۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
தலைப்பு வாரியான நூல்கள்

ஷைத்தானுடன் தர்க்கம்

23 பகுதிகள்  ·  163 வசனங்கள்

1முன்னுரை

இந்த தலைப்பை படித்ததும் இப்படி ஓர் உரையாடல் எங்கே எப்போது நடந்தது என்று கேட்காதீர்கள். இது ஒரு கற்பனையே. இருந்தாலும் இதன் கேள்வி பதில்கள் திருக்குர்ஆனின் அடிப்படையைக் கொண்டதாகும். அன்பர்கள் திருக்குர்ஆனை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த உரையாடல் சாதாரணமாக பேசுவதைப் போலவே எழுதியுள்ளோம். காரணம், விளங்கிக் கொள்வதற்கு எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு தந்துள்ளோம்.

இந்தத் தலைப்பில் எழுதுவதன் நோக்கமே ஷைத்தானைப் பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே. காரணம் காலம் காலமாக ஷைத்தான் என்பது ஒரு தனிப் பிறவி என்றும் அது நமக்கு தீங்கு இழைப்பவன் என்றும் சொல்லி வந்துள்ளார்கள். அதை வைத்து பலர் பல்வேறு கதைகளையும் மக்களிடம் சொல்லி வருகிறார்கள். மற்றும் சிலர் ஷைத்தானை சாத்தான் என்றும் சனியன் என்றும் சொல்வார்கள்.

மேலும் சில மதவாதிகள் சனி பகவான் என்பார்கள். மற்றும் சிலர் சாத்தானை வசப்படுத்தி பல மாய மந்திர வேலைகளை செய்வதாக சொல்வார்கள். இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகத்தை எழுதியுள்ளோம். அன்பர்கள் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

வழக்கம் போல் திருக்குர்ஆனின் அத்தியாய எண்ணையும் வாசக எண்ணையும் தந்துள்ளோம். 2:36 என்றால் அத்தியாயம் 2 வாசகம் 36 என்று பொருள்படும். அன்பர்கள் திருக்குர்ஆனை வைத்து சரி பார்த்துக் கொள்ள சுலபமாக இருக்கும்.

மேலும் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். எழுதப்பட்டுள்ள உண்மைகள் சரி என்று எண்ணினால் திருக்குர்ஆன் ஷைத்தானைப் பற்றி இப்படித்தான் பேசுகிறது என்று சொல்ல வேண்டுமே அன்றி, இன்னார் இவ்வாறு எழுதியுள்ளார் என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.

இங்ஙணம்,

ரூஹுல்லா நெறி. பி.காம்.

2அறிமுகம்

ஏதோ ஒரு அதட்டல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு போனேன். என்னவாக இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தேன். எனவே நான்

?
கேள்வி– யாரப்பா நீ? எங்கே வந்தாய்?
۞
ஷைத்தான்என்னை தெரியாதா உங்களுக்கு? என்னை தெரியாதவர் இந்த ஜகத்தில் யாருமே இருக்க முடியாது.
?
கேள்வி– அவ்வளவு முக்கியமான ஆளா நீ? யார் என்றுதான் சொல்லேன். என் கண்ணுக்கு தென்படவில்லையே.
۞
ஷைத்தான்நான்தான் ஷைத்தான். என்னை எல்லோருக்கும் தெரியுமே! நீங்க என்ன புதிதாக கேள்வி கேட்கிறீங்க? என்னை சாத்தான் என்றும் சிலர் சொல்வார்கள்.

3ஆதமை வழிகெடுத்த ஷைத்தான்?

?
கேள்விகண்ணுக்கு புலப்படாத ஒன்றை எப்படிப்பா அடையாளங் கொள்வது? சரி. சுவனத்திலிருந்த ஆதமை வழிகெடுத்ததாக சொல்றாங்களே அது நீ தானா? உன்னால் தான் அவர் சுவனத்திலிருந்து வெளியேற்றப் பட்டாரா? (பார்க்க - 2:35)
۞
ஷைத்தான்அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சற்றே ஊசலாட்டம் செய்தேன். அவ்வளவுதான். அவரே என் வலையில் வந்து சிக்கிக் கொண்டார். அதனால் அவர் சுவனத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். (பார்க்க -2:36)
?
கேள்விசுவனத்தில் ஏதோ மரம் ஒன்று இருந்ததாமே! அதை நெருங்கக்கூடாது என்று ஆதமுக்கு அல்லாஹ் கட்டளை இட்டதாக சொல்கிறார்களே. (பார்க்க - 2:35)
۞
ஷைத்தான்அப்படி ஆதம் நெருகக் கூடாத மரம் ஒன்று எதுவும் இருந்ததாக எனக்கு தெரியாது. சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்தி சண்டை சச்சரவு என்ற “ஷஜரா” தான் (شجر)தான் எனக்குத் தெரியும். அதைத் தான் நான் உருவாக்கினேன் (பார்க்க - 4:65)
?
கேள்விசுவனத்தில் இருவர் தானே இருந்தார்கள். அதற்குள்ளே எப்படி சமுதாயம், சண்டை, மோதல் எல்லாம்?
۞
ஷைத்தான்உஷ்.... அது பரம ரகசியம். உங்களுக்கு மட்டும் தெரியப் படுத்துகிறேன். யாரிடமும் சொல்லாதீங்க. ஆதம் என்பது தனி மனிதர் கதை அல்ல. மனித இனத்தை குறிக்கும் சொல்லாகும். பைபிள் கதையை குர்ஆனில் திணித்து விட்டேன்.
?
கேள்விஅந்த மரத்தில் விளைந்த ஏதோ ஒரு பழத்தை ஆதமும் அவரது மனைவியும் புசித்துவிட்டதாக சொல்கிறார்களே (பார்க்க -20:121)
۞
ஷைத்தான்அதான் சொன்னேனே! அது பைபிள் கதை என்று. உண்மை நிலையை உங்க அல்லாஹ்விடமே கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்க.

4நெருப்பால் படைக்கப்பட்ட ஷைத்தான்

?
கேள்வி–சரி. உன்னை நெருப்பால் படைத்ததாக சொன்னாயே. (பார்க்க -15:33)
۞
ஷைத்தான்அமாம். தீய செயல்கள் என்று சொல்கிறீர்கள். அதில் “தீ” என்ற எழுத்தும் இணைந்து இருக்கு. தீ என்றதும் பற்றி எரியுமா? அது போலத்தான் நான் சொன்னதும்.
?
கேள்விஏன் அப்படி சொன்னாய்? அது உண்மை இல்லையா?
۞
ஷைத்தான்பின்னே என்னங்க. மண்ணால் படைக்கப்பட்ட மனிதனின் கட்டளைக்கு அடிபணியும் படி سجدہ ஸஜ்தா செய்ய சொன்னால் எப்படி நியாயமாகும்? மண்ணைவிட நெருப்புதானே ஒசத்தி. அதனால் தான் நான் அப்படி சொன்னேன். (பார்க்க -15:33)

5ஆதமுக்கு ஸஜ்தா செய்ய மறுத்த ஷைத்தான்

?
கேள்வி– ஸஜ்தா செய்வது என்றால் என்ன?
۞
ஷைத்தான்அது கூட தெரியாதா? ஒருவருடைய கட்டளைக்கு இணங்கி செயல்படுவதுதான் ஸஜ்தா سجدہ என்பதாகும். (பார்க்க -16:40&50) அது எனக்கு பிடிக்கலே.
?
கேள்வி– ஏனப்பா? மனிதனுக்கு கட்டுப்பட சொன்னது நம்மை படைத்த அல்லாஹ் தானே. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுவது நம் கடமை தானே. அல்லாஹ்வையே எதிர்த்து பேச உனக்கு என்ன துணிச்சல்.
۞
ஷைத்தான்அங்கு மட்டும் என்ன நடக்குதாம். அல்லாஹ்வின் அறிவுரைக்கு எதிராக மனுஷனும் செயல்படுவதில்லையா? (பார்க்க -2:64) மனுஷன் செய்தால் சரி. நான் செய்தால் தப்பா?
?
கேள்விஎல்லாம் உன் பேச்சை கேட்டு நடப்பதால் வருகின்ற வினைதான்.
۞
ஷைத்தான்எப்படியாவது மனுஷனை அல்லாஹ்வை விட்டு பிரித்துவிடுவது தானே என் முக்கியமான பணி.

6அல்லாஹ்வை எதிர்த்து செய்த அறைகூவல்

?
கேள்வி– அப்படி என்ன உனக்கு அல்லாஹ்வின் மீது கோபம்.?
۞
ஷைத்தான்என்னை அல்லாஹ் வழிகெட்டவனாக ஆக்கியதால் அவனது படைப்பாகிய மனிதனை வழிகெடுத்து சுவனத்திற்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்வதே என் பணி (பார்க்க -7:16)
?
கேள்வி– அதெல்லாம் இப்லீசுடைய கூற்று ஆயிற்றே.
۞
ஷைத்தான்ஆமாங்க. நாங்க இருவரும் ஒண்ணுக்குள்ளே ஓண்ணு தானுங்க. அவன் வேறெ நான் வேறெ அல்ல. நாங்க இருவரும் இணைந்து தான் மனுஷனை வழிகெடுக்கும் பணியை செய்து வருகிறோம்.
?
கேள்வி– அப்படி என்ன மனுஷன் மேலே உனக்கு இவ்வளவு கோபமும் வெறுப்பும்? ஏன் மனுஷனை கெடுக்கனும் என்று விருப்புகிறாய்?
۞
ஷைத்தான்பின்னே என்னங்க. நாங்க தான் ஒசத்தி எனும் போது மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு உலகத்தையே கட்டி ஆளக்கூடிய உயர் அந்தஸ்து கொடுத்து خلیفہ ஃகலீஃபா ஆக்கியது சரியா? (பார்க்க -2:30) அது மட்டுமின்றி மலக்குகளை எல்லாம் மனித கட்டளைக்கு சிரம் பணிய வைத்தது (பார்க்க -2:34) எனக்கு மிக மிக வயிற்றெரிச்சல்.
?
கேள்விஅது அகிலத்தைப் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கட்டளை ஆயிற்றே. அதற்கு எதிராக செயல்படுவது நியாயமாகுமா? அப்படியும் மனிதனின் பொறுப்பில் தானே உலகில் ஆட்சி அதிகாரம் எல்லாமே இருக்கு?
۞
ஷைத்தான்அது சரி. அல்லாஹ் காட்டிய வழியில் ஆட்சி செய்ய நான் யாரையும் விட்டு வைத்ததில்லையே. ஆட்சி அதிகாரத்தில் என்னுடைய ஆதிக்கம் தானே மேலோங்கி இருக்கு. விளக்கமா அப்புறம் சொல்றேன்.

