாட்களுக்கு நோன்பு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கறியும் வல்லமையும் ஞானமும் உடைய அல்லாஹ்விடமிருந்து வரும் சொல்லாகும்.
அக்காலத்தில் உலகின் பல பகுதிகளில் மனிதனை விலைக்கு வாங்கி அடிமைகளாக வைத்துக் கொள்வது செல்வந்தர்களின் பழக்கமாக இருந்தது. இந்தியாவிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன் ஜமீன்தார்களிடம் இந்தப் பழக்கம் இருந்து வந்தது. ஆக அடிமையை விடுவிப்பது என்ற கட்டளை அவர்களுக்குப் பெருத்த நஷ்டத்தைத் தரும் தண்டனையாக இருந்தது. ஆனால் அடிமைப் பழக்கத்தை படிப்படியாக அழிக்கவே இத்தகைய கட்டளைகள் இறைவன் பிறப்பித்ததாக தெரிகிறது.
மேலும் நஷ்டயீட்டை அளிக்க இயலாத குற்றவாளியை சிறையில் அடைத்து, தொடர்ந்து 60 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிக்க அரசு ஆவன செய்யும். அப்போது குற்றவாளிகளை திருத்த முயற்சி மேற்கொள்ளப் படும்.
4:93وَمَن يَقۡتُلۡ مُؤۡمِنٗا مُّتَعَمِّدٗا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدٗا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمٗا٩٣
4:93. சமூக நலனை நோக்கமாகக் கொண்டு வாழும் ஓர் அரசு அதிகாரியை யாராவது வேண்டுமென்றே கொன்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படும். (பார்க்க-5:32). மரணத்திற்குப் பின்தொடர்கின்ற வாழ்விலும் அவன் நரக வேதனையை அனுபவிக்க வேண்டி வரும். ஏனெனில் அல்லாஹ்வின் சட்டத்தின் பார்வையில் அவன் மிகப்பெரிய குற்றவாளியாவான். எனவே அவனுக்கு எந்தச் சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. அவன் கடுமையான வேதனைக்கு ஆளாவான். எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யும் கொலைக்கு நஷ்டஈடு என்ற பேச்சிற்கே இடமில்லை.
உலக அமைதிக்காகப் பாடுபடும் மூஃமின்களே! நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் முன்யோசனையுடன் சரியான செயல் திட்டத்துடன் செயல்பட வேண்டும். முக்கியமாக போர் போன்ற உலக விவகாரங்களைத் தீர்மானிக்கும் விஷயத்தில் கண் மூடித்தனமாக செயல்படக் கூடாது.
4:94يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا ضَرَبۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُواْ وَلَا تَقُولُواْ لِمَنۡ أَلۡقَىٰٓ إِلَيۡكُمُ ٱلسَّلَٰمَ لَسۡتَ مُؤۡمِنٗا تَبۡتَغُونَ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٞۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبۡلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَتَبَيَّنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا٩٤
4:94. ஆக உங்களை எதிர்த்துப் போரிடுவோர் யார் மற்றும் அவர்களின் பலம் என்ன என்பதை நன்கறிந்த பின்னரே அவர்களை எதிர்க்க முழு ஆயத்தங்களுடன் போருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். எதிர் தரப்பினரிடமிருந்து சமாதான செய்தி வந்தால், “நீங்கள் மூஃமின்கள் அல்ல” எனக் கூறி, அவர்களுடன் போரிடுவது சரியல்ல. இறைவழிகாட்டுதல் வருவதற்கு முன் நீங்கள் போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் போன்ற அற்ப ஆதாயங்களுக்காகப் போரிட்டு வந்தீர்கள். ஆனால் இப்போதோ உங்களுக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் கிடைத்துள்ளன. மேலும் இதைவிட பன்மடங்கு வாழ்வாதாரங்கள் அல்லாஹ் விடம இருந்து கிடைக்கும். எனவே உண்மையிலேயே மக்கள் விரோத செயல்களி:ல் ஈடுபடும் கூட்டம் எது என்பதைக் கண்டறிந்து, அதை முறியடிக்கவே நடவடிக்கை எடுங்கள். (பார்க்க 8:42) ஆக நீங்கள் செய்வது யாவும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்.
4:95لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ
4:95. மேலும் மூஃமின்களில் இரு பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் சமூக நலப்பணிகளில் அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள். அதற்கு வேண்டிய திட்டங்களைத் தீட்டி தம் செல்வங்களையும் உயிரையும் பணயம் வைத்து செயல்படும் செயல்வீரர்கள் -இவர்கள் ஒரு பக்கம். இவ்வாறில்லாமல் தத்தம் தொழிலில் நிலைத்திருப்பவர்கள் மறுபக்கம். இவர்கள் இருவரும் சமமாக மாட்டார்கள்.
فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ عَلَى ٱلۡقَٰعِدِينَ أَجۡرًا عَظِيمٗا٩٥
இவ்வாறு அல்லாஹ்வின் பாதையில் அயராது பாடுபடுபவர்களுக்கு உயர் பதவியும் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும். ஆயினும் மற்ற மூஃமின்களின் பங்கிற்கு எதுவும் கிடைக்காது என்பதல்ல. இந்த செயல்திட்டங்கள் நிறைவேற அவர்களுடைய ஒத்துழைப்பும், பொருளாதார உதவியும் அவசியமாகிறது. அவர்களுக்கும் அரசமைப்பின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். ஆனால் பதவி அந்தஸ்து என்னும் போது, இவர்களுக்கு கிடைப்பதை விட அந்த செயல்வீரர்களுக்கே கிடைக்கும்.
4:96دَرَجَٰتٖ مِّنۡهُ وَمَغۡفِرَةٗ وَرَحۡمَةٗۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا٩٦
4:96. ஆக இதுவே உயர் பதவியும் அந்தஸ்தும் கிடைக்க அல்லாஹ் நிர்ணயித்துள்ள சட்ட வரையறைகளாகும். (மேலும் பார்க்க- 84:19) மேலும் இவ்வாறு இறை ஆட்சியமைப்பின் செயல் திட்டங்களை நிறைவேற்றி வருபவர்களால் ஏற்படும் சிறு தவறுகள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மேலும் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய ஆற்றல்களும் செயல்திறனும் மேம்படுகின்றன. இப்படியாக அல்லாஹ்வின் சட்ட விதிமுறைகளில் பாதுகாப்பும், சமுதாய மேம்பாட்டிற்கான அனைத்து வழிமுறைகளும் நிர்ணயமாகி உள்ளன.
இதுவே அல்லாஹ்வின் பாதையில் செயலாற்றுபவர்கள் மற்றும் அதற்கு துணை நிற்பவர்களைப் பற்றிய சட்ட விதிமுறைகளாகும். இப்போது இருப்பது அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் நிறைவேற எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் வாழ்பவர்களைப் பற்றியது.
4:97إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡ قَالُواْ فِيمَ كُنتُمۡۖ قَالُواْ كُنَّا مُسۡتَضۡعَفِينَ فِي ٱلۡأَرۡضِۚ قَالُوٓاْ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٗ فَتُهَاجِرُواْ فِيهَاۚ فَأُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَآءَتۡ مَصِيرًا٩٧
4:97. தம் வாழ்நாள் முழுவதும் தமக்காகவே வாழ்ந்து தமக்குத் தாமே அநியாயச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரணம் நெருங்கும் போது, அவர்களிடம், “உங்கள் நிலை என்ன?” என்று கேட்கப்பட்டால் அதற்கு அவர்கள், “உலகில் அநியாயங்கள் நடப்பதைத் தட்டிக் கேட்க எங்களிடம் எந்தப் பலமும் இருந்ததில்லை. நாங்கள் மிகவும் பலவீனர்களாக இருந்தோம்”என்று கூறுவார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் பூமி விசாலமாக இருந்ததில்லையா? (மேலும் பார்க்க 29:56) இறைவன் கூறும் நலத்திட்டங்களை நிறைவேற்ற உங்களுக்குச் சாதகமான இடங்களுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றிருக்கலாமே. இவ்வாறு ஏன் செய்யவில்லை?” என்று கேட்கப்படும்.. எனவே அல்லாஹ்வின் நலத் திட்டங்களை நிறைவேற்றாமல் சொகுசு வாழ்வு வாழ்பவர்கள் செல்லும் இடம் நரகமாகத் தான் இருக்கும். இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்படுவது நல்லதா?
4:98إِلَّا ٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ لَا يَسۡتَطِيعُونَ حِيلَةٗ وَلَا يَهۡتَدُونَ سَبِيلٗا٩٨
4:98. இருப்பினும் உங்களுள் இருக்கும் சிறுவர் சிறுமியர்கள் மற்றும் பலவீனமான ஆண் பெண்கள் விஷயம் வேறு. இத்தகையவர்களால் எவ்வித கடினமான செயல்களிலும் ஈடுபட முடியாது. அவ்வாறு பொதுப் பணிக்காக வெளியில் செல்லும் வழிமுறைகளும் தெரியாது. அப்படியே சென்றாலும் எந்தப் பலனும் கிடைக்காது.
4:99فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا٩٩
4:99. அத்தகையோருக்கு ஹிஜ்ரத் செய்யும் விஷயத்தில் விடுவிப்பு உண்டு. ஏனெனில் அவர்கள் செல்வதும் செல்லாமல் இருப்பதும் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. எனவே தான் இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் சட்டத்தில் விதிவிலக்கும் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
நாம் பிறந்த மண், ஊர், தாய் மொழி ஆகிய உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் இருப்பது இயல்பானதே. இருப்பினும் ஒரு லட்சியம், கொள்கை என்று வரும்போது எது நமக்கு நிலையான பலன்களைத் தரும் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். முக்கியத்துவம் அளிக்க வேண்டியது பாசத்திற்காக அல்லது லட்சியத்திற்கா?
4:100۞وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا١٠٠
4:100. இறை வழிகாட்டுதலின் படி உயர் லட்சியங்கள் நிறைவேற அல்லாஹ்வின் பாதையில் யார் தம் வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி, பொது வாழ்வில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலகில் ஏராளமான நன்மைகளும் விசாலமான இருப்பிடங்களும் கிடைக்க வழிகள் பிறக்கும். இப்படியாக யார் அல்லாஹ்வுக்கும் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தூதரின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு தம் வீட்டை விட்டு வெளியேற முற்படுகிறார்களோ, அவர் தம் இலக்கை அடைவதற்கு முன்பே அவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்கு தக்க சன்மானம் கிடைப்பது நிச்சயம். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் பாதுகாப்பு அளிப்பதாகவும் கிருபை மிக்கதாகவும் உள்ளது.