7மனிதனுக்கு பகைவனான ஷைத்தான்

?
கேள்வி– கடைசி மனிதனை என்ன தான் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறாய்?
۞
ஷைத்தான்அவனை அறிவிலியாக ஆக்க வேண்டும்.( பார்க்க -33:72) அவசரக் காரனாக ஆக்க வேண்டும் (பார்க்க -21:37) ஏழ்மையை காரணம் காட்டி அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தடுக்க வேண்டும். (பார்க்க -2:268) செல்வத்தை குவிக்க வைக்க வேண்டும் (பார்க்க -70:18) அநியாயக்காரனாக ஆக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்து மக்களை வழிகெடுக்க வைக்க வேண்டும்(பார்க்க - 6:21) இன்னும் பலப் பல.
?
கேள்வி– உன்னை எப்படி அடையாளங் கொள்வது?
۞
ஷைத்தான்ஆணவம் மற்றும் அகம்பாவத்திற்கு நான் பேர் போனவன். (பார்க்க -2:34) இறைக்கட்டளைக்கு ஸஜ்தா – அடிபணிய மறுப்பவன்
?
கேள்விநீ கொஞ்சம் வெளியே வாயேன். ஏன் என் கண்களுக்கு மறைவாக இருந்துக் கொண்டு இப்படி எல்லாம் செயல்படுகிறாய்?
۞
ஷைத்தான்மனிதனின் அறிவுக் கண்ணுக்குப் புலப்படாமல் மறைவாக இருப்பதால் என்னை “ஜின்” என்றும் சொல்வார்கள். (பார்க்க -18:50)
?
கேள்விஉன்னை நெருப்பால் படைத்ததாக ஏன் சொல்லப்பட வேண்டும்.
۞
ஷைத்தான்மனிதனுடைய ஒழுக்க மாண்புகள் மனித நேயம் ஆகிய அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும் வல்லமை எனக்கு உள்ளதால் நான் “தீ”யாக இருக்கிறேன். நீங்களும் சற்று உஷாராக இருந்துக் கொள்ளுங்க.
?
கேள்விஅல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்காதது உன் தப்புதானே. இதை புரிந்துக் கொள்ளாத நீ பழியை தூக்கி அல்லாஹ்வின் மீதே சுமத்துவது எந்த வகையில் நியாயம்?
۞
ஷைத்தான்மனிதன் மட்டும் என்னவாம்? காலமெல்லாம் எனக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து விட்டு பிரச்சனைகள் என்று வரும் போது அல்லாஹ்வின் மீது பழி சுமத்துவதில்லையா? “யா அல்லாஹ்! ஏன் தான் நீ நம்மை இப்படி சோதிக்கிறாயோ!” என புலம்புவதில்லையா?
?
கேள்விஅப்போ உன்னை ஒழித்துக் கட்ட வேண்டியது தான்?
۞
ஷைத்தான்அது எப்படி உங்களால் முடியும்?
?
கேள்விஇவ்வளவு ஆபத்தான ஆளாக இருக்கிறாயே. உன்னை ஒழித்துக் கட்டாமல் எப்படி விட்டு வைப்பது?
۞
ஷைத்தான்ஏங்க? நெருப்பில்லாமல் மனித வாழ்க்கை சுகமாக தொடர முடியுமா? மனித வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நெருப்பு மிகவும் அவசியமான ஒன்றாக இல்லையா? அதை நீங்கள் கட்டுப்படுத்தி வைப்பதில்லையா? அது போல என்னையும் நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அல்லவா?
?
கேள்விவிளங்கவில்லையே. விவரமாக சொல்லு.
۞
ஷைத்தான்அதாவது மனித வாழ்வில் எவ்வாறு நெருப்பு முக்கியமான அங்கம் வகிக்கிறதோ அது பொலத் தான் நானும். மனிதனுள் இயங்கி வரும் கோபம், சந்தோஷம், இன்பம், காமம், ஆசை, சுயம், சிந்தனை ஆகிய உணர்வுகள் மனிதனை இயக்கும் விசைச் சக்திகளாக இருக்கின்றன அல்லவா? அவை இல்லை என்றால் அவன் வெறும் மண்ணு தான். இத்தகைய விசைச் சக்தியாக மனிதனுள் இயங்கி வருபவன் தான் நான்.
?
கேள்விஇவை எல்லாம் இயல்பாக மனிதனுள் இருக்கின்ற அல்லாஹ்வின் படைப்புகள் தானே. இதில் உனக்கு என்ன பங்கு இருக்கு?
۞
ஷைத்தான்அவை எல்லாம் இயல்பாக இருக்கும் வரை உள்ளூர உந்துதல்கள் தான். ஆனால் அவற்றை கட்டுக்கடங்காதவாறு வழிகெடுக்க வைப்பது தான் என் வேலை. அவற்றை மிகைப்படுத்தி “தீ”ய பழக்கங்களாக மாற்றுவதே என் பணி.

8அல்லாஹ்வுக்கு எதிராக செயல்படும் ஷைத்தான்

?
கேள்விதிருக்குர்ஆன் எனும் வேத்ததின் மூலம் மனிதனை அறியாமை என்ற இருளிலிருந்து ஒளிமயான வாழ்வின் பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதானே அல்லாஹ் நாட்டம்? (பார்க்க -14:1)
۞
ஷைத்தான்ஆனால் மனிதனை அறியாமை என்ற இருளில் மூழ்க வைக்கவே முயற்சி செய்து வருகிறேன். (பார்க்க - 2:257)
?
கேள்விமனிதன் தாராள மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்பது தானே அல்லாஹ்வின் நாட்டம்? (2:274)
۞
ஷைத்தான்ஆனால் அவனுள் உலோபித்தனம் வளர பாடுபட்டு வருகிறேன் (பார்க்க - 3:37&38)
?
கேள்விஅல்லாஹ் வட்டி தொழிலுக்கு தடை விதிக்கின்றானே. (பார்க்க - 2:276)
۞
ஷைத்தான்ஆனால் வட்டி தொழிலைக் கொண்டு கிடைக்கும் சொகுசான வாழ்க்கையை வைத்து அவனை பைத்தியம் பிடித்தவனைப் போல் ஆக்குகிறேன். வட்டி தொழிலை நியாயப் படுத்தி பேச வைக்கிறேன்.
?
கேள்விமனிதன் அழகான தோற்றத்துடன் திகழ வேண்டும் என்பது தானே அல்லாஹ்வின் நாட்டம்? இதற்காக அல்லாஹ் அலங்கார ஆடைகளை ஏற்படுத்தி தந்துள்ளானே. அத்துடன் “இறையச்சம்” என்ற ஆடையையும் அவனுள் வளரச் செய்தான் அல்லவா? (பார்க்க - 7:26)
۞
ஷைத்தான்ஆனால் மனிதனுடைய தோற்றத்தை அலங்கோலமாக அக்க பல வகையில் முயற்சி செய்து வருகிறேன். கை கால் முகங்களை கம்பியால் குத்த வைத்து, அவனது தலையை மொட்டை அடிக்க வைத்து, அவனை அரை நிர்வாணமாக்கி அவனை அலங்கோலமாக காட்சி அளிக்கும்படி செய்து வருகிறேன். இதற்காக வீணான எண்ணங்களையும் ஆசைகளையும் தூண்டி வருகிறேன். (பார்க்க - 4:119)
?
கேள்விஇன்னும் என்னவெல்லாம் செய்து இருக்கிறாய்? அதையும் சொல்லிவிடு.
۞
ஷைத்தான்மனித இனத்தை பிரித்து காட்டுவதற்காக விதவிதமான வண்ண வண்ண ஆடைகளை செய்து கொடத்து விட்டேன்.
?
கேள்விஆடை குறைப்பு செய்த முன்னோர்கள் தம் சந்தோஷமான சுவன வாழ்வை இழந்து விட்டார்களே அது போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் என்று அல்லாஹ் முன்னெச்சரிக்கை செய்கின்றானே (7:27)
۞
ஷைத்தான்அக்கால முன்னோர்கள் செய்த தவரை இக்கால மக்களும் தொடர்ந்து செய்து வர பாடுபட்டு வருகிறேன். அதாவது கூடுமான வரையில் வெட்க ஸ்தலங்களை பார்த்து ரசிக்கும் படி செய்து வருகிறேன். அப்போது தான் விபச்சாரம் பல்கி பெருகும்.
?
கேள்விஅல்லாஹ் விபச்சாரத்தை தடுத்ததோடு மட்டுமல்லாமல் விபச்சாரத்தின் பக்கமே நெருங்கக் கூடாது என்றும் அது மானக்கேடானது என்றும் கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் “தீ”ய வழியாக இருப்பதாக எச்சரிக்கை செய்துள்ளானே (பார்க்க - 17:32)
۞
ஷைத்தான்பழங்காலத்தில் இவ்விஷயத்தில் எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட ஏற்பட மக்களை வழிகெடுக்க அவற்றை எனக்கு மிகவும் சாதகமாக ஆக்கிக்கொண்டேன். முதலில் சினிமா, அதை அடுத்து தொலைக் காட்சி, இன்டெர்நெட், மொபைல் நெட் என அரிய பல சாதனங்கள் கிடைத்தன. அந்த சாதனங்களை பயன்படுத்தி ஆபாசங்களை வெளிப்படுத்த பல வகையில் முயற்சி செய்தேன். அவற்றில் எனக்கு மிகப் பெரிய வெற்றியும் கிடைத்து வருகிறது. இப்போதெல்லாம் விபச்சாரத்தைப் பற்றியோ பாலியல் பலாத்காரத்தைப் பற்றியோ கவலையே இல்லை. என்னுடைய விஞ்ஞான சகாக்களே கவனித்துக் கொள்கின்றன. இனிய தகாத பாலியல் உறவுகளிலிருந்து தப்பிப்பது மிக மிக கஷ்டம்.
?
கேள்விஇதன் விளைவாக பல குடும்பங்கள் சீரழிந்து விடுமே. எனவே நீ மனிதனுக்கும் மனித நேயத்திற்கும் நேர் விரோதியாக இருக்கிறாயே. (பார்க்க -36;60)
۞
ஷைத்தான்என்னங்க நீங்க? அல்லாஹ்வின் கண்ணியத்தின் மீது சத்தியமாக மக்கள் அனைவரையும் வழிகெடுப்பேன் என்று நான் சேல்லஞ்ச் பண்ணினேனே (பார்க்க - 38:82) அதற்குள் மறந்து விட்டீர்களே!
?
கேள்விஉன்னை பின்பற்றுபவர்கள் அனைவரையும் நரகத்தில் நிரப்புவதாக அல்லாஹ் எச்சரித்து இருக்கின்றானே (பார்க்க - 17:63), அதையும் மீறி மனிதனுக்கு எப்படி தைரியம் வந்தது? இதற்காக நீ என்ன யுக்தியை கையாளுகிறாய்?
۞
ஷைத்தான்இதற்காக நான் முன்னோர்களின் வழிமுறைகளை பின்பற்றி வரும்படி செய்து வருகிறேன். (பார்க்க - 7:28) ஆக “முன்னோர்களின் வழிமுறை” என்ற கருவி எனக்கு மிகவும் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கு. அதவே மனுஷனெ நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்ல போதுமான கருவியாக இருக்கு. (பார்க்க - 31:21)
?
கேள்வி–இருந்தாலும் அல்லாஹ் வேதனை மிக்க நரகத்தின் பயங்கரமான நிலையைப் பற்றி பல முறை தன் வேதத்தின் மூலம் அறிவித்துள்ளானே!
۞
ஷைத்தான்அதனால் என்ன? நரகத்தில் சில நாள் மட்டும் இருக்க நேரிடும். அதன் பின் அல்லாஹ் சுவனத்தில் சேர்த்து விடுவான் என்று கதை கட்டி வருகிறேன். (பார்க்க - 3:24 & 2:80)
?
கேள்விஅவ்வாறு நரகத்திலிருந்து சுவனத்திற்கு அனுப்புவதாக அல்லாஹ்வின் வாக்கு எங்கேயாவது இருக்கா என்று கேட்கின்றானே! (பார்க்க -2:80)
۞
ஷைத்தான்அதெல்லாம் குர்ஆனை அர்தத்துடன் படித்து தெரிந்துக் கொன்டால் தானே. வெறும் அரபி வார்த்தையை படிக்க வைக்கிறேன்.
?
கேள்விமனிதன் எப்போதும் “தீ”யதை விலக்கி சுருசுருப்பாக வாழவேண்டும் என்பது தானே அல்லாஹ்வின் நாட்டம்?( பார்க்க - 3:104 & 53:39)
۞
ஷைத்தான்ஆனால் மனிதனுள் ஒண்ணுக்கும் உதவாத வீணான எண்ணங்களையும் ஆசைக் கனவுகளையும் ஏற்படுத்தி அவனை ஏமாற்றி வருகிறேன் (பார்க்க - 4:120) இப்படியாக அவனுடைய வாழ்வை நரகமாக மாற்றி வருகிறேன் (பார்க்க - 4:121)
?
கேள்விதீய செயல்களால் முந்தைய சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து மனிதனுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பது தானே அல்லாஹ்வின் நாட்டம் (பார்க்க - 3 :137 & 138)
۞
ஷைத்தான்ஆனால் மனிதனின் தீய செயல்களை அழகாக காட்டி வரலாற்றிலும் படிப்பினை பெறாதவாறு செய்து வருகிறேன். (பார்க்க - 6:42&43) மேலும் வரலாற்று உண்மைகள் எல்லாம் முன்னோர்களின் கட்டுக்கதை என்றும் சொல்ல வைக்கிறேன். (பார்க்க - 27:68)
?
கேள்விஉலக மக்களுக்கு நேர் வழி காட்டத்தானே அல்லாஹ் திருக்குர்ஆனை அருளி இருக்கிறான்?(பார்க்க - 68:52)
۞
ஷைத்தான்ஆனால் நான் திருக்குரானைப் பற்றி வீணான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறேன். இதனால் யாரும் அதன் மூலம் நேர்வழி பெறாதவாறு பார்த்துக் கொள்கிறேன். (பார்க்க - 6:68)
?
கேள்விதன் கட்டளைக்கு மட்டுமே கட்டுப்பட்டு மனிதன் வாழவேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்? (பார்க்க - 36:60-61)
۞
ஷைத்தான்ஆனால் அல்லாஹ் அல்லாதவற்றை மனிதன் கரங்களால் படைக்க வைத்து அவற்றையே வணங்கி வரச் செய்து வழி தவற செய்து வருகிறேன். (பார்க்க - 6:71)
?
கேள்விமனிதனின் நிகழ் கால மற்றும் வருங்கால நிலையான வாழ்வின் சந்தோஷங்களை கருத்தில் கொண்டு தானே அல்லாஹ் “ஆஃகிரத்து” என்ற செயல் திட்டத்தை உருவாக்கினான்? (பார்க்க - 2:201)
۞
ஷைத்தான்ஆனால் உலக தற்காலிக வாழ்வின் சுக போகங்களை அலங்கார வார்த்தைகளில் எடுத்துரைத்து ஆஃகிரத்தை மறக்கடிக்க செய்கிறேன்.
?
கேள்விமனிதன் ஒழுக்கத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காகத் தானே அல்லாஹ் சில உணவுப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளான் ? (பார்க்க - 5:3 & 6:121)
۞
ஷைத்தான்ஆனால் நான் அதிலும் தலையிட்டு தர்க்கம் செய்யுமாறு தூண்டி வருகிறேன். (பார்க்க - 6:121) அல்லாஹ்வுக்கு இணையாக ரிவாயத்து சட்டங்களை ஏற்படுத்தி கூடுமான வரையில் அவற்றையே பின்பற்ற வைத்து வழி தவறச் செய்கிறேன். (பார்க்க - 31:6)
?
கேள்விஒன்று - மனிதன் அல்லாஹ் காட்டிய வழிமுறைப்படி வாழவேண்டும். இதை விட்டுவிட்டால் தன் மனோ இச்சையைத் தான் பின் பற்ற முடியும். அதாவது உன்னை பின்பற்றித் தான் வாழ முடியும். வேறு எந்த வழியும் கிடையாது அல்லவா?
۞
ஷைத்தான்சரியாக புரிந்துக் கொண்டாய் என நினைக்கிறேன். மக்களுக்கு இந்த உண்மையை தெரியப்படுத்தாமல் அல்லாஹ்வை வெறும் வாய் வார்த்தைகளால் புகழ் பாடிக்கொண்டு இருக்கும் படி செய்து விட்டேன்.