நினைவில் கொள்ளுங்கள். ஹிஜ்ரத் என்பது வீட்டை விட்டுவிட்டு துறவறத்தை மேற்கொள்ள காட்டிற்குச் சென்றுவிடுவதற்கு சொல்லப்படுவதல்ல. ஓர் உயர் இலட்சியத்துடன் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆதரவோடு சிறந்த செயல் திட்டங்களுடன் சாதகமான இடங்களுக்குச் செல்வதே ஹிஜ்ரத் என்பதாகும்.
4:101وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا١٠١
4:101. இப்படியாக நீங்கள் ஹிஜ்ரத் செய்ய பயணம் மேற்கொள்ளும் போது, இறைவழிகாட்டுதலை கற்பிக்கும் ஸலாத் முறையை சுருக்கிக் கொள்ளலாம். உங்களை எதிரிகள் விஷமம் செய்வார்கள் என்ற அச்சம் இருந்தாலும், ஸலாத்தை குறைத்துக் கொள்வது ஆகுமானதே. நிச்சயமாக இந்த விஷமிகள் வெளிப்படையான பகைவர்களாகவே இருக்கிறார்கள்.
எல்லா சூழ்நிலைகளிலும் இறைவழிகாட்டுதல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அவற்றை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். இதற்காகத் தான் குறித்த நேரங்களில் கூட்டு ஸலாத் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
4:102وَإِذَا كُنتَ فِيهِمۡ فَأَقَمۡتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلۡتَقُمۡ طَآئِفَةٞ مِّنۡهُم مَّعَكَ وَلۡيَأۡخُذُوٓاْ أَسۡلِحَتَهُمۡۖ فَإِذَا سَجَدُواْ فَلۡيَكُونُواْ مِن وَرَآئِكُمۡ وَلۡتَأۡتِ طَآئِفَةٌ أُخۡرَىٰ لَمۡ يُصَلُّواْ فَلۡيُصَلُّواْ مَعَكَ وَلۡيَأۡخُذُواْ حِذۡرَهُمۡ وَأَسۡلِحَتَهُمۡۗ
4:102. போர் முனையில் இருந்தாலும் கூட, நீங்கள் உங்கள் உயர் லட்சியத்தை மறந்துவிடக் கூடாது. எனவே மார்க்க பிரச்சார கூட்டத்தை கூட்டினால், எல்லோரையும் ஒரே அணியாக நிற்கச் செய்யாதீர்கள். ஏனெனில் அந்தத் தருணம் பார்த்து, ஒரே அடியாக உங்களைத் தாக்கி சாய்த்துவிட எதிர்தரப்பினர் சதி செய்யலாம். எனவே சேனைகளை இரண்டாகப் பிரித்து முதலில் ஒரு பகுதியினர் பிரச்சாரத்தில் கலந்துக் கொள்ளட்டும். அது வரையில் மற்ற பிரிவினர் இவர்களைப் பாதுகாக்க ஆயுதங்களை ஏந்தி நிற்கட்டும். மார்க்க பிரச்சார கூட்டம் முடிந்தபின் மற்றொரு பிரிவினர் தம் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொள்ளட்டும்.
وَدَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَوۡ تَغۡفُلُونَ عَنۡ أَسۡلِحَتِكُمۡ وَأَمۡتِعَتِكُمۡ فَيَمِيلُونَ عَلَيۡكُم مَّيۡلَةٗ وَٰحِدَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن كَانَ بِكُمۡ أَذٗى مِّن مَّطَرٍ أَوۡ كُنتُم مَّرۡضَىٰٓ أَن تَضَعُوٓاْ أَسۡلِحَتَكُمۡۖ وَخُذُواْ حِذۡرَكُمۡۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا١٠٢
அதாவது நீங்கள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவும், அத்துடன் இறைவழிகாட்டுதலை எக்காரணத்தைக் கொண்டும் மறந்து விடக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்விரண்டில் எதில் கவனக் குறைவாக இருந்தாலும், அது உங்களை ஆபத்தில் தள்ளிவிடும். எனவே தான் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும் மற்ற வாழ்வாதார பொருட்களையும் பாதுகாக்க வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும் மழை போன்ற திடீர் தட்பவெப்ப மாறுதல்களால் உங்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் உங்களில் சிலருக்கு பலவீனம் ஏற்பட்டு அவர்களால் ஆயுதங்களைக் கையில் ஏந்தி நிற்க சக்தி பெறாமல் போகலாம். இத்தகையவர்கள் ஆயுதங்களை ஏந்தி நிற்க வேண்டியதில்லை. எனினும் நீங்கள் எச்சரிக்கையுடனே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக எதிர் தரப்பினருக்கு இழிவு தரும் வேதனை காத்து நிற்கிறது.
சிந்தனையாளர்களே! இங்கு ஒரு விஷயத்தை கவனித்துப் பாருங்கள். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் யாவும் மூஃமின்கள் பொறுப்பில் தான் விடப்படுகிறது. அல்லாஹ்வின் நேரடித் தலையீடு இருப்பதில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் சட்டங்கள் ஒருதலை பட்சமாகச் செயல்படாது. அவை அனைவருக்கும் பொதுவானவை. இயற்கை மாற்றங்கள் விஷயத்தையும் கவனித்துப் பாருங்கள். மழை போன்ற காரணங்களால் நோயாளிகளாக ஆகிவிடலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது மூஃமின்கள் என்பதால் இயற்கைச் சட்டத்திலும் எவ்வித பாரபட்சமும் இருப்பதில்லை. எனவே மழை நீரின் தாக்கம் மூஃமின்களுக்கும் சரி சமமாகப் பொருந்தும்.
மேலும் போர் என்பது மணிக் கணக்கில் நடக்கின்ற ஒன்றல்ல. நாட் கணக்கிலும் வாரக் கணக்கிலும் நடக்கின்ற ஒன்றாகும். எனவே உணவருந்துதல் மலஜ் ஜலம் கழித்தல போன்ற சேனைகளின் அன்றாட இயற்கை தேற்றங்களும் இருக்கும். அவற்றையும் நிறைவேற்றியே ஆக வேண்டும். இவற்றை பல பிரவுகளாக பிரித்து செயல்பட வேண்டும்.
மேலும் பிரச்சார சபையில் படைத் தளபதி போரில் கையாள வேண்டிய வரையறைகள் மற்றும் போர் யுக்திகளை கற்றுத் தர வேண்டி இருக்கும். அவற்றை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
4:103فَإِذَا قَضَيۡتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذۡكُرُواْ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِكُمۡۚ فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا١٠٣
4:103. நினைவில் கொள்ளுங்கள். இந்தக் கூட்டு ஸலாத் முறை என்பது இறைவழிகாட்டுதலை மக்கள் அனைவருக்கும் எடுத்துரைக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளே ஆகும். எனவே இதற்காக நேரம் காலம் குறிப்பிட்டு அந்தந்த வேளையில் நடத்தப்படுகிறது. அப்போது தான் அனைவராலும் கலந்துக்கொள்ள முடியும். எனவே பிரச்சார கூட்டத்தில் (ஸலாத்தில்) கற்றுக் கொண்ட விஷயங்களை எல்லா நேரங்களிலும் கவனத்தில் கொண்டு அதன்படி செயலாற்ற வேண்டும். நின்ற நிலையில் இருந்தாலும் சரி, அமர்ந்த நிலையிலும் படுத்திருந்த நிலையிலும். ஆக எப்போதும் அவற்றை சிந்தித்து கவனத்தில் கொள்ளவேண்டும். (மேலும் பார்க்க 3:190,191). மேலும் போர், கலவரங்கள் தீர்ந்து அமைதி திரும்பியதும், சமுதாய நலப் பணி ஸலாத்தை கடைப்பிடித்து வாருங்கள்.
4:104وَلَا تَهِنُواْ فِي ٱبۡتِغَآءِ ٱلۡقَوۡمِۖ إِن تَكُونُواْ تَأۡلَمُونَ فَإِنَّهُمۡ يَأۡلَمُونَ كَمَا تَأۡلَمُونَۖ وَتَرۡجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرۡجُونَۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا١٠٤
4:104. நினைவில் கொள்ளுங்கள். களத்தில் பகைவர்களை விரட்டி அடிப்பதில் பின் வாங்காதீர்கள். போரில் நீங்கள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றால் பகைவர்களுக்கும் அதே போன்று தான் சிரமங்கள் ஏற்படும். அதாவது கஷ்ட நஷ்ட விஷயத்தில் இரு தரப்பினரும் சமமானவர்களே ஆவர். ஆனால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலமாக நீங்கள் எதிர் பார்க்கும் பலாபலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த அனுகூலங்கள் பகைவர்களுக்கு கிடைக்காது. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் கல்வி ஞானத்தின் அடிப்படையைக் கொண்டதாகும் என்பதை மறவாதீர்.
இவையே போர்க் கால சமயங்களில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளாகும். இனி நீங்கள் சமுதாயப் பணிகள் தொடர்பாக வந்த கட்டளைகள் என்ன என்பதையும் கவனியுங்கள்.
4:105إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَآئِنِينَ خَصِيمٗا١٠٥
4:105. மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் எப்போதும் இறை வழிகாட்டுதலை முன்வைத்தே தீர்ப்பளியுங்கள். ஏனெனில் மனித வாழ்வின் சரியான பாதையைக் காட்டும் வழிமுறைகள் இதில் அளிக்கப்படுகின்றன. இதை விட்டுவிட்டு அநியாயக்காரர்களுக்கும் மோசக்காரர்களுக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்காதீர்கள். அவர்களை எவ்விதத்திலும் ஆதரித்து வாதாடாதீர்.
4:106وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا١٠٦
4:106. எப்போதும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கொண்டு செயலாற்றுங்கள். அப்போது தான் சிறு பிழைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீள முடியும். அல்லாஹ்வின் சட்டத்தில் இதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
4:107وَلَا تُجَٰدِلۡ عَنِ ٱلَّذِينَ يَخۡتَانُونَ أَنفُسَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمٗا١٠٧
4:107. மீண்டும் வலியுறுத்திச் சொல்லி விடுகிறோம். இதை நினைவில் கொள்ளுங்கள். பிறருக்குத் தீமை செய்வதால் சமுதாயத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும். அதன் தீய விளைவுகள் அவனையே வந்தடையும். இப்படியாக அவன் தனக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறான். அத்தகையவனுக்கு ஆதரவாக நீர் ஒருபோதும் வாதிட வேண்டாம். இவ்வாறு கொடிய செயல்களைச் செய்பவனை அல்லாஹ்வின் சட்டம் ஒருபோதும் நேசிக்காது.