9நபிமார்களுக்கு எதிராக செயல்பட்ட ஷைத்தான்

?
கேள்விஅல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து மூட நம்பிக்கைகளை களைத்து சமுதாயத்தை திருத்தி தூய்மைப்படுத்தத் தானே அல்லாஹ் நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான்? (பார்க்க - 2:151)
۞
ஷைத்தான்ஆனால் நான் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. நகர் புற மற்றும் நாட்டு புற மக்களில் இருந்த என் தோழர்களை வைத்து அவர்களுக்கு எதிராக செயல்பட வைத்தேன். (பார்க்க - 6:112)
?
கேள்விஅதையும் கடந்து நபிமார்கள் தொடர்ந்து சீர்திருத்தப் பணிகளை செய்து வந்தார்களே (பார்க்க - 11:88)
۞
ஷைத்தான்என் நண்பர்களை வைத்து நபிமார்களில் சிலரை கொலையும் செய்து இருக்கிறேன் (பார்க்க -2:61). சில நபிமார்களுக்கு எதிராக என் நண்பர்களை வைத்து போரிடவும் செய்து இருக்கிறேன். (பார்க்க - 17:64) சிலரை ஊரை விட்டு துரத்தியும் இருக்கிறேன். பார்க்க - 8:30, 17:76, 27:70 47:13.
?
கேள்விநபிமார்கள் தன்னிச்சையாக செயல் படாமல் தமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றுவதாக அறிவிக்கிறார்களே (6:106, 46:9)
۞
ஷைத்தான்எங்களாலும் வஹீச் செய்திகளை கொண்டு வர முடியும் என்று அறிவிக்க செய்கிறேன். (பார்க்க -6:21) நபிக்கு தனிப்பட்ட முறையில் ரிவாயத்துகளாக இறங்கிய வஹீச் செய்திகள் என்று நம்ப வைத்து புத்தகங்களாக வெளியிடுகிறேன்.
?
கேள்விஇது நம்பிக்கை துரோகம் அல்லவா? எந்த தைரியத்தில் நீ இவ்வாறு செய்கிறாய்?
۞
ஷைத்தான்அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் தனிப்பட்ட முறையில் பேசுவதில்லை (பார்க்க -41:51). அந்த தைரியம் தான் எனக்கு. நான் எப்படிப்பட்ட புரளிகளை பரப்பினாலும் அவை உண்மையா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ளும் உரைக்கல் குர்ஆன் மட்டுமே. ஆனால் யாரும் குர்ஆனை பொருள் அறிந்து படிக்காதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன். இது தான் எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
?
கேள்விஅல்லாஹ் ஃகியாம நாளில் நபிமார்களை சாட்சியாக வைத்து இப்படி எல்லாம் சொன்னீர்களா என்று கேட்கப் போவதாக அறிவிக்கப்படுகிறதே. (பார்க்க - 4:41)
۞
ஷைத்தான்அதெல்லாம் நீங்க மரணித்த பின்பு தானே? அங்கு எனக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? நீங்களாச்சு உங்களைப் படைத்த அல்லாஹ் ஆச்சு. எப்படியாவுது போங்கள் என ஒதுங்கிக் கொள்வேன். (பார்க்க -14:22)
?
கேள்விஅல்லாஹ் அறிவிக்காததை சொன்னதாக சொல்லி இணை கற்பிப்பதை தடுத்துள்ளானே. அல்லாஹ்வின் மீது பொய் கற்பனை செய்து சொல்லக் கூடாது என்றும் அறிவித்துள்ளானே (பார்க்க -7:31) அதையும் மீறி மக்களை எப்படி கெடுத்தாய்?
۞
ஷைத்தான்இது எனக்கு மிக மிக சுலபம். குர்ஆனில் நபி, தன்னை பின்பற்றி செயல்படும்படி அறிவித்துள்ளார் (பார்க்க -3:31) நபியை பின்பற்றுவது தன்னை பின்பற்றுவதற்குச் சமம் என்று அல்லாஹ்வும் அறிவித்துவிட்டான். (பார்க்க -4:80) இதை எனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டேன். நபித் தோழர்கள் (ஸஹாபாக்கள்) சிலரின் பெயரைப் பயன்படுத்தி நபி சொன்னதாக பலப் பல புரளிகளை பரப்பிவிட்டேன். காலப் போக்கில் மக்கள் அல்லாஹ் அறிவித்ததை மறந்துவிட்டு நான் பரப்பிய ரிவாயத்து புரளிகளை மார்க்கமாக ஆக்கிக் கொண்டார்கள்.
?
கேள்விஅப்போ மக்களை எப்பாடுபட்டாவது கெடுத்து நரகத்தில் தள்ளிவிடுவது என்று கங்கணம் கட்டி இருக்கிறாய் அல்லவா?
۞
ஷைத்தான்என்னங்க நீங்க? அல்லாஹ்விடம் நான் செய்த சேல்லஞ்சை இதுக்குள்ளே மறந்து விட்டீர்களே (பார்க்க - 15:39) இதுதானே என் கை வரிசை. உலகம் நிலைத்திருக்கும் காலம் வரையில் நான் இப்படித்தான் செயல்படுவேன்.

10அல்லாஹ்வின் மீது பழி சுமத்திய ஷைத்தான்

?
கேள்விதன்னை இணையாக்குவதை அல்லாஹ் ஒரு போதும் விரும்பு வதில்லையே. (பார்க்க - 31:13) நீ என்ன செய்தாய்?
۞
ஷைத்தான்அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நாங்கள் இணை வைக்கிறோம் என்றும் அவன் நாடாமல் இருந்திருந்தால் எதற்கும் நாங்க தடை விதித்து இருக்க மாட்டோம் என்றும் இணை வைப்பவர்களை வைத்து பழியை அல்லாஹ்வின் மீதே சுமத்தி விட்டேன். (பார்க்க - 6:148,16:35)

11அல்லாஹ்விடம் அவகாசம் கேட்ட ஷைத்தான்

?
கேள்விமனிதனை கெடுப்பதற்கு ஃகியாம நாள் வரையில் அவகாசம் கேட்டியாமே (பார்க்க - 15:35)
۞
ஷைத்தான்ஆமாங்க. அல்லாஹ்வின் செயல் திட்டப்படி மனிதன் இவ்வுலகில் சில காலம் வாழ்ந்தாக வேண்டும். (பார்க்க - 2:36) இப்படியாக மனிதனுக்கு ஆயுட்காலம் என்ற அவகாசம் கிடைக்கிறது. அவன் மரணிக்கும் வரை அவனை கெடுத்துக் கொண்டு இருக்க அவகாசம் கேட்டேன். (பார்க்க - 15:35)
?
கேள்விஅதற்கு ஏன் ஃகியாம நாள் வரையில் அவகாசம் கட்க வேண்டும்?
۞
ஷைத்தான்தனி நபர் விஷயத்தில் அவன் இறந்து விட்டால் அவனது உடலை மண்ணில் புதைத்து விடுகிறீர்கள். சிலர் உடலை எரித்து விடுகிறார்கள். அவ்வளவுதான் அதைத் தொடர்ந்து வரும் வாழ்க்கை அவனுக்கு ஃகியாமத்தாக இருக்கிறது. (பார்க்க - 23:99-100) எனவே தான் அவன் மரணிக்கும் வரை கெடுத்துக் கொண்டிருக்க அவகாசம் கேட்டேன்.
?
கேள்விஅவ்வளவுதானா.? மனிதன் இறந்த பிறகு உனக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டாய் (பார்க்க - 14:22) ஆனால் அவன் செய்த தீய செயல்களின் விளைவுகள் இவ்வுலகில் தொடர்கிறதே,
۞
ஷைத்தான்அந்த தீய விளைவுகளை அவனுடைய சந்ததிகள் அனுபவித்துக் கொள்ளட்டுமே. எனக்கு என்ன வேலை இருக்கப் போகிறது. தீய செயல்களின் வேதனைகளால் சிக்கி தவிக்கும் குடும்பங்கள் தான் எனக்கு தேவை.
?
கேள்விஇந்த கால அவகாசம் மனிதன் திருந்துவதற்காகத் தான் அளிக்கப்பட்டது என்று அல்லாஹ் சொன்னதாக எனக்கு ஞாபகம் இருக்கு (பார்க்க - 16:61)
۞
ஷைத்தான்அதாங்க. மனிதன் செய்யும் தீய செயல்களின் விளைவுகள் உடனே தோற்றத்திற்கு வருவதில்லை. காலம் கடந்த பின் ஏற்படுகிறது. விளைவுகள் ஏற்படும் வரை (‍الی یوم یبعّثون) அவனை கெடுத்துக் கொண்டிருப்பதற்கு எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
?
கேள்விஅல்லாஹ் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை உடனுக்குடன் ஏற்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே!
۞
ஷைத்தான்என்னைப் பின்பற்றி செயல்படும் போது அவனுக்கு ஏற்படுகின்ற தீய விளைவுகள் என்பது அல்லாஹ் விதிக்கும் தண்டனை ஆகும். மனிதனின் தீய செயல்களுக்கு உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகில் யாருமே உயிர் வாழ முடியாதே. எனவே இந்த கால அவகாசம் அளிக்கப்படுகிறது. (பார்க்க - 16:61)
?
கேள்விமனிதன் திருந்துவதற்கு அல்லாஹ் வழிவகை செய்துள்ளது அவனது கருணையே ஆகும் அல்லவா? (பார்க்க - 16:64)
۞
ஷைத்தான்இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளாதவாறு அவனை வீண் விளையாட்டில் மூழ்க வைக்கிறேன். (6:32) மார்கத்தை விளையாட்டாக ஆக்கி தற்காலிக சுக போங்களில் மயக்க வைக்கிறேன் (பார்க்க -7:51). ஸலாத்தை தொழுகையாக ஆக்கி விளையாட்டாகவும் அர்த்தமற்றதாகவும் ஆக்குகிறேன் (பார்க்க - 5:58)

12ஷைத்தானும் சமூக சீரழிவுகளும்.

?
கேள்விசமுதாய சீரழிவுக்காக நீ எப்படி எல்லாம் செயல்பட்டு வருகிறாய்?
۞
ஷைத்தான்மனிதனில் உள்ள தீரா வேதனைகளை தணித்துக் கொள்ள முடியும் என்று சொல்லி போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள சொன்னேன். டைம் பாஸ் செய்து எளிதில் செல்வத்தை ஈட்டிக் கொள்ள சூதாட்டத்தை அறிமுகப் படுத்தினேன். அவனது எதிர்காலத்தை அறிந்து தூங்காட்ட ஜாதக கணிப்பு முறையை ஏற்படுத்தினேன். (பார்க்க - 5:90)
?
கேள்விஇதை எல்லாம் மனிதன் தானே செய்கின்றான்?
۞
ஷைத்தான்ஆமாம். மனிதன் தான் செய்கின்றான். ஆனால் அவனுள் ஆசாபாசங்களை தூண்டி வருவது நான் தானே.
?
கேள்விஇது எப்படி உன்னால் முடிந்தது?
۞
ஷைத்தான்இது எனக்கு கஷ்டமான காரியம் அல்ல. எல்லா தீய செயல்களையும் அழகான செயல்களே என நம்ப வைக்கிறேன்.( பார்க்க - 15:39)
?
கேள்விஉதாரணத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும்.
۞
ஷைத்தான்இனப் பெருக்கத்திற்காக அல்லாஹ் ஏற்படுத்திய பாலியல் உண்ர்ச்சிகளை தவறாக பயன்படுத்த வைக்கிறேன்.
?
கேள்விஇதை எப்படி செய்தாய்? இதெல்லாம் தவறானவை என்று மனிதனுக்கு தெரியாதா?
۞
ஷைத்தான்அவனுக்கு என்னவோ தெரியும். ஆனால் இதெல்லாம் முன்னோர்களின் வழிமுறை என்றும் அல்லாஹ்வே இதை விரும்புகிறான் என்றும் சொல்ல வேத்தேன். (பார்க்க - 7:28)
?
கேள்விபாலியல் குறித்து அல்லாஹ்வின் செயல்திட்டம் அவ்வாறு இல்லையே?
۞
ஷைத்தான்பெண்களை ஆண்களுக்கு சமமாக எல்லா ஆற்றல்களுடன் அல்லாஹ் படைத்துள்ளான் (பார்க்க - 4:32 & 33:35) அல்லாஹ்வின் இத்திட்டத்தை முறியடிக்க பெண்களை விலைப் பொருளாக ஆக்கிவிட்டேன். லிவிங்க் டுகெதர் திட்டத்தை (இருவரும் விரும்பி இணைதல்) என்ற திட்டத்தை தீட்டினேன். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு விட்டது.
?
கேள்விஆண்களுக்கு சமமாக பெண்களும் எல்லா ஆற்றல்களுடன் இருக்கும் நிலையில் ஏன் பெண்களுக்கு சமுதாயத்தில் சம அந்தஸ்து கிடைப்பதில்லை (பார்க்க - 33:35) ?
۞
ஷைத்தான்அது பரம ரகசியம். நீங்க யாரிடமும் சொல்லிவிடாதீங்க. உண்மையிலேயே பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிக பாலியல் பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். எனவே சமூகப் பணி அல்லது சம்பாதிக்க பெண்கள் முன் வந்தால் ஆண்களால் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. கூடுமான வரை கெடுக்கவே செய்கிறேன். எனவே கோஷா என்று சொல்லி வீட்டிலேயே அடைத்து வைத்துவிட முடிவெடுக்க செய்து விட்டேன்.
?
கேள்விஎன்ன செய்வது? யாருக்கும் அல்லாஹ்வுடைய பயம் இல்லாமல் போயிற்று. எனவே அவனவன் தம் இஷ்டத்திற்கு ஆடுகிறான்.
۞
ஷைத்தான்இப்போது புரிகிறதா என் கைவரிசை எப்படி என்று? இது எனக்கு கைவந்த கலைங்க. இதற்காக பெண்களுக்கு ஆதரவாக சில பழமொழிகளை எல்லாம் சொல்லி இருக்கிறேன்.
?
கேள்விபெண்களைப் பற்றி உயர்ந்த கருத்துக்கள் உடைய பழமொழிகளா? சொல்லு, சொல்லு.
۞
ஷைத்தான்ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லிவிட்டேன்.
?
கேள்விஎன்னங்க இது? பெண்களை வீட்டிலே அடைத்து வைத்துவிட்டு இப்படி எல்லாம் பழமொழியா? இங்கேயும் ஆண்கள் எல்லாம் கையால் ஆகாதவங்க என்று சொல்லாமே சொல்கிறாயே!
۞
ஷைத்தான்உங்களை பார்த்தால் அதிகமாக சிந்திப்பவர் போல் தெரிகிறது. அதனால் தான் நான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியையும் போட்டு விட்டேன்.
?
கேள்விஅதாவது ஒரு ஆண் வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு பெண்தான் காரணமா? அவன் கெட்டுப் போனாலும் அதற்கு காரணம் பெண்தானா? இதை கவனித்துப் பார்த்தால் பெண்களை பாராட்டுவது போல் இழிவு படுத்துவதாக தெரிகிறதே!
۞
ஷைத்தான்நீங்க தானுங்க நான் எதை சொன்னாலும் அதில் குறைகளை கண்டுபிடிக்கிறீங்க. மக்கள் எல்லாம் மிகவும் நல்லவங்க. நான் சொல்வதை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்கிறார்கள். உங்களைப் போல் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை எல்லாம் கண்டுக் கொள்வதே இல்லை.
?
கேள்விஆக உன் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு தோல்விதான் ஏற்பட்டுது என்று சொல்லலாமா?
۞
ஷைத்தான்அல்லாஹ் எந்த தேவையுமற்றவன். (பார்க்க - 112:2) அல்லாஹ்வுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.நான் மனிதனை சீண்டி விடுவதோடு சரி. மனிதன் என் வலையில் சிக்கிக்கொண்டால் அவதிப்படப் போவது அவன் தான். நான் வெறும் தமாஷ் பார்ப்பேன் (பார்க்க - 14:22)
?
கேள்விஇரு இரு உன்னை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான். உனக்காகவே அல்லாஹ் நரகத்தை தயாரித்து வைத்துள்ளான்.
۞
ஷைத்தான்நெருப்பால் படைக்கப்பட்ட என்னை நரக நெருப்பு ஓண்ணும் தீண்டாதே! மேலும் என்னை நரகத்தில் தள்ளப் போவதாக அல்லாஹ் தன் வேதத்தில் எங்கேயாவது சொல்லி இருக்கின்றானா?
?
கேள்விஎன்னையா இது? கடைசி உன் ஆசைதான் என்ன?
۞
ஷைத்தான்அல்லாஹ்வின் செயல் திட்டத்தின் படி மனிதன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே. அதை கெடுத்து விட வேண்டும் என்பது தான் என் ஆசை. இதற்காக நான அவனை அவனை வற்புறுத்தவில்லை. வெறும் ஆசை வார்த்தைகளை தான் பயன்படுத்துகிறேன். (பார்க்க - 14:22)
?
கேள்விஅப்படி என்ன ஆசை வார்த்தைகளை பயன்படுத்தினாய்?
۞
ஷைத்தான்ஒரு புரளியை கிளப்பி விட்டேன்.
?
கேள்விபுரளியா? என்ன அது?
۞
ஷைத்தான்மனிதனாகிய நீ மலக்கு ஆவதை அல்லாஹ் விரும்பவில்லை என்று ஒரு புரளியை கிளப்பி விட்டேன். (பார்க்க - 7:20) எனவே மரத்தின் கிளைகளைப் போல் பிரிந்து விடுங்கள். அப்போது தான் ஜாதி மதம் என உருவாகி உங்களுக்கு நித்திய வாழ்வு கிடைக்கும். உன் நல்லதுக்குத் தான் நான் சொல்கிறேன் என்று சத்தியம் செய்து மனிதனை ஏமாற்றி விட்டேன். (பார்க்க -7:21)
?
கேள்விபிறகு என்ன ஆயிற்று?
۞
ஷைத்தான்என் வலையில் சிக்கியவனுக்கு நரகம் தான் என்று அல்லாஹ் அறிவித்து விட்டான் (பார்க்க - 15:42&43)
?
கேள்விஎல்லோருமே நரகத்திற்குச் செல்வார்களா?
۞
ஷைத்தான்இல்லை. இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி ஒற்றுமையுடன் வாழ்வர்களிடம் என்னுடைய கைவரிசை பலிக்காது என்று நானே ஒப்புக் கொண்டேனே. (பார்க்க - 15:40)

13அரசியல் விஷயத்தில் ஷைத்தான்?

?
கேள்விஅரசியல் விஷயத்தில் நீ என்ன செய்தாய்?
۞
ஷைத்தான்உனக்கு நிரந்தர ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால் வம்சா வழி ஆட்சிமுறை தான் சிறந்தது என ஆசை வார்த்தைகளை பயன்படுத்தினேன். (பார்க்க - 20:120)
?
கேள்விஏன்? வம்சா வழி ஆட்சி முறை அல்லாஹ்வுக்குப் பிடிக்காதா?
۞
ஷைத்தான்அப்படி அல்ல. மக்களாட்சியைத் தான் “ஃகிலாஃபத்” என்று சொல்வார்கள். திறமைசாலிகளுக்குத் தான் நாட்டை ஆளும் தகுதி கிடைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம். (பார்க்க - 2:247 & 24:55) ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை.
?
கேள்விஇதற்காக என்ன யுக்தியை கையாளுகிறாய்?
۞
ஷைத்தான்அல்லாஹ்வின் அடியார்களிடையே ஆளுமை தகுதி வளராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன். இதற்காக அரசியல், ஆட்சி அதிகாரம் எல்லாம் நமக்கு வேண்டாம் அல்லாஹ் தான் வேண்டும் என்று பள்ளிவாசல் ஆலிம்களை வைத்து அறிவிக்கிறேன்.
?
கேள்விஇப்பொது நடக்கின்ற ஆட்சிமுறையில் என்ன செய்கிறாய்?
۞
ஷைத்தான்தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் தன் மானம் போவதைப் பற்றியும் கவலைப் படாமல் இருக்கும் படி செய்து விட்டேன். உடலை மறைப்பதற்கு மட்டும் அலங்கார ஆடை.. மற்றபடி அவனை தகாத செயல்களை எல்லாம் செய்ய வைக்கிறேன். (பார்க்க -20:121)
?
கேள்விஎன்னையா அக்கிரமம் இது? இதுதான் நீ நடத்தும் அரசியலா?
۞
ஷைத்தான்மனிதன் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பது தானே என் ஆசை! என் லட்சியமும் அதுவே. இதறகாக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.