4:108يَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ يُبَيِّتُونَ مَا لَا يَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعۡمَلُونَ مُحِيطًا١٠٨
4:108. இப்படிப்பட்டவர்கள், தாம் செய்து வரும் சதி திட்டங்கள் யாவும் மக்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடமிருந்து அவற்றை மறைக்க முடியுமா? அவர்கள் இரவு நேரங்களில் ரகசியத் திட்டங்களைத் தீட்டும் போதும், அல்லாஹ் அவர்கள் மத்தியில் இருக்கத் தான் செய்கின்றானே. ஆக எந்த ஒரு செயலையும் “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற அல்லாஹ்வின் சட்டம் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். (மேலும் பார்க்க 40:19)
4:109هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ جَٰدَلۡتُمۡ عَنۡهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَمَن يُجَٰدِلُ ٱللَّهَ عَنۡهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ أَم مَّن يَكُونُ عَلَيۡهِمۡ وَكِيلٗا١٠٩
4:109. நினைவில் கொள்ளுங்கள். “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற இறைவனின் சட்டம், இவ்வுலக வாழ்வோடு முடிந்து விடுவதில்லை. அது அவனுடைய மரணத்திற்குப் பின்பும் தொடர்கிறது. எனவே இப்படிப்பட்ட தீயவர்களுக்குச் சாதகமாக நீதிமன்றத்தில் வாதாடி இவ்வுலக தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால் “மனித செயல்களின் விளைவுகள்” தோற்றத்திற்கு வரும் கால கட்டத்தில் அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?
காரணம் அவன் செய்து வந்த செயல்களின் விளைவுகள் அவனோடு ஐக்கியமாகி இருக்குமே. அவன் செய்த செயல்களுக்குக் கணக்கெடுப்பு ஆகுமே. (பார்க்க – 17:13&14). எனவே இப்படிப்பட்ட தீயவர்களுக்கு வக்காலத்து வாங்கி வாதிடுவதில் நிலையான பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இது நிலைமாறா நிரந்தர சட்டமாகும். இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். தீய செயல்கள் எதுவாக இருந்தாலும் சரி அவை தனக்கோ பிறருக்கோ பாதிப்புகளை ஏற்படுத்தியே தீரும். இந்த உலக நடைமுறைச் சட்டத்திலிருந்து வேண்டுமானால் நீங்கள் தண்டனையிலிருந்து தறகாலிகமாக தப்பித்து விடலாம். ஆனால் அல்லாஹ்வின் நிலையான சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. அவ்வாறு தப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
4:110وَمَن يَعۡمَلۡ سُوٓءًا أَوۡ يَظۡلِمۡ نَفۡسَهُۥ ثُمَّ يَسۡتَغۡفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورٗا رَّحِيمٗا١١٠
4:110. நீங்கள் செய்த தீய செயல்களுக்கு மனம் வருந்தி அவற்றை உடனே விட்டுவிட்டு (பார்க்க 4:17) அதற்குப் பரிகாரமாக ஆக்கப்பூர்வமான பன்மடங்கு நற்செயல்களைச் செய்ய வேண்டும். அப்போது தான் தீமைகள் குறைந்து நன்மைகள் மிகைக்கும் (25:70). அவ்வாறு செய்வதால் நீங்கள் செய்த தீய செயல்களின் பாதிப்பிலிருந்து நிவாரணமும் பாதுகாப்பும் கிடைக்கும். இப்படியாக ஒருவன் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டிக்காமல் அவனுடைய பாதுகாப்பு கருதி அவன் திருந்தி வாழ தக்க வாய்ப்பு அளித்திருப்பது (பார்க்க 16:61) அல்லாஹ்வின் மிகப் பெரிய கருணையாகும்.
4:111وَمَن يَكۡسِبۡ إِثۡمٗا فَإِنَّمَا يَكۡسِبُهُۥ عَلَىٰ نَفۡسِهِۦۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا١١١
4:111. இந்த உண்மையை அறிந்த பின்பும் ஒருவர் தீய செயல்களில் ஈடுபடுகிறார் என்றால், அதன் கேடுகள் அவரையே வந்தடையும் என்பதை தெரிந்து கொள்ளட்டும். அவற்றின் விளைவுகள் அவரையும் மனித மாண்புகளையும் சீரழிக்கும். அல்லாஹ்வின் சட்டமும் வழிகாட்டுதலும் கல்வி ஞானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாகும்.
4:112وَمَن يَكۡسِبۡ خَطِيَٓٔةً أَوۡ إِثۡمٗا ثُمَّ يَرۡمِ بِهِۦ بَرِيٓٔٗا فَقَدِ ٱحۡتَمَلَ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا١١٢
4:112. ஒருவன் தவறான செயலையோ அல்லது பாவச் செயலையோ செய்து விட்டு, அதை ஒரு பாவமும் அறியாத அப்பாவி மீது பழி சுமத்தி விடுவது எவ்வளவு பெரிய அநியாயச் செயலாகும். இது ஒரு வெளிப்படையான பாவச் செயல் அல்லவா? இப்படியாக அவன் இருமடங்கு பாவத்தை சுமந்து கொண்டதாகப் பொருள்படும்.
4:113وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ وَرَحۡمَتُهُۥ لَهَمَّت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ أَن يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡۖ وَمَا يَضُرُّونَكَ مِن شَيۡءٖۚ وَأَنزَلَ ٱللَّهُ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَكَ مَا لَمۡ تَكُن تَعۡلَمُۚ وَكَانَ فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكَ عَظِيمٗا١١٣
4:113. ஆக “இறை வழிகாட்டுதல்” என்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள் இல்லாதிருந்தால் சமுதாயத்திலுள்ள சில மதகுருமார்கள் உம்மை வழி கெடுத்து இருப்பார்கள். இவ்வாறாக அவர்கள் உம்மை வழிகெடுக்க முயன்று, அவர்களும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்வார்கள். இதுவே உண்மையாகும். மேலும் அவர்களால் உமக்கு எவ்வித தீங்கும் நெருங்காது. மேலும் அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள வேத ஞானத்தின் மூலம், நீங்கள் அறியாதவற்றை எல்லாம் கற்று நேர்வழியைப் பெறலாம். இப்படியாக அல்லாஹ்வின் “வழிகாட்டுதல்” என்ற அருட்கொடை மகத்தா னதே ஆகும்.
4:114۞لَّا خَيۡرَ فِي كَثِيرٖ مِّن نَّجۡوَىٰهُمۡ إِلَّا مَنۡ أَمَرَ بِصَدَقَةٍ أَوۡ مَعۡرُوفٍ أَوۡ إِصۡلَٰحِۢ بَيۡنَ ٱلنَّاسِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِ فَسَوۡفَ نُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا١١٤
4:114. நயவஞ்சகர்களின் பேச்சை கவனித்துப் பாருங்கள். மக்கள் நலத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதைப் பற்றியோ, நன்மையான செயல்களைச் செய்வதைப் பற்றியோ, மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது பற்றியோ அவர்களுடைய இரகசிய பேச்சில் எதுவும் இருக்காது. மாறாக தேவையற்ற விஷயங்களைப் பற்றியே ஆலோசித்துக் கொண்டு இருப்பார்கள். ஆக யார் அல்லாஹ்வின் செயல் திட்டங்களுக்கு இணங்கி, அவனுடைய திருப் பொருத்தத்தை நாடி செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு மகத்தான சன்மானங்கள் நிச்சயமாக உண்டு என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
4:115وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرًا١١٥
4:115. இந்தப் பேருண்மை தெளிவான பின்னரும், யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அதன்படி இறைத் தூதர் உருவாக்கும் ஆட்சியமைப்புச் சட்டங்களையும் புறக்கணித்து, மூஃமின்களை விட்டும் பிரிந்து செல்கின்றாரோ, அவர்கள் நிராகரிப்பவர்களின் பட்டியலில் இணைந்து விட்டதாக பொருள்படும். இவ்வாறு செயல்படுபவர்கள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள். மேலும் அவர்கள் சென்றடையும் இடம் மிகவும் வேதனை மிக்க நரகமாக இருக்கும்.
4:116إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا١١٦
4:116. இதற்குக் காரணம் அல்லாஹ்வை விட்டு கற்பனைத் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு பாதுகாப்பான நிம்மதியான வாழ்வு கிடைப்பதில்லை. இதைத் தவிர்த்து சிறு சிறு தவறுகள் ஏற்படுவது என்பது வேறு. ஏனெனில் அவற்றின் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெற அல்லாஹ்வின் சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு இணையாக வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிப்போர் நேர்வழியை விட்டு வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிடுவர். (பார்க்க 4:48)
4:117إِن يَدۡعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَٰثٗا وَإِن يَدۡعُونَ إِلَّا شَيۡطَٰنٗا مَّرِيدٗا١١٧
4:117. இப்படியாக அல்லாஹ்வை தவிர்த்து, அவர்கள் வழிபடும் கற்பனைத் தெய்வங்கள் எவ்வித சக்தியும் பெறாத பலவீனமானதாகும். மேலும் அவர்கள் தம் மனோ இச்சையையே தெய்வமாக்கிக் கொண்டுள்ளனர். இத்தகையவர்கள் நேர்வழியின் பக்கம் வருவது இயலாத ஒன்றே. (ப 45-23)
4:118لَّعَنَهُ ٱللَّهُۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنۡ عِبَادِكَ نَصِيبٗا مَّفۡرُوضٗا١١٨
4:118. இத்தகையவர்கள் தாம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை இழந்து திக்கற்ற நிலையில்தான் வாழ நேரிடும். மேலும் அவர்களை வழிநடத்திச் செல்லும் மதகுருமார்கள் அவர்களுடைய சம்பாத்தியத்தில் இருந்து ஒரு பங்கை தமக்காக பெற்றுக் கொள்வார்கள்.