14வானவர்களும் ஷைத்தானும்

?
கேள்விஅது சரி. ஏதோ மலக்கு என்று சொன்னாயே. அது என்ன?
۞
ஷைத்தான்இதுவும் தெரியாதா? என்னைப் பற்றிய உண்மை தெரியாமல் நானும் மலக்கின் வரிசையில் தான் இருந்ததாக பலர் நினைக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படும் தன்மைதான் மலக்கு. (பார்க்க - 16:49-50) அடிபணியாமை என் குணம். (பார்க்க - 2:34)
?
கேள்விஆதமுக்கு ஸஜ்தா செய்ய சொன்னது ஆதமுடைய கட்டளைக்கு அடிபணிய செய்வது தானே?
۞
ஷைத்தான்ஆமாம். அது எப்போதோ நடந்த விவகாரம் என அறிவித்து விட்டேன். ஆனால் இன்றைய காலக் கட்டத்திலும் பிரபஞ்ச சக்திகளாக இருக்கும் மலக்கு மனித கட்டளைக்கு அடிபணியும் என்ற உண்மையும் அடிபணியாத என்னுடைய அகம்பாவ நிலையும் பெரும்பாலோருக்குத் தெரியாது.
?
கேள்விபிரபஞ்ச படைப்புகளில் இயங்கி வரும் சக்திகள் மற்றும் ஆற்றல்கள் எல்லாம் மனித கட்டளைக்கு அடிபணிய செய்து இருப்பது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருட்கொடையாகும் அல்லவா? ஆனால் இதைப் பற்றிய உண்மைகள் மக்களுக்கு ஏன் தெரியவில்லை?
۞
ஷைத்தான்அது தெரியாதா? மலக்கு என்பதை ஆங்கிலத்தில் ஏன்ஜெல்ஸ் என்றும் உருது மொழியில் ஃபரிஷ்தா என்றும் தமிழில் தேவ தேவதைகள் என்றும் சொல்லிவிட்டேன். அதை தொடர்ந்து மலக்குகளுக்கு உருவம் கொடுத்து இறைவனின் அவதாரங்கள் எனவும் கதை கட்டி விட்டேன். மக்களும் அவை யாவும் உண்மையே என நம்பி தேவியர்கள் என்று சொல்லி அவற்றிற்கு பெண்களின் பெயரிட்டு (பார்க்க - 43:19) பூஜை புருஸ்காரம் செய்ய வைத்து விட்டேன். மேலும் அவற்றை அலங்கரித்து வலம் வரும்படியும் செய்து விட்டேன். இனி யாரும் பிரபஞ்ச சக்திகளை ஆராய்ச்சி செய்வதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.
?
கேள்விஅந்த தேவர் தேவதைகளை படைத்ததை அம்மக்கள் கண்கூடாக பார்த்தார்களா என்று அல்லாஹ்வே கேட்கின்றானே (பார்க்க - 43:19) அதையும் மீறி நீ மக்களை எப்படி நம்ப வைத்தாய்?
۞
ஷைத்தான்அதுவா? அதான் நம்ம கையில் இருக்குதே “முன்னோர்களின் வழிமுறை” என்ற கருவி. அதை வைத்து அவர்களை வழிகெடுத்தேன் (பார்க்க -43:22) அதிலிருந்து மக்கள் விலகாதவாறு பல யுகங்களாக அவர்களை கவனித்துக் கொள்கிறேன். (பார்க்க - 11:53)

15குடும்ப விவகாரங்களில் ஷைத்தான்

?
கேள்விஅது போகட்டும் திருமண விவகாரத்தில் என்ன செய்தாய்?
۞
ஷைத்தான்எதுக்குங்க ஊரை கூட்டிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு? பெண்ணை பார்த்தோமா அவளை மயக்குனோமா ? அவளை கூட்டிக்கிட்டு எங்கேயாவது போயி வாழ்க்கை நடத்துனோமா? என்று இல்லாமெ இப்படி கெடுபெடி செய்துக்கொண்டு?
?
கேள்விஊரை கூட்டி கல்யாண் பண்ணக்கூடாதா?
۞
ஷைத்தான்அதெல்லாம் பணக்காரர்களுக்கு என சீர்வரிசையுடன் செய்ய தனி ஏற்பாடு செய்து வருகிறேன். ஏழை எளிய மக்களுக்கு நான் மேற் சொன்ன வழிமுறைதான் சரி.
?
கேள்விஆண் பெண் இணைந்து வாழ்வதாக செய்துக் கொள்ளும் மண வாழ்க்கை ஒப்பந்த முறையில் இருக்க வேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்? (பார்க்க - 4:127)
۞
ஷைத்தான்கல்யாணம் இவ்வளவு சிம்பிள்ளா இருப்பது சரியில்லை என்றும் மணமகன் வீட்டு உறவினர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு ஜகஜோதியாய் மணமகள் வீட்டாரை விருந்து வைக்க செய்து அமர்க்களம் செய்ய வைக்கிறேன். இதனால் பெண்ணை பெத்தவனின் கதியோ அந்தோ பரிதாபம் (பார்க்க - 16:58&59)
?
கேள்விஇத்தகைய திருமண வாழ்க்கையில் கணவன் மனைவியிடையே பிணக்கு ஏற்பட்டால் நடுவர்களை நியமித்து தீர்த்து வைக்க ஏற்பாடு செய்ய அல்லாஹ் அறிவுருத்தி இருக்கின்றானே (பார்க்க - 4:35)
۞
ஷைத்தான்அதெல்லாம் தேவையா? மனைவியை பார்த்து மூன்று முறை தலாக் தலாக் தலாக் என்று சொல்லிவிட்டாலே போதும் விவாகரத்து ஆகிவிட்டதாக அறிவித்து வருகிறேன். குடி போதையில் சொன்னாலும் சரியே. வேண்டாப் பொண்டாட்டியை கழட்டிவிட சுலபமான வழிமுறை என ஃபத்வா கொடுக்கிறேன்.
?
கேள்விசரி. கணவன் தன் தவறை உணர்ந்து மீண்டும் தன் மனைவியை மீட்டிக் கொள்ளலாமா?
۞
ஷைத்தான்உஷ்.... அது முடியவே முடியாது என்று அறிவிக்க செய்கிறேன். தலாக் ஆனது ஆனதுதான். மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் மனைவியை வேறு ஆணுடன் நிக்காஹ் செய்து வைத்து அவனுடன் ஒர் இரவை கழித்து அதன் பின்பே முந்தைய கணவனுக்கு ஆகுமானதாக ஆகிறாள் என்றும் அறிவிக்க செய்கிறேன்.
?
கேள்விஎன்னையா அக்கிரமம் இது? ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு பெண்களுக்கு தண்டனையா?
۞
ஷைத்தான்அதுதான் ஷரீயத் சட்டம் என்றும் நபிகள் நாயகம் அப்படிதான் தீர்ப்பு வழங்கினார் என்றும் அறிவித்து விட்டேன். அதன் பின் இதை எதிர்த்து பேச யாருக்காவது தைரியம் வருமா?
?
கேள்விஎன்னையா இது? இதனால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படாதா? அவளுக்குப் பிறந்த பிள்ளை குட்டிகளின் நிலைமை என்ன ஆவது?
۞
ஷைத்தான்அதுதானே எனக்கு வேணும்! விபச்சாரம் பிடிக்காது என்று அல்லாஹ் அறிவித்து விட்டான் (பார்க்க - 17:32.) ஆனால் அது எனக்கு ரம்பவும் பிடிக்கும்,
?
கேள்விவிவாகரத்திற்கும் விபச்சாரத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?
۞
ஷைத்தான்பெண்கள் நீண்ட காலத்திற்கு ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. விவாகரத்து அதிகம் ஆக ஆக மறுமணத்திற்கு வாய்ப்புகள் குறைந்து வரும். இதனால் விபச்சாரம் அதிகரித்து வரும். இது கூடவா உங்களுக்கு புரியவில்லை?

16முஹம்மது நபிக்கு எதிராக செயல்பட்ட ஷைத்தான்

?
கேள்விஉன்னை ஒடுக்கி வைக்கத் தானே நபிமார்கள் உலகிற்கு வருகை தந்தார்கள்?
۞
ஷைத்தான்நபிமார்கள் வந்தார்கள். மக்கள் நபிமார்களை பின்பற்றி வந்த காலமெல்லாம் என்னுடைய ஆதிக்கம் செல்லுபடி ஆகவில்லை. நபிமார்களின் மறைவுக்குப் பின் காலப்போக்கில் தலைவர்களிடையே போட்டி பொறாமையை ஏற்படுத்தி பிரிவினையை உண்டாக்கி விட்டேன். (பார்க்க - 2:213) அதன் பின் சமூக பிரிவினையை சீரமைக்க மீண்டும் அல்லாஹ்வின் திட்டத்தின் படி நபிமார்கள் வந்தார்கள். அவர்கள் அரும் பாடுபட்டு சீர்செய்து வந்தார்கள். அதன் பின் நான் மீண்டும் என் கைவரிசையை காட்டுவேன். இப்படித்தான் காலம் காலமாக நடந்து வந்துள்ளது. (பார்க்க - 2:213)
?
கேள்விஅதன் பின் என்ன ஆயிற்று?
۞
ஷைத்தான்இறுதியாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வந்தார். அவரை மக்கள் 200-250 ஆண்டுகள் வரை பின்பற்றி என்னை திணரடித்தனர். அதன் பின் மக்கள் சிறுக சிறுக வேத அறிவுரைகளை புறந்தள்ள ஆரம்பித்தனர். கிடைத்ததே ஒரு அரிய வாப்பு என புகுந்து பழையபடி கலக்கிவிட்டேன் (பார்க்க - 7:175)
?
கேள்விஇதன் விளைவு என்னவாயிற்று?
۞
ஷைத்தான்அம்மக்கள் அல்லாஹ் காட்டிய உயர் பண்புகளை விட்டுவிட்டு அற்ப உலக ஆதாயங்களை அடிப்படையாக வைத்து வாழ ஆரம்பித்தனர். இதனால் அவர்களுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது (பார்க்க - 7:176)
?
கேள்விநீ உன் பங்கிற்கு என்ன செய்தாய்?
۞
ஷைத்தான்வெரி சிம்பிள். நபியை பின்பற்றும்படி அல்லாஹ் தன் வேதம் குர்ஆன் மூலம் அறிவித்துவிட்டான் (பார்க்க -3:31) இதை வைத்து நபிகளார் சொன்னதாக பலப் புரளிகளை பரப்பி வந்தேன். மக்களிடைய குர்ஆனின் ஞானம் இல்லாததால் அதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன். குர்ஆனை வெறும் ஓதுவதற்காக எனவும் நபிகளார் சொன்னதாக தொகுக்கப்பட்ட ரிவாயத்துகள் பின்பற்றுவதற்காக எனவும் ஆக்கி விட்டேன். மக்களும் அவை உண்மையே என நம்பி பின்பற்றுகின்றனர்.
?
கேள்விஅதன் விளைவு என்னவானது?
۞
ஷைத்தான்இப்போதெல்லாம் திருக்குர்ஆனின் சில வசனங்களை மட்டும் பின்பற்றுகிறார்கள். அதில் உள்ள பெரும்பாலான அறிவுரைகளை பின்பற்றுவதில்லை. மக்களுக்கு உண்மை நிலை என்னவென்றும் தெரியாது (பார்க்க -2:159) திருக்குர்ஆனின் வாசகங்களை “ஷானெ நுஜூல்” என்று சொல்லி திசை திருப்பிவிட்டேன். இப்போது இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து மட்டும் என அறிவித்து மக்களின் நடை உடை பாவனை ஆகியவற்றை மாற்றி விட்டேன்.