4:119وَلَأُضِلَّنَّهُمۡ وَلَأُمَنِّيَنَّهُمۡ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلۡأَنۡعَٰمِ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيۡطَٰنَ وَلِيّٗا مِّن دُونِ ٱللَّهِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانٗا مُّبِينٗا١١٩
4:119. மேலும் இத்தகைய குருமார்களின் அறைகூவலைக் கவனித்தால், “நிச்சயமாக நான் மக்களை வழி கெடுப்பேன். மக்களுடைய குறைகள் அனைத்தையும் இந்த கற்பனைத் தெய்வங்கள் தீர்த்து வைக்கும் என்ற மூட நம்பிக்கைகளையும் அவர்களின் மனதில் வளர்ப்பேன். இதற்காக கால்நடைகளின் காதுகள் போன்ற அங்கங்களை அறுத்து பலியிட கட்டளையிடுவேன். இப்படியாக அல்லாஹ்வின் அழகான படைப்புகளை உருமாற்றம் செய்வேன்” என்று சொல்வது போல் இருக்கும். ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து இப்படிப்பட்ட மூட நம்பிக்கையைப் பின்பற்றும் சமுதாயம் பெரும் நஷ்டத்திற்குள்ளாகும் என்பதே உண்மை.
4:120يَعِدُهُمۡ وَيُمَنِّيهِمۡۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا١٢٠
4:120. தன் மனோ இச்சையைத் தெய்வமாக்கிக் கொண்ட மதகுருமார்கள், சுவர்க்கத்திற்கு மக்களைக் அழைத்துச் செல்வதாக வாக்குறுதியும் அளிப்பார்கள். அந்த சுவன வாழ்வைப் பற்றி கற்பனைக் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய வாக்குறுதிகள் யாவும் இறுதியில் ஏமாற்றத்தையே தரும்.
4:121أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ وَلَا يَجِدُونَ عَنۡهَا مَحِيصٗا١٢١
4:121. இத்தகையவர்களைப் பின்பற்றி வாழும் சமூகத்தவர்கள், வேதனைகளைத் தான் அனுபவிக்க வேண்டிவரும். அதிலிருந்து மீண்டு வர ஒரு வழியையும் அவர்களால் காண இயலாது.
4:122وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَنُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ قِيلٗا١٢٢
4:122. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்து வரும் சமூகத்தவர்கள், சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை இம்மையிலும் மறுமையிலும் ஈட்டிக் கொள்வார்கள். அதாவது அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப தாராள பொருளாதார வசதிகள் ஜீவநதியாய் பெருகி வரும். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி நடக்கும் வரை சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு தொடர்ந்து நீடிக்கும். இதுதான் அல்லாஹ்வின் வாக்காகும். அவனுடைய வாக்குறுதியைவிட வேறு எந்த வாக்குறுதி உண்மையானதாக இருக்க முடியும்?
4:123لَّيۡسَ بِأَمَانِيِّكُمۡ وَلَآ أَمَانِيِّ أَهۡلِ ٱلۡكِتَٰبِۗ مَن يَعۡمَلۡ سُوٓءٗا يُجۡزَ بِهِۦ وَلَا يَجِدۡ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا١٢٣
4:123. நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அறிவுரையை நிராகரித்து உங்களுடைய விருப்பப் படியோ அல்லது வேதமுடையவர்களின் விருப்பப் படியோ செயல்பட்டு, இந்தச் சுவன வாழ்வை ஒருபோதும் ஈட்டிக் கொள்ளவே முடியாது. இதில் மனிதனின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமிருப்பதில்லை. யார் தீமை செய்கின்றானோ அவனுக்கு அதற்குரிய தண்டனை கிடைத்தே தீரும். ஆயிரம்தான் அவன் விரும்பினாலும் தண்டனையிலிருந்து காப்பாற்ற யாராலும் முடியாது. அதற்கு ஒரே வழி அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பேணி நடப்பதே ஆகும்.
4:124وَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ نَقِيرٗا١٢٤
4:124. சுவனத்திற்கு ஒப்பான வாழ்வு பெறும் விஷயத்தில், ஆண் பெண் என்ற பேதம் இருப்பதில்லை. ஆணோ பெண்ணோ யாரெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, ஆக்கப்பூர்வமான நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் யாவரும் சுவனத்திற்கு உரியவர்கள் ஆவார் கள். இதில் யாரும் இம்மியளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
4:125وَمَنۡ أَحۡسَنُ دِينٗا مِّمَّنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ وَٱتَّبَعَ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبۡرَٰهِيمَ خَلِيلٗا١٢٥
4:125. இந்த விளக்கங்களுக்குப் பின் இதை விட சிறந்த மார்க்கம் வேறு எதுவாக இருக்க முடியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களுடைய மூதாதையராகிய இப்ராஹீம் நபியும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடி பணிந்து அழகிய சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார். அவர் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதை முன்வைத்தே செயல்பட்டார். அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நீங்களும் இப்படித் தானே செயல்பட்டிருக்க வேண்டும்?
4:126وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطٗا١٢٦
4:126. இவ்வாறு செயல்படவில்லை என்றால் அதனால் ஏற்படும் தாக்கங்கள் உங்களுக்குத் தானே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல. காரணம் வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற எல்லாப் படைப்புகளும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கியே செயல்பட்டு வருகின்றன. நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு படைப்பிற்கும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை உருவாக்கியுள்ளான்.
மனினுக்கு மட்டும் வஹீ மூலம் அந்தச் சட்டதிட்டங்களை அறிவுறுத்தி இருக்கிறான். எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல் பட்டால் அதன் விளைவுகளை நீங்கள் சந்தித்தே ஆகவேண்டும்.
4:127وَيَسۡتَفۡتُونَكَ فِي ٱلنِّسَآءِۖ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِيهِنَّ وَمَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ فِي يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا تُؤۡتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرۡغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلۡوِلۡدَٰنِ وَأَن تَقُومُواْ لِلۡيَتَٰمَىٰ بِٱلۡقِسۡطِۚ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمٗا١٢٧
4:127. சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! பெண்களைப் பற்றிய மேற்கொண்டு மார்க்கக் கட்டளைகள் என்னவென்று உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு அல்லாஹ் இவ்வாறு பதிலளிப்பதாகக் கூறுங்கள். ஏற்கனவே இவ்வேதத்தில் ஆதரவற்ற பெண்களைப் பற்றி கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகளை அறிவித்துள்ளோம். அதன்படி நீங்கள் அவர்களை மணப்பதாக இருந்தால் நிர்ணயித்த மஹர் என்னும் அன்பளிப்பை அவர்களுக்கு அளித்து மணமுடித்துக் கொள்ளுங்கள். அவ்வாறு அன்பளிப்பு எதுவும் கொடுக்காமல் மணந்து கொள்ள விரும்புவது தவறான செயலாகும். மேலும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கும் நலிந்த மக்களுக்கும் அவர்களுக்கு உரிய உதவித் தொகையை அளியுங்கள். அவர்களிடம் மிகவும் நீதமாக செயலாற்றுங்கள். ஆக நன்மையான செயல்கள் எதைச் செய்தாலும் அதற்குரிய பலன்கள் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாகக் கிடைக்கும். நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4:128وَإِنِ ٱمۡرَأَةٌ خَافَتۡ مِنۢ بَعۡلِهَا نُشُوزًا أَوۡ إِعۡرَاضٗا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يُصۡلِحَا بَيۡنَهُمَا صُلۡحٗاۚ وَٱلصُّلۡحُ خَيۡرٞۗ وَأُحۡضِرَتِ ٱلۡأَنفُسُ ٱلشُّحَّۚ وَإِن تُحۡسِنُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا١٢٨
4:128. மேலும் ஒரு பெண், தன் கணவன் கொடுமைப் செய்வதாகவோ, அதனால் அவனை விட்டு ஒதுங்கி வாழ விரும்பி புகார் கொடுத்தாலோ, அவ்விருவரும் இணைந்து வாழ சுமுகமான முறையில் தீர்வு காணுங்கள். இதற்கு அல்லாஹ்வின் சட்டத்தில் இடமுண்டு. ஏனெனில் பிரிவை விட அத்தகைய சமாதானமே மேலானது.பொருளாதாரம் காரணமாக பிரச்சினைகள் உருவானால் அதை அழகிய முறையில் தீர்த்து வைப்பது நல்லது. இருவரும் பரஸ்பர உறவு நாடி அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்வார்களானால், அது அவ்விருவருக்கும் நல்லதாகும். நிச்சயமாக நீங்கள் செய்வதனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை மறவாதீர்கள்.
4:129وَلَن تَسۡتَطِيعُوٓاْ أَن تَعۡدِلُواْ بَيۡنَ ٱلنِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡۖ فَلَا تَمِيلُواْ كُلَّ ٱلۡمَيۡلِ فَتَذَرُوهَا كَٱلۡمُعَلَّقَةِۚ وَإِن تُصۡلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا١٢٩
4:129. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் எவ்வளவு தான் விரும்பினாலும் மனைவிகளிடையே உளப்பூர்வமாக நீதமாக நடக்க ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால் குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக நியாயமாக நடந்து கொள்ளுங்கள். எனவே ஒரு மனைவியிடம் முற்றிலும் சாய்ந்து மற்றவளை கஷ்டத்திற்குள் ஆக்காதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நீதமாக நடந்து கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால் உங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். இது அல்லாஹ்வின் கிருபையாகும்.
அதாவது 4:3 வாசகத்தில் குறிப்பிடப்பட்டது போல அபலைப் பெண்களுக்கு வாழ்வளிப்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து இருந்தாலோ அல்லது இந்தக் குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பே பல மனைவிகள் இருந்தாலோ மேலே சொன்ன அறிவுரையின் படி மனைவிகள் இடையே குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக நீதமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
4:130وَإِن يَتَفَرَّقَا يُغۡنِ ٱللَّهُ كُلّٗا مِّن سَعَتِهِۦۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمٗا١٣٠
4:130. அவ்வாறு இணைந்து வாழ வேறு எந்த வாய்ப்பும் இல்லாது போனால், அவர்கள் பிரிந்து வாழ முற்படலாம். இவ்வாறு பிரிந்து வாழும் பெண்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்களை தீர்த்து வைக்கும் பொறுப்பை அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு ஏற்றுக் கொள்ளும். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் விசாலமான ஞானத்தின் அடிப்படையில் உள்ளவை ஆகும்.
அப்படிப்பட்ட ஆட்சியமைப்பு இல்லாத காலக்கட்டத்தில் இந்த பொறுப்பை ஜமாஅத்தார் அல்லது உறவினர்கள் கலந்தாலோசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4:131وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ وَصَّيۡنَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَإِيَّاكُمۡ أَنِ ٱتَّقُواْ ٱللَّهَۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدٗا١٣١
4:131. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்து படைப்புகளும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றிய வண்ணம் சிறப்பாகச் செயல்படுகின்றன. எனவே அங்கு எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை. அவ்வாறே உங்கள் வாழ்வும் சிறப்பாக மலர, உங்களுக்கும் அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன. இதற்குமுன் வேதம் அளிக்கப்பட்ட மக்களுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இத்தகைய அறிவுரைகளே வந்துள்ளன. அவற்றிற்கு முற்றிலும் அடிபணிந்து செயல்பட கட்டளையும் வந்தது. நீங்கள் இறைக் கட்டளைகளுக்கு மாறு செய்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்களுக்குத் தானே அன்றி அல்லாஹ்வுக்கு அல்ல. ஏனெனில் அகிலங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்காகவே உள்ளன. எனவே அவன் உங்களைச் சார்ந்து இருப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவனுடைய செயல் திட்டங்கள் யாவும் போற்றுதலுக்கு உரியதே ஆகும்.
4:132وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا١٣٢
4:132. ஆக அகிலங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் யாவும் அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றவே துல்லியமாகவும் துரிதமாகவும் செயல்படுகின்றன என்பதற்கு அவற்றின் செயல்பாடுகளே சாட்சி பகர்கின்றன.
மற்ற படைப்புகளுக்கும் மனிதனுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற படைப்புகள் பொறுத்தவரை அவை அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படவே முடியாது. ஆனால் மனிதனின் நிலை அவ்வாறு இல்லை. அவனும் தான் நாடியதை செய்யக் கூடிய வகையில் சுதந்திரத்தையும் ஆற்றலையும் பெற்றவனாக இருக்கின்றான். இது அல்லாஹ்வின் செயல் திட்டப்படி மனிதனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமும் சோதனையும் ஆகும்.
4:133إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأۡتِ بَِٔاخَرِينَۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرٗا١٣٣
4:133. இவ்வாறில்லாமல் மனித இனத்தைப் போக்கி விட்டு, அதற்குப் பதிலாக வேறு படைப்பைக் கொண்டு வரும் அல்லாஹ்வின் செயல் திட்டம் இருந்திருந்தால், அவ்வாறு செய்வதில் அவனுக்கு எவ்வித சிரமும் இருந்திருக்காது. அல்லாஹ் அனைத்து விஷயங்களிலும் பேராற்றல் உடையவனே என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். (மேலும் பார்க்க 14-9 &10)
4:134مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعَۢا بَصِيرٗا١٣٤
4:134. எனவே எந்த ஒரு சமுதாயமோ அல்லது தனிநபரோ தற்காலிக சுக வாழ்வை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தால், அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப தற்காலிக பலன்கள் கிடைத்து விடும். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயலாற்றினால் தற்காலிகப் பலன்களுடன், வருங்கால நிலையான பலன்களும் கிடைத்து வரும். (பார்கக: 2- 201 & 202) நிச்சயமாக அல்லாஹ்வின் செயல்திட்டம் அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்வதாக உள்ளது.
4:135۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ بِٱلۡقِسۡطِ شُهَدَآءَ لِلَّهِ وَلَوۡ عَلَىٰٓ أَنفُسِكُمۡ أَوِ ٱلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَۚ إِن يَكُنۡ غَنِيًّا أَوۡ فَقِيرٗا فَٱللَّهُ أَوۡلَىٰ بِهِمَاۖ فَلَا تَتَّبِعُواْ ٱلۡهَوَىٰٓ أَن تَعۡدِلُواْۚ وَإِن تَلۡوُۥٓاْ أَوۡ تُعۡرِضُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا١٣٥
4:135. இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் எப்போதும் நடுநிலை வகிக்கும் சமூகத்தவராகவே திகழவேண்டும். ஒருபோதும் நியாயத்தை கைவிடக் கூடாது. (மேலும் பார்க்க 5-8) எனவே மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க, நேர்மையான சாட்சியங்கள் இருப்பது அவசியமாகின்றன. எனவே நீங்கள் சாட்சி கூறுவதாக இருந்தால், அது உங்களுக்கோ உங்கள் பெற்றோர்களுக்கோ உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் சரியே, அல்லாஹ்வின் கட்டளைப் படி உண்மைக்கு சாட்சியாக நில்லுங்கள். இதில் செல்வந்தர்கள் ஏழைகள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. இவ்விரு விஷயத்தை பாதுகாப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். ஆக நீங்கள் நீதி அளிக்கும் விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை விட்டுவிட்டு தம் மனோ இச்சைக்கு இடமளிக்காதீர்கள். சாட்சி கூறுவதில் உண்மைக்குப் புறம்பாகவோ அல்லது உண்மை தெரிந்தும் சாட்சி கூறாமலிருப்பதோ கூடாது. ஆக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள்.
சாட்சி சொல்வதில் தான் ஒரு சமுதாயத்தில் நீதியை கட்டிக் காப்பாற்ற முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். ஒருவன் முஸ்லிம் வீட்டில் பிறந்ததால் அவனை உண்மையான மூஃமின் என்று கருத முடியாது. அவன் கடைப்பிடிக்கின்ற கொள்கை கோட்பாடுகளை வைத்தே அவனின் உண்மையான நிலையைக் கணிக்க முடியும். எனவே இறை வழிகாட்டுதலை முழுமையாக ஏற்று அதன்படி செயல்பட்டால் தான் உண்மையான மூஃமினாக முடியும்.
4:136يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِيٓ أَنزَلَ مِن قَبۡلُۚ
4:136. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் உண்மை நிலையை அறிந்து, அதை மனதார ஏற்று அதன் படி செயலாற்றுங்கள். அதன் படி சமுதாய சீரமைப்புப் பணிக்காக இறைத் தூதர் பிறப்பிக்கும் நடைமுறை சட்டங்களையும், வேத அறிவுரைகளையும் ஏற்று அதன்படி செயலாற்றுங்கள். இதற்கு முன் வந்த வேதங்களும் இதே அடிப்டையைக் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
وَمَن يَكۡفُرۡ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا١٣٦
எவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அவனுடைய செயல் திட்டங்களை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட பிரபஞ்ச இயற்கை சக்திகளையும், அவனுடைய வேத அறிவுரைகளையும், அதன் அடிப்படையில் உருவாக்கப் பட்ட நடைமுறை சட்டங்களையும், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்க மறுக்கின்றாரோ, அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விடுகின்றார். இதுதான் உண்மை.
4:137إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ سَبِيلَۢا١٣٧
4:137. ஈமான் கொள்ளுதல் என்பதன் பொருள், இறைவழிகாட்டுதலை சிந்தித்து அறிந்து மனதார ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்படுவதே ஆகும். (பார்க்க 2:208) சில விஷயத்தை ஏற்றுக் கொள்வது சில விஷயத்தை ஏற்க மறுப்பது மேலும் ஏற்க மறுப்பதிலேயே முனைப்பாக இருப்பது என்றிருந்தால் அவன் நேர்வழி பெறும் வாய்ப்பை இழந்து விடுகின்றான். இதனால் அவனுக்குப் பாதுகாப்பான வாழ்வும் கிடைக்காது.
4:138بَشِّرِ ٱلۡمُنَٰفِقِينَ بِأَنَّ لَهُمۡ عَذَابًا أَلِيمًا١٣٨
4:138. மாறாக சொல் ஒன்று செயல் வேறு என்று இரட்டை வேடமிடுபவர்கள் யாவரும் நயவஞ்சகர்களே. அத்தகையவர்களுக்கு நோவினை தரும் வேதனைகள் நிச்சயமாகக் காத்திருக்கின்றன என்பதை அறிவித்துவிடுங்கள்.
4:139ٱلَّذِينَ يَتَّخِذُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَيَبۡتَغُونَ عِندَهُمُ ٱلۡعِزَّةَ فَإِنَّ ٱلۡعِزَّةَ لِلَّهِ جَمِيعٗا١٣٩
4:139. இத்தகைய நயவஞ்சகர்கள் மூஃமின்களையும், இறை வழிகாட்டுதலையும் புறக்கணித்து விட்டு, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை உற்ற நண் பர்களாக எடுத்துக் கொள்கின்றனர். இப்படி செயல்படுவதால் அவர்களுக்கு உயர்வும் கண்ணியமும் கிடைத்து விடும் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இந்த உயர்வும் கண்ணியமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழுவதுமாக ஏற்று அதன்படி நடப்பதைக் கொண்டே கிடைக்கும்.
4:140وَقَدۡ نَزَّلَ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ أَنۡ إِذَا سَمِعۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ يُكۡفَرُ بِهَا وَيُسۡتَهۡزَأُ بِهَا فَلَا تَقۡعُدُواْ مَعَهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦٓ إِنَّكُمۡ إِذٗا مِّثۡلُهُمۡۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡكَٰفِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا١٤٠
4:140. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதும் அதை பரிகசிப்பதுமாக இருக்கும் கூட்டத்தில் நீங்கள் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டாம். அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களை விட்டு விலகியே இருங்கள். இவ்வேதத்தின் மூலம் உங்களுக்கு இடப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். அத்தகையவர்களோடு நீங்கள் தொடர்பு வைத்துக் கொண்டால், நீங்களும் அவர்களைப் போன்றே ஆகிவிடுவீர்கள். இப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் மற்றும் இறைவழிகாட்டு தலை ஏற்க மறுப்பவர்கள் யாவரும் இறுதியாக சேரும் இடம் நரகம் தான் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
4:141ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمۡ فَإِن كَانَ لَكُمۡ فَتۡحٞ مِّنَ ٱللَّهِ قَالُوٓاْ أَلَمۡ نَكُن مَّعَكُمۡ وَإِن كَانَ لِلۡكَٰفِرِينَ نَصِيبٞ قَالُوٓاْ أَلَمۡ نَسۡتَحۡوِذۡ عَلَيۡكُمۡ وَنَمۡنَعۡكُم مِّنَ ٱلۡمُؤۡمِنِينَۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَلَن يَجۡعَلَ ٱللَّهُ لِلۡكَٰفِرِينَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ سَبِيلًا١٤١
4:141. இந்த நயவஞ்சகர்கள் எப்போதும் உங்களை கவனித்த வண்ணம் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் அருளைக்கொண்டு உங்களுக்கு வெற்றி கிடைத்தால் தாமும் உங்களுடன் இருந்ததாகக் கூறுகின்றனர். மாறாக எதிரணியினருக்கு வெற்றி கிடைத்தால் அவர்களிடம் சென்று, அவர்களோடு இருந்து கொண்டு மூஃமின்களிடமிருந்து அவர்களை காப்பாற்ற துணை புரிந்ததாகக் கூறுகின்றனர். இவை யாவும் இப்போது பேசிக்கொள்ளலாம். இறைவனின் ஆட்சியமைப்பு நிலை நிறுத்தப்படும் கால கட்டத்தில் எல்லாமே வெளிச்சத்திற்கு வந்து விடும். மூஃமின்கள் மீது சமூக விரோதிகள் வெற்றி கொள்ள அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழி எதுவும் கிடைக்காது.