17திருக்குர்ஆனுக்கு எதிரான ஷைத்தான்

?
கேள்விதிருக்குர்ஆன் நேரான பாதையை காட்டுவதாகவும் அதன் படி செயல்படுவோருக்கு சிறந்த வாழ்வு அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதே (பார்க்க -17:9)
۞
ஷைத்தான்ஆனால் திருக்குர்ஆன் மூல மொழி ஓதி வந்தாலே போதும். பல நன்மைகள் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னதாக அறிவித்து வருகிறேன்.
?
கேள்விதிருக்குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே பின்பற்ற வேண்டும் எனவும் (பார்க்க -25:73) அதை ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும் எனவும் (பார்க்க - 2:121) சொல்லப்பட்டுள்ளதே.
۞
ஷைத்தான்எந்தெந்த சூராவை எந்தெந்த நேரத்தில் ஓத வேண்டும் என்பதையும் எழுதி பல புத்தங்களை அச்சடித்து மக்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன். (பார்க்க -2:79) அதுவும் ராகத்தோடு ஓதி வரச் செய்துள்ளேன். அது தான் ஓத வேண்டிய வழிமுறை என்றும் அறிவித்து வருகிறேன். அதில் போட்டிற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளேன்.
?
கேள்விஎன்னையா அக்கிரமம் இது? திருக்குர்ஆன் சமுதாயங்களின் வாழ்வா சாவா என்பதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கு. நீ என்னமோ வேறு மாதிரியாக சொல்லி இருக்கிறாயே.
۞
ஷைத்தான்என்னங்க! திருக்குர்ஆனில் ருக்கூ ஸஜ்தா செய்ய அல்லாஹ் சொல்லி இருக்கிறானே. நான் தொழுகையில் ருக்கூவும் ஸஜ்தாவும் செய்ய வைத்தேனா இல்லையா? அது மி்வும் சிறப்பான செயல் என்றும் சொல்ல வைக்கிறேனா இல்லையா?
?
கேள்விஅகிலங்களில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செயல்படுவதையே ஸஜ்தா செய்வது என்று சொல்லப்பட்டுள்ளதே (பார்க்க -16:48) மனிதனும் அப்படித்தானே அல்லாஹ்வின் அறிவுரைக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும்?
۞
ஷைத்தான்அதெல்லாம் இல்லை. அல்லாஹ் தஸ்பீஹ் ஓத சொல்லவில்லையா? (பார்க்க -110;3) அதற்காக பழங்காலத்து ஜப மணியை தேடி கண்டுபிடித்து முஸ்லிம்கள் கையில் கொடுத்து இருக்கிறேனே. அதுதான் தஸ்பீஹ் என்றும் அதை ஓதி வந்தால் சுவனம் கிடைக்கும் அறவித்து விட்டேன்.
?
கேள்விஎன்னையா இது? அல்லாஹ் விதித்த கடமைகளை நிறைவேற்றுவதைத் தானே “ஸபஹ” என்று சொல்லப்பட்டது? (பார்க்க -73:7) ஆனால் அதை திக்ரு என்று சொல்லி மனிதனை மூலையில் அமர்த்தி விட்டாயே.
۞
ஷைத்தான்அதுவும் பரம ரகசியம். யாரிடமும் சொல்லிடாதீங்க. அல்லாஹ் விரும்பாத ஆன்மீகத்தை (பார்க்க -57:27) இஸ்லாத்தில் திணித்து விட்டேன். அதனால் இப்போதெல்லாம் அல்லாஹ் காட்டிய நேர்வழியை விட்டு விட்டு நான் காட்டிய பெரியார்களையும், யூகங்களையும் ஆன்மீகத்தையும் மட்டுமே பின்பற்றுகிறார்கள் (பார்க்க -10:36)

18ஜகாத்தும் ஷைத்தானும்

?
கேள்விஜகாத் என்பது வறுமை ஓழிப்பு நிதி ஆகும் அல்லவா?. சமுதாய மேம்பாட்டு நிதி எனவும் சொல்லலாமே!. ஆனால் நடைமுறையில் வேறு விதமாக இருக்கே!
۞
ஷைத்தான்அதுவா? அதை ஏழை எளியோருக்கு செய்ய வேண்டிய தருமம் என்று சொல்லி சில்லரை காசுகளை கொடுக்க வைத்து விட்டேன். இவ்வாறு செய்வதால் தன்னை பெரிய தர்ம கர்த்தா என்று சொல்லி பிரபலப்படுத்த வைக்கிறேன். (பார்க்க -2:264)
?
கேள்விதனிப்பட்ட முறையில் தானம் செய்வதை விட்டு விட்டு அரக்கட்டளைகயை ஏற்படுத்தி சமூக சீரமைப்பு பணியை செய்ய அல்லாஹ் அறிவிக்கின்றானே (பார்க்க -2:265)
۞
ஷைத்தான்அதெல்லாம் திருக்குர்ஆனை ஆராய்பவர்களுக்குத் தானே புரியும். நான் தான் அவர்களுடைய உள்ளங்களில் பூட்டை மாட்டி விட்டேனே (பார்க்க -2:88) இனி எங்கே குர்ஆனிலிருந்து அறிவுரை பெறுவது?
?
கேள்விபொது மக்களுக்குத் தெரிய வாயிப்பில்லை. அனால் கற்றரிந்த ஆலிம்களுக்குமா தெரியவில்லை?
۞
ஷைத்தான்ஆலிம்களில் சிலர் தான் என் பேச்சை கேட்பதில்லை. அவர்களில் பெரும்பாலோர் என் பேச்சை கேட்டு செயல்படுகிறார்கள். (பார்க்க -34:30) அதுமட்டுமின்றி நேர்வழி இன்னதென்று தெளிவான பின்பும் தவறான செயல்களை அழகாக காட்டுவதில் எனக்கு கைவந்த கலை. அதில் அமோக வெற்றியும் கிடைத்துள்ளது. (பார்க்க -47:25)
?
கேள்விசமுதாய மக்களுள் உலோபித்தனம் வளர்ந்தால் அவர்களை விட்டு ஆட்சி அதிகாரம் எல்லாம் பறிபோயிவிடும் என்பது அல்லாஹ்வின் எச்சரிக்கை அல்லவா? (பார்க்க -47:38)
۞
ஷைத்தான்ஏனுங்க! கஷ்டபட்டு சம்பாதித்ததை எல்லாம் சமூக நலத்திட்டங்களுக்கு கொடுத்து விட சொல்வது நியாயமா? (பார்க்க -2:219) அதனாலே 2.5% கொடுத்தா போதும் என்று நபிகளார் சொன்னதாக அறிவிப்பு செய்ய வைத்தேன். அதுவும் கையிருப்பு பணம், வெள்ளி தங்கம் ஆகியவற்றின் மதிப்பீட்டிலிருந்து கொடுத்தால் போதும் என்றும் மேலும் அவற்றை வாங்கி ஒரு வருடம் நிறைந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கச் செய்கிறேன்.
?
கேள்விஏனையா? அல்லாஹ்வினால் செய்யப்பட்ட ஏற்பாடுகளைக் கொண்டு தானே மனிதன் உழைத்து பெற்றுக் கொள்ள முடிகிறது? (பார்க்க -56:63-73) அல்லாஹ்வின் கூற்றில் என்ன குறை இருக்கு?
۞
ஷைத்தான்இதை எல்லாம் யாரும் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்று தானே ரிவாயத்து புத்தகங்களின் ஏற்பாடுகளை செய்தேன். நபிகள் நாயகம் சொன்னதாக எதை சொன்னாலும் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளத் தயார். இதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய சாதனமாகும். அதை வைத்து ஏரக்குறைய 1200 ஆண்டுகளாக வண்டியை ஒட்டிக் கொண்டு இருக்கிறேன். சொத்து செல்வங்களிலிருந்து ஒரு முறை கொடுத்தால் போதும் என்று ஒர் அறிவு ஜீவியை வைத்து அண்மையில் அறிவிப்பு செய்தேன். இஸ்லாத்தில் எல்லாம் எங்க இஷ்டம். நீங்க வீணா குட்டையை கலக்காதீங்க.
?
கேள்விஆமாம். 2.5% ஜகாத் கொடுத்தால் போதும் என்று எப்படி புரிய வைத்தாய்?
۞
ஷைத்தான்அதுவா? ரமலான் மாதத்தில் தர்மம் செய்தால் ஒண்ணுக்கு 70 மடங்கு புண்ணியம் என்று சொல்லி விட்டேன்.
?
கேள்விஅது எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?
۞
ஷைத்தான்அதாவது ஒரு லட்சம் பெருமானம் உள்ள சொத்துக்கு ரூ. 2500 கொடுத்தால் போதும். அது 70 மடங்காக பெருகி - அதாவது 2500 X70 = ரு.175000 கொடுத்ததற்குச் சமம் ஆகும். இப்படித் தான் நபிகள் நாயகம் அறிவித்ததாக ஒவ்வொரு வருடமும் அறிவிப்பு செய்கிறேன்.
?
கேள்விஎன்னையா நியாயம் இது? அது எப்படி சரி ஆகும். இப்படி எல்லாமா மார்கத்தை குழப்பி விட்டாய்? இதன் விளைவாக சமுதாய சமன்பாடு சீரழிந்து வருமே!
۞
ஷைத்தான்இதை கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எல்லாம் அல்லாஹ் விதித்த விதி என்று பலரிடம் சொல்லி அவர்களை ஏமாற்றி மனசை தேற்றிக் கொள்ள வைக்கிறேன்.