4:142إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمۡ وَإِذَا قَامُوٓاْ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُواْ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذۡكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلٗا١٤٢
4:142. ஆக இந்த நயவஞ்சகர்கள், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு செயல்படாமல் தடுக்க நினைக்கிறார்கள் என்பதே உண்மையாகும். ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய நயவஞ்சக செயல்களே அவர்களை சூழந்து அடையாளம் காட்டி விடும். (பார்க்க 2:9) மேலும் அவர்கள் சமுதாய மேம்பாட்டு பணிகளிலும் வேண்டா வெறுப்பாகவே கலந்துக் கொள்கிறார்கள். அதுவும் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காகவே. அவர்கள் மிகச் சொற்பமான அளவே அன்றி அல்லாஹ்வின் அறிவுரைகளில் கவனம் செலுத்துவதே இல்லை.
4:143مُّذَبۡذَبِينَ بَيۡنَ ذَٰلِكَ لَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِ وَلَآ إِلَىٰ هَٰٓؤُلَآءِۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَلَن تَجِدَ لَهُۥ سَبِيلٗا١٤٣
4:143. இத்தகைய நயவஞ்சகர்கள் மூஃமின்கள் பக்கமும் இருப்பதில்லை இறை வழிகாட்டுதலை நிராகரிப்பவர் கூட்டத்திலும் இருப்பதில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இவர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர். இப்படியாக இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு வழிதவறிச் செல்பவர்கள், அல்லாஹ்வின் நியதிப் படி வழிகேட்டிலேயே மூழ்கிவிடுவர். அவர்களை திருத்துவதற்கு வேறு எந்த வழியும் இருக் காது.
4:144يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَتُرِيدُونَ أَن تَجۡعَلُواْ لِلَّهِ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗا مُّبِينًا١٤٤
4:144. இறை வழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இத்தகைய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்களுடன் உள்ள தொடர்பை துண்டித்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில் நீங்களும் அல்லாஹ்வின் சட்டப்படி தண்டனைக்கு ஆளாவீர்கள். அவர்களோடு வைத்துக்கொள்ளும் நட்புறவே உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறும்.
4:145إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ فِي ٱلدَّرۡكِ ٱلۡأَسۡفَلِ مِنَ ٱلنَّارِ وَلَن تَجِدَ لَهُمۡ نَصِيرًا١٤٥
4:145. நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் நரக வேதனைகளில் சிக்கி படுமோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு உதவ யாரும் முன் வரமாட்டார்கள். அதாவது இவ்வுலகிலும் அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.
எனவே நீங்கள் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
4:146إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَٱعۡتَصَمُواْ بِٱللَّهِ وَأَخۡلَصُواْ دِينَهُمۡ لِلَّهِ فَأُوْلَٰٓئِكَ مَعَ ٱلۡمُؤۡمِنِينَۖ وَسَوۡفَ يُؤۡتِ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ أَجۡرًا عَظِيمٗا١٤٦
4:146. மாறாக இத்தகைய தவறான செயல்களை விட்டுவிட்டு மனம் திருந்தி, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி ஆக்கப்பூர்வமான நற்காரியங்களைச் செய்வதில் உறுதியாக இருந்து, மார்க்கத்தில் முழுவதுமாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, தம்மை தூய்மையாக்கிக் கொள்பவர்கள், மூஃமின்களின் பட்டியலில் இடம் பெறுவர். மேலும் இத்தகைய மூஃமின்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி தொடர்ந்து நற்பலன்கள் கிடைத்து வரும்.
4:147مَّا يَفۡعَلُ ٱللَّهُ بِعَذَابِكُمۡ إِن شَكَرۡتُمۡ وَءَامَنتُمۡۚ وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمٗا١٤٧
4:147. இப்படியாக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டு இறை வழிகாட்டுதலின் படி வாழ்ந்தால், உங்களை வேதனை செய்வதில் அல்லாஹ்வுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது? ஆக யார் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்ற உண்மை அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
பகுதி : 6
4:148۞لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلۡجَهۡرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلۡقَوۡلِ إِلَّا مَن ظُلِمَۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا١٤٨
4:148. இவ்வாறு திருந்தி வந்தவர்களை, இதற்கு முன் செய்த செயல்களை நினைவில் கொண்டு பரிகாசம் செய்யாதீர்கள். இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத ஒன்றாகும். பாதிக்கப்பட்டவர்கள் தம் மனக் குமுறல்களை வெளிப்படுத்துவது என்பது வேறு விஷயமாகும். அல்லாஹ் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4:149إِن تُبۡدُواْ خَيۡرًا أَوۡ تُخۡفُوهُ أَوۡ تَعۡفُواْ عَن سُوٓءٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوّٗا قَدِيرًا١٤٩
4:149. ஆக நீங்கள் நன்மையான காரியங்களை வெளிப்படையாக செய்தாலும் மறைமுகமாக செய்தாலும் அது அல்லாஹ்வுக்குத் தெரியும். அதே போல ஒருவர் செய்யும் தீமையைப் பெரிதுபடுத்தாமல் அவனைத் திருத்த முயல்வதும் நல்ல விஷயமே ஆகும். உங்களால் ஏற்படும் சிறு பிழைகளுக்கு பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்படுவதில்லை. இது அல்லாஹ்வின் நடைமுறைச் சட்டமாகும்.
4:150إِنَّ ٱلَّذِينَ يَكۡفُرُونَ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيۡنَ ٱللَّهِ وَرُسُلِهِۦ وَيَقُولُونَ نُؤۡمِنُ بِبَعۡضٖ وَنَكۡفُرُ بِبَعۡضٖ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيۡنَ ذَٰلِكَ سَبِيلًا١٥٠
4:150. ஆனால் அல்லாஹ் நிர்ணயித்த நிலையான சட்டங்களையும், அதன் அடிப்படையில் இறைத்தூதர் ஏற்படுத்தும் ஆட்சியமைப்பு வழிமுறைகளையும் புறக்கணித்து, அவ்விரண்டிற்கும் இடையே பிரிவு உண்ணடாக்க முயல்கிறார்கள். மேலும் சிலவற்றை ஏற்றுக் கொண்டு மற்றதை மறுத்து, தமக்கென ஒரு புது வழியை தாமே ஏற்படுத்திக் கொள்ள எண்ணுகிறார்கள். இது மிகப் பெரிய பாவச் செயலாகும்.
4:151أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ حَقّٗاۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا١٥١
4:151. இத்தகையவர்கள் தாம் இறைவழிகாட்டுதலை நிராகரிக்கும் சமூக விரோதிகள் ஆவர். இப்படிப் பட்டவர்கள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள்.
4:152وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمۡ يُفَرِّقُواْ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ أُوْلَٰٓئِكَ سَوۡفَ يُؤۡتِيهِمۡ أُجُورَهُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا١٥٢
4:152. மாறாக யார் இறைவழிகாட்டுதலை ஏற்று, அதன் அடிப்படையில் இறைத்தூதர் ஏற்படுத்தும் ஆட்சியமைப்பு சட்டங்களையும் ஏற்று, அதன்படி செயலாற்றி, இதற்கு முன் வந்த இறைத்தூதர்கள் விஷயத்திலும் வேற்றுமைப் பாராட்டுவதில்லையோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி நற்பலன்கள் கிடைத்து வரும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்புக் கருதியே வடிவமைக்கப்பட்டுள்ளன. இது அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையாகும்.
4:153يَسَۡٔلُكَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيۡهِمۡ كِتَٰبٗا مِّنَ ٱلسَّمَآءِۚ فَقَدۡ سَأَلُواْ مُوسَىٰٓ أَكۡبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓاْ أَرِنَا ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلۡمِهِمۡۚ ثُمَّ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ فَعَفَوۡنَا عَن ذَٰلِكَۚ وَءَاتَيۡنَا مُوسَىٰ سُلۡطَٰنٗا مُّبِينٗا١٥٣
4:153. வேதமுடையவர்களின் பேச்சை சற்று கவனியுங்கள். வானத்திலிருந்து ஒரு வேத நூலை நேரடியாக இறக்கிக் காட்டும்படி கூறுகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. இறை வழிகாட்டுதலை ஏற்காகததற்கு அவர்கள் கூறும் சாக்குப் போக்குகளே ஆகும். அவர்கள் தங்களிடம் வந்த மூஸா நபியிடமும் இப்படித் தான் பேசி வந்தார்கள். அல்லாஹ்வை கண்கூடாகப் பார்க்காத வரை, அவரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள். அவர்களுடைய அக்கிரம செயல்களுக்காக அவர்களை இடி முழக்கம் தாக்கியது. (பார்க்க 7:155) அதுமட்டுமின்றி அவர்களுக்கு மூஸா நபி மூலம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்பும், அவர்கள் ஒரு கட்டத்தில் காளைக் கன்றை தெய்வ வழிபாட்டிற்காக எடுத்துக் கொண்டனர். அதையும் பெரிது படுத்தாமல் அவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் நேர்வழி பெற மூஸா நபி மூலமாக தெளிவான வழிகாட்டுதல்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டன.
இப்போதும் அதே போல் தேவையற்ற தர்க்கங்கள் செய்கின்றனர். இறை வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள்.
4:154وَرَفَعۡنَا فَوۡقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمۡ وَقُلۡنَا لَهُمُ ٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُلۡنَا لَهُمۡ لَا تَعۡدُواْ فِي ٱلسَّبۡتِ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا١٥٤
4:154. மேலும் உயரமான ‘தூர்’ என்னும் மலை அடிவாரத்தில் வாழ்ந்து வந்த போது அவர்களிடம் உறுதிமொழி வாங்கினோம். அதன்படி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறை கட்டளைக்கு மட்டுமே தலை வணங்கி செயல்படும் படி கூறினோம். மேலும் வரம்பு மீறி அழிந்து போன மீனவக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள் என்று உபதேசித்தோம். இப்படியாக அவர்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கிக் கொண்டோம்.
4:155فَبِمَا نَقۡضِهِم مِّيثَٰقَهُمۡ وَكُفۡرِهِم بَِٔايَٰتِ ٱللَّهِ وَقَتۡلِهِمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَقَوۡلِهِمۡ قُلُوبُنَا غُلۡفُۢۚ بَلۡ طَبَعَ ٱللَّهُ عَلَيۡهَا بِكُفۡرِهِمۡ فَلَا يُؤۡمِنُونَ إِلَّا قَلِيلٗا١٥٥
4:155. ஆனால் அவர்கள் காலப் போக்கில் அல்லாஹ்விடம் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி, இறைவழிகாட்டுதலை நிராகரிப்பவர்களாக ஆகிவிட் டார்கள். இறைக் கட்டளைக்கு இணங்கி நடக்க அவ்வப்போது வந்த இறைத் தூதர்களையும் கொலை செய்யவே முனைந்தார்கள். எங்கள் இதயங்களில் திரை ஏற்பட்டுள்ளது எனவே உங்களுடைய எந்த உபதேசமும் நம்மிடம் செல்லாது என்றே கூறி வந்தனர். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் அனைத்து அருட்கொடைகளையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அல்லாஹ்வின் நியதிப் படி இத்தகையவர்களின் இதயங்களில் திரை ஏற்பட்டுவிடுகிறது. எனவே அவர்களில் மிகச் சிலரே இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வார்கள். இப்போதும் மனிதனின் நிலை இப்படியாகவே உள்ளது.
4:156وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا١٥٦
4:156. இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுப்பதோடு, ஈஸா நபியின் தாயார் மர்யமைப் பற்றியும் பல அவதூறுகளைச் சொல்லி அவருடைய கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கின்றனர். இப்படி செய்வதால், அவர்களுக்கு நேர்வழி கிடைக்குமா?
4:157وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِي شَكّٖ مِّنۡهُۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا١٥٧
4:157. மேலும் அவர்கள் சொல்லி வரும் கட்டுக் கதைகளில், மர்யமின் குமாரரும் இறைத் தூதருமான ஈஸாவை கொன்று விட்டதாக சொல்வதும் ஒன்றாகும். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை அவர்கள் சொல்லி வருவது போல் அவரை சிலுவையில் அறையவும் இல்லை. இவை யாவும் அவர்களுடைய யூகங்களே. அதில் பலர் மாறுபட்ட கருத்துக்களை ஏற்படுத்திக் கொண்டு, இன்னமும் சந்தேகத்திலேயே இருக்கின்றனர். இதைப் பற்றி அவர்களிடம் தெளிவான ஞானம் எதுவும் இல்லை. வெறும் யூகங்களை வைத்தே பேசி வருகின்றனர். ஆக அவர் கொல்லப்படவே இல்லை என்பது தான் உண்மையாகும்.
4:158بَل رَّفَعَهُ ٱللَّهُ إِلَيۡهِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا١٥٨
4:158. அவர்கள் கூறி வருவது போல் சிலுவையில் அறையப்பட்டு அவர் இழிவான மரணத்திற்கு ஆளாகவில்லை. மாறாக அல்லாஹ்வின் நியதிப் படி அவருக்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தன. நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் மாபெரும் ஞானத்தின் அடிப்படையில் செயல்படக் கூடியவையே ஆகும்.
4:159وَإِن مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ إِلَّا لَيُؤۡمِنَنَّ بِهِۦ قَبۡلَ مَوۡتِهِۦۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكُونُ عَلَيۡهِمۡ شَهِيدٗا١٥٩
4:159. இப்போதோ அந்த வேதமுடையவர்களை கவனியுங்கள். மனித பாவங்களைப் போக்கி, அவர்களை பரிசுத்தமாக்கவே ஈஸா நபி சிலுவையில் ஏறி இரத்தம் சிந்தியதாகத் திடமாக நம்புகின்றனர். குறைந்தது மரணம் சம்பவிக்கும் முன்பாவது இதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். ஆனால் மறுமைநாளில் இவர்களின் இக்கூற்றிற்கு எதிராக ஈஸா நபியே சாட்சி சொல்வார். (பார்க்க 5-116 &117)
4:160فَبِظُلۡمٖ مِّنَ ٱلَّذِينَ هَادُواْ حَرَّمۡنَا عَلَيۡهِمۡ طَيِّبَٰتٍ أُحِلَّتۡ لَهُمۡ وَبِصَدِّهِمۡ عَن سَبِيلِ ٱللَّهِ كَثِيرٗا١٦٠
4:160. யூதர்களோ வேத நூலை நேரடியாக இறக்கிக் காட்டச் சொல்கின்றனர் (4:153) இப்படிப்பட்ட விதண்டா வாதங்களும் முறையற்ற செயல்களையும் செய்து வந்த காரணத்தினால், அவர்களுக்குப் பல விஷயங்களில் கட்டுப் பாடுகளும் தடை உத்தரவும் விதிக்கப்பட்டு இருந்தன. மேலும் அல்லாஹ் காட்டிய வழியில் தம் செல்வங்களை செலவழிக்காமல் வீண் விரயம் செய்து வந்தார்கள். அவர்கள் திருந்தி வாழ்வதற்காக இத்தகைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.
4:161وَأَخۡذِهِمُ ٱلرِّبَوٰاْ وَقَدۡ نُهُواْ عَنۡهُ وَأَكۡلِهِمۡ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِۚ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمٗا١٦١
4:161. உதாரணத்திற்கு வட்டி வாங்குவதற்குத் தடை உத்தரவு இருந்தது. ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்து, வட்டி வாங்கி ஏழை எளிய மக்களின் உழைப்பில் சுகம் காணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அநியாயமாக ஏழை எளியோரின் சொத்துக்களை அபகரித்து வந்தார்கள். இவர்கள் செய்து வந்த செயல்களின் விளைவுகள் அல்லாஹ்வின் நியதிப்படி தோற்றத்திற்கு வந்த கால கட்டத்தில் கடுமையான தண்டனைக்கு ஆளானார்கள். இறை வழிகாட்டுதலை நிராகரித்து அதற்கு எதிராகச் செயல் படுபவர்களுக்கு இப்படிப்பட்ட கடுமையான வேதனைகள் சித்தப்படுத்தப் பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
4:162لَّٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ مِنۡهُمۡ وَٱلۡمُؤۡمِنُونَ يُؤۡمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيۡكَ وَمَآ أُنزِلَ مِن قَبۡلِكَۚ وَٱلۡمُقِيمِينَ ٱلصَّلَوٰةَۚ وَٱلۡمُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلۡمُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أُوْلَٰٓئِكَ سَنُؤۡتِيهِمۡ أَجۡرًا عَظِيمًا١٦٢
4:162. ஆனால் அவர்களுள் வேத ஞானங்களில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். உமக்கும் உமக்கு முன்னால் வந்த வேத உபதேசங்களையும் ஏற்று, முறைப்படி இறை நெறிமுறைகளைக் கடைப்பிடித்து சமுதாய மேம்பாட்டிற்காக உதவி செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயலுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று நடக்கிறார்கள். அவர்களுக்கும் அல்லாஹ்விடம் இருந்து மகத்தான சன்மானங்கள் கிடைக்கும்.
4:163۞إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا١٦٣
4:163. உமக்கு முன்னால் வந்த உபதேசங்கள் என்றதும், அவை வேறு, இந்த வேதமான குர்ஆன் வேறு என்று எண்ணி விடாதீர்கள். ஆதி முதல் நூஹ் நபி மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த ஏனைய நபிமார்கள், குறிப்பாக இப்றாஹீம் நபி, இஸ்மாயீல் நபி, இஸ்ஹாக் நபி, யாஃகூப் நபி, மற்றும் அவருடைய சந்ததியர்களில் வந்தவர்களுக்கும், மேலும் ஈஸா நபி, அய்யூப் நபி, யூனுஸ் நபி, ஹாரூன் நபி, சுலைமான் நபிக்கும், தாவூத் நபிக்கு அளிக்கப்பட்ட ‘ஜபூர்’ என்னும் வேதமும் ஒரே அடிப்படையைக் கொண்டதாகும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
4:164وَرُسُلٗا قَدۡ قَصَصۡنَٰهُمۡ عَلَيۡكَ مِن قَبۡلُ وَرُسُلٗا لَّمۡ نَقۡصُصۡهُمۡ عَلَيۡكَۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكۡلِيمٗا١٦٤
4:164. இப்படியாக வந்த பல நபிமார்களில் சிலருடைய வரலாற்று நிகழ்வுகளை நாம் உமக்கு விளக்கியுள்ளோம். உமக்கு முன்னால் வந்த பல நபிமார்களைப் பற்றி நாம் கூறவில்லை. மேலும் மூஸா நபியிடம் நாம் பேசவும் செய்தோம். (பார்க்க27:8-9) வராலற்றுச் சம்பவங்களும் வழிகாட்டுதல் அளிக்கும் விதங்களும் வெவ்வேறாக இருக்கலாம்.ஆனால் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் அளிக்கப்பட்ட இறைச்செய்தி ஒரே அடிப்படையைக் கொண்டதாகும்.
4:165رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا١٦٥
4:165. ஆக எல்லா நபிமார்களின் வருகையின் நோக்கமும் ஒரே அடிப்டையைக் கொண்டதாக இருந்தது. அதவாவது ஆக்கப்பூர்வமான நற்காரியங்களை செய்வோருக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுவதும், தீய செயல்களால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்து முன்னெச்சரிக்கை செய்வதும் அவர்களுடைய பணியாக இருந்தது. ஏனெனில் வருங்காலத்தில் மக்கள் அவதிப்படும் போது, எங்களுக்கு நேர்வழி காட்ட யாரையும் அல்லாஹ் அனுப்பவில்லையே என்று சொல்லக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு ஆகும். ஆக அல்லாஹ்வின் செயல் திட்டம் எல்லாவற்றையும் விட ஞானத்தில் மிகைத்ததாகவும் பேராற்றல் மிக்கதாகவும் உள்ளது.
4:166لَّٰكِنِ ٱللَّهُ يَشۡهَدُ بِمَآ أَنزَلَ إِلَيۡكَۖ أَنزَلَهُۥ بِعِلۡمِهِۦۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ يَشۡهَدُونَۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا١٦٦
4:166. அல்லாஹ் அருளியுள்ள அறிவுப்பூர்வமான வழிகாட்டுதல்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலானவை என்பதற்கு அழகான முறையில் இயங்கி வரும் இவ்வுலகமே சாட்சியாகத் திகழ்கிறது. அல்லாஹ் உருவாக்கிய பிரபஞ்ச இயற்கை சக்திகளின் செயல்பாடுகளும் இதற்கு சாட்சி பகர்கின்றன. இதை விட சிறந்த ஆதாரங்களும் சாட்சிகளும் வேறு எதுவாக இருக்க முடியும்?
4:167إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ قَدۡ ضَلُّواْ ضَلَٰلَۢا بَعِيدًا١٦٧
4:167. எனவே இறை வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டு அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் நிறைவேறாத படி தடைகளை ஏற்படுத்த எண்ணுவோர் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
4:168إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَظَلَمُواْ لَمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ طَرِيقًا١٦٨
4:168. இறை வழிகாட்டுதலை நிராகரித்து அநியாயம் செய்வோருக்கு, அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒருபோதும் நிலையான பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்காது. அவர்கள் திருந்தி வாழும் வாய்ப்பையும் பெற மாட்டார்கள்.
4:169إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا١٦٩
4:169. இத்தகையவர்களுக்கு நிலையான நரக வேதனைகள் தான் கிடைக்கும். அதிலிருந்து மீள்வதற்கு எந்த வழியும் இருக்காது. இவ்வாறு அவர்களை தண்டிப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்வித சிரமும் இல்லை.
4:170يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلۡحَقِّ مِن رَّبِّكُمۡ فََٔامِنُواْ خَيۡرٗا لَّكُمۡۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا١٧٠
4:170. எனவே உலக மக்களே! உங்களைப் படைத்த இறைவனிடமிருந்து உங்கள் வாழ்வின் சரியான பாதையைக் காட்டும் நேர்வழி வந்து விட்டது. அதை ஏற்று அதன் படி செயல்பட்டால், உங்களுக்கு நலமே உண்டாகும். அதை நிராகரித்து மாறு செய்தால் அதன் பாதிப்புகள் உங்களுக்கே. ஏனென்றால் வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் கட்டளைப் படியே செயல்படுகின்றன. நீங்கள் இந்த இறைச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டால், உங்கள் செயல்களின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். நீங்கள் செய்வது அனைத்தையும் அல்லாஹ் நன்கறிபவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.
4:171يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ فََٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ
4:171. வேதமுடையவர்களே! நீங்கள் மார்க்க விஷயங்களில் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமின் குமாரர் ஈஸா மஸீஹ் ஓர் இறைத்தூதரே ஆவார். மேலும் அவர் இறைக் கொள்கைக்குச் சான்றாக விளங்கியவர் ஆவார். இது விஷயமாக மர்யமிற்கு முன் கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இறைவனின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி மக்களை வழி நடத்துவதே அவருடைய போதனைகளின் கருவூலமாக இருந்தது. அதை மூன்று சித்தாந்தங்களாகப் பிரித்து பேசாதீர்கள். இப்படிப் பேசி வருவதை தவிர்த்துக் கொண்டால், அது உங்களுக்கே நலம்.
إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا١٧١
நிச்சயமாக ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அவனுக்கு ஒரு மகன் என்ற பேச்சிற்கே இடமில்லை. இப்படிப்பட்ட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அவன். வானங்களிலும் பூமியிலும் இருப்பவை யாவும் அவனுக்கே உரியவை ஆகும். அவன் யாரையும் சார்ந்து இல்லை. அகிலங்கள் அனைத்தும் செயல்பட அவனை சார்ந்தே இருக்கின்றன.
4:172لَّن يَسۡتَنكِفَ ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدٗا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَۚ وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ إِلَيۡهِ جَمِيعٗا١٧٢
4:172. கிறிஸ்தவர்களைப் பொருத்த வரையில் ஈஸா மஸீஹ்வும் மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து செயல்படுவதாக சொல்வது கௌரவக் குறைவு எனக் கருதுகிறார்கள். ஆனால் அவரும் மலக்குகளும் அவ்வாறு கருதவில்லை. யார் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படுவதை கௌரவக் குறைவாக எண்ணி ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்களோ, “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற சட்டத்தின் பிடியில் சிக்கிவிடுவர். அவர்கள் அனைவரும் செய்த ஒட்டு மொத்த செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துக் கொள்ளட்டும்.
4:173فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسۡتَنكَفُواْ وَٱسۡتَكۡبَرُواْ فَيُعَذِّبُهُمۡ عَذَابًا أَلِيمٗا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا١٧٣
4:173. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று ஆக்கப்பூர்வமான நற்செயல்களில் ஈடுபடும் சமுதாயங்கள், நிச்சயமாக நற்பலன்களப் பெறும். அவர்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே நன்மைகள் கிடைக்கும். மாறாக எந்தச் சமுதாயம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதை கௌரவக் குறைவு என்று எண்ணி ஆணவத்துடன் செயல்படுகிறதோ, அது துயர்மிக்க வேதனைகளில் சிக்கிக் கொள்ளும். அந்த வேதனைகளிலிருந்து வெளிவர யாரும் துணை நின்று உதவி புரிய மாட்டார்கள். அதற்கு ஒரே வழி அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படுவதே ஆகும். மேலும் மரணத்திற்குப் பின்பு இந்த வாய்ப்பும் கைவிட்டு நழுவி விடும்.
4:174يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُم بُرۡهَٰنٞ مِّن رَّبِّكُمۡ وَأَنزَلۡنَآ إِلَيۡكُمۡ نُورٗا مُّبِينٗا١٧٤
4:174. உலக மக்களே! இவையே உங்களைப் படைத்த இறைவனிடமிருந்து வந்துள்ள ஆதாரப்பூர்வமான நிரந்தரமான தெளிவான சட்ட விதிமுறைகளாகும். இவை உங்களுடைய ஒளிமயமான வாழ்விற்கு விரிவான வழிகாட்டுதலை அளிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
4:175فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱعۡتَصَمُواْ بِهِۦ فَسَيُدۡخِلُهُمۡ فِي رَحۡمَةٖ مِّنۡهُ وَفَضۡلٖ وَيَهۡدِيهِمۡ إِلَيۡهِ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا١٧٥
4:175. ஆக எந்தச் சமுதாயம் இவற்றை தன் வாழ்வின் இலட்சியமாகக் கருதி, அனைவரும் ஒருங்கிணைந்து உறுதிப்பட செயல்படுமோ அது அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறும் ஆற்றலைப் பெற்றுவிடும். மேலும் மனித வாழ்க்கையின் சரியான இலக்கை அடையும் பாதையும் கிடைத்து வரும்.
அந்த இலக்கு என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:
1. உலக மக்கள் அனைவரும் ஒரே இனத்தவர். அவர்களுள் சகோதரத்துவமும் பாசமும் வளர வேண்டும். (பார்க்க 2:213)
2.எவ்வித பயமோ கவலையோ இல்லாத பாதுகாப்பான வாழ்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். (பார்க்க 2:38)
3.மனித ஆதிக்க வெறி என்று எதுவும் இவ்வுலகில் இருக்கக் கூடாது (3:79)
4.தாராளப் பொருளாதார வசதிகள் கொண்ட சமுதாயமாக விளங்க வேண்டும் (பார்க்க 2:118,119)
5.நீதியும் சமத்துவமும் கொண்டு விளங்கும் இவ்வுலகம், இறைவழிகாட்டுதல் என்ற ஒளியைக் கொண்டு பிரகாசிக்க வேண்டும். (பார்க்க 39:69)
6.அனைத்து தரப்பு மக்களின் ஆற்றல்களும் வேகமாய் வளரச் செய்து, வாழ்வின் முன்னேற்றப் படித்தரங்களைக் கடக்கும் தகுதி உடைவர்களாய் உருவாக்க வேண்டும் (பார்க்க 84:19)
7.மனிதப் பிரச்சனைகள் அனைத்தும் இறைவழிகாட்டுதலின் படியே தீர்வு காணப்பட வேண்டும் (பார்க்க- 5:44)
இவை அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்த மனித வாழ்வின் இலக்கின் பால் அழைத்துச் செல்கின்ற நேரானப் பாதையாகும்.
4:176يَسۡتَفۡتُونَكَ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِي ٱلۡكَلَٰلَةِۚ إِنِ ٱمۡرُؤٌاْ هَلَكَ لَيۡسَ لَهُۥ وَلَدٞ وَلَهُۥٓ أُخۡتٞ فَلَهَا نِصۡفُ مَا تَرَكَۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمۡ يَكُن لَّهَا وَلَدٞۚ فَإِن كَانَتَا ٱثۡنَتَيۡنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَۚ وَإِن كَانُوٓاْ إِخۡوَةٗ رِّجَالٗا وَنِسَآءٗ فَلِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ أَن تَضِلُّواْۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ١٧٦
4:176. இப்போது பாகப்பிரிவினை சம்பந்தமாக மேற்கொண்டு சில விளக்கங்கள் கேட்கப்படுகின்றன. அதற்கு அல்லாஹ்விடமிருந்து இவ்வாறு பதில் வருகிறது.
தாய் தந்தை, பாட்டனார், பிள்ளை என்று வாரிசுதாரர்கள் யாருமே இல்லாத சொத்துக்கள் யாருக்குப் போய் சேரும் என்பதே அவர்களின் கேள்வியாகும். அவ்வாறு வாரிசு இல்லாத செல்வந்தர் இறந்து விட்டால், அவருக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அச்சொத்திலிருந்து அவளுக்கு சரிபாதி கிடைக்கும். இறந்து போனவர் பெண்ணாக இருந்தால் அவளுக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்தால் அவளின் சகோதரன் அவளுடைய சொத்திற்கு முழு வாரிசு ஆவான். சகோதரிகள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அச்சொத்தில் மூன்றில் இரு பகுதிகளை எடுத்து சமமாகப் பிரித்துத் தரப்படும். சகோதரர்கள் சகோதரிகள் இருந்தால் ஏற்கனவே சொன்ன 2:1 என்ற விகிதாச்சாரப்படி பிரித்துத் தரப்படும். இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும். நீங்கள் வழிதவறிச் செல்லாமல் இருக்க உங்களுக்கு இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் அறிபவனாகவே இருக்கின்றான்.