19நீதித் துறையும் ஷைத்தானும்

?
கேள்விகுற்றங்களுக்கு தண்டனை அளிப்பது நீதிமன்ற விவகாரம் ஆயிற்றே!
۞
ஷைத்தான்அதுவா? அதை பழி தீர்த்துக் கொள்வது மூஃமின்களாகிய உங்கள் மீது கடமை ஆக்கப்பட்டுள்ளதாக மொழி பெயர்க்க வைத்து விட்டேன். (பார்க்க -2:178)
?
கேள்விஇப்படி மொழியாக்கம் செய்து கொடுத்து விட்டால் அதை படித்து அவனவன் ஒருவரையொருவன் அடித்துக் கொண்டு சாக மாட்டானா? அல்லாஹ்வே இதை விரும்புவதாக அல்லவா எண்ணிக் கொள்வான்? ஏற்கனவே மூஸா நபி விஷயத்திலும் இப்படித்தான் செய்து இருக்கிறாய் (பார்க்க -2:54)
۞
ஷைத்தான்என்னங்க நீங்க? அல்லாஹ்விடம் நான் செய்த சேல்லன்ஜை அடிக்கடி மறந்து விட்டுகிறீர்களே! மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் அவனை கெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லவில்லையா? (பார்க்க -7:17) அதன் படி தானே நான் செயல்படுகிறேன்?
?
கேள்விமக்களிடையே ஏற்படும் தகராறுகளை நியாயமான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என்றுதானே அல்லாஹ்வின் கட்டளை? இது ஒரு தலைசிறந்த உபதேசம் என்றும் அறிவிக்கப்படுகிறதே(பார்க்க -4:58)
۞
ஷைத்தான்அல்லாஹ் என்னவோ ஆதி முதல் எல்லா வேதங்கள் மூலமும் இவ்வாறு அறிவித்துள்ளான். (பார்க்க -42:13) ஆனா அது எனக்கு பிடிக்கலே. நீதி நியாயம் எல்லாம் செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லாஹ் எதை தடுத்துள்ளானோ (பார்க்க - 4:105) அதையே செய்ய வைக்கிறேன். இவ்வாறாக வேத ஞானிகளை நேர்வழியை விட்டு வெகு தூரம் வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறேன் (பார்க்க - 4:60)
?
கேள்விநீதி மன்ற விஷயத்தில் பகை கூட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நீதி தவற வேண்டாம் எனவும் (பார்க்க -5:8) உண்மைக்கு சாட்சி சொல்லும்படியும் (பார்க்க -4:135) அல்லாஹ் அறிவுருத்தி இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்? பழி தீர்த்துக் கொள்ளும்படி மொழியாக்கம் செய்து இருப்பது எவ்வளவு பெரிய அநியாயம்?
۞
ஷைத்தான்என்னங்க நீங்க? அதெல்லாம் நீதி மன்றத்தை அணுகி பணம் காசு செலவு செய்து வழக்கு தொடர்ந்து அதன் பின் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி நீதி கிடைப்பதற்குள்ளே (பார்க்க -15-20) ஆண்டுகள் ஆகிவிடும். அவ்வப்போது சாட்சிக்காக அழைப்பும் விடுவார்கள். அதன் பின் நீதிபதிக்கு எது சரி என்று படுதோ அதன்படியே தீர்ப்பு சொல்லிவிடுவார். (பார்க்க -4:60) இதெல்லாம் தேவையா? தப்பு செய்தானா? ஸ்பாட்லியே தண்டனை கொடுத்தோமா என்று விவகாரத்தை முடிங்க. அவ்வளவுதான். அதனால் தான் பழி தீர்த்துக் கொள்ள மொழி பெயர்ப்பு செய்ய வைத்தேன்.
?
கேள்விஅல்லாஹ் அருளிய வேத அறிவுரைப் படி நீதி மன்றத்தில் நீதி வழங்குமாறு நபிமார்களுக்கு கட்டளை இட்டு இருக்கின்றானே (பார்க்க -5:40) மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப நீதி வழங்க வேண்டாம் எனவும் சொல்லி இருக்கும் நிலையில் மக்கள் ஏன் பொருட் படுத்துவதில்லை?
۞
ஷைத்தான்அல்லாஹ் அருளிய வேத அறிவுரைப்படி தீர்ப்பு அளிக்காத பாவிகள் எல்லாம் என் உற்ற நண்பர்கள் ஆவார்கள் (பார்க்க -5:47) அத்தகைய காபிர்கள் எல்லாம் என் சக தோழர்கள். (பார்க்க -5:44) அத்தகைய அநியாயக் கார ர்கள் எல்லாம் என் சொந்தக்காரர்கள் (பார்க்க -5:45) இத்தகையவர்களை வைத்துக் கொண்டுதான் உலகத்தில் பாமர மக்களுக்கு நீதி கிடைக்காதவாறு பார்த்துக் கொள்கிறேன்.

20ஷைத்தானும் சூனியமும்

?
கேள்விசுலைமான் நபி மிகவும் சிறப்பாக ஆட்சி செய்ததாக அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் அறிவிக்கின்றானே! (பார்க்க -38:35)
۞
ஷைத்தான்ஆனால் அவர் அல்லாஹ்வுக்கு எதிராக செயல்பட்டதாக என்னுடை சக தோழர்களை வைத்து புரளியை கிளப்பிவிட்டேன். (பார்க்க - 2:102) அது மட்டுமா? பாபிலோன் நகரில் ஹாரூத் மாரூத் என்னும் இரு மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் அவர்கள் சூனியத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாகவும் கதை கட்டிவிட்டேன். மக்களும் அது உண்மையே என்று நம்பிவிட்டார்கள்.
?
கேள்விஅவ்விரு மலக்குகளும் பெரும் சோதனையாக இருப்பதாக கூறியதும் புரளிதானா?\
۞
ஷைத்தான்ஆமாம். “சூனியத்தை கற்று நீங்கள் காஃபிர்கள் ஆகிவிட வேண்டாம்” என கற்றுக் கொள்ள வருபவர்களிடம் சொல்லி ஏக்கத்தை ஏற்படுத்திய பின்னரே கற்றுக் கொடுத்ததாக சொன்னதும் புரளிதான். (பார்க்க -2:102) சூனிய வித்தைகளை கற்று கணவன் மனைவி இடையே பிரிவினையை ஏற்படுத்திடலாம் என்று மக்களை நம்ப வைத்ததும் நான் தான் (பார்க்க - 2:102)
?
கேள்விசூனிய வித்தைகளைக் கொண்டு அவ்வாறு தீங்கு எதுவும் செய்திட முடியாது என்று அல்லாஹ்வே சொல்லி இருக்கின்றானே. (பார்க்க -2:102) அதன் பிறகு என்ன?
۞
ஷைத்தான்அல்லாஹ் அவ்வாறு சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் கூடவே “தன் அனுமதியின்றி” என்று அரைப்புள்ளி வைத்து விட்டான் அல்லவா? அதை வைத்து சில சமயம் அல்லாஹ் அனுமதிப்பான். என்றும் சூனியம் பலிக்கும் என்றும் நான் அறிவித்து விட்டேன்.
?
கேள்விஅல்லாஹ்வின் கட்டளை (அனுமதி) என்பது அல்லாஹ் நிலைநிறுத்திய நிலையான விதிமுறை ஆகும் அல்லவா?
۞
ஷைத்தான்நீங்க சொல்வதைப் பார்த்தால் மனைவிக்கு எதிராக கணவனிடம் ஏதாவது சந்தேகத்தை கிளப்பி கணவனை நம்ப வைத்து தகராறு ஏற்படுத்திட முடியும் என்கிறீர்கள். மாய மந்திரத்தால் யாருக்கும் தீங்கு இழைக்க முடியாது என்கிறீர்கள். (பார்க்க - 2:102) இது எனக்கும் தெரியும். சூனிய வித்தை கற்றவனுக்கும் தெரியும். ஆனால் பொது மக்களுக்குத் தெரியாதே. எனவே அதை வைத்து பிழைப்பு நடத்த ஆலோசனை செய்தது நான்தான்.
?
கேள்விஇருந்தும் சூனிய வித்தையை வான சாஸ்திரம் என்று சொல்லி மக்களை நம்ப வைத்துள்ளாயே! இது நியாயமா?
۞
ஷைத்தான்ஆமாங்க. அப்படி சொல்லித் தான் மக்களை நம்ப வைத்தேன். ஆனால் வானத்தை கடந்து என்னால் செல்ல முடியாது என்று எனக்கும் தெரியும். காரணம் அங்கு என்னை தீப்பந்தங்கள் துரத்தும். (பார்க்க -37:7) ஆனால் மக்களுக்குத் தெரியவில்லையே!
?
கேள்விஇக்காலத்தில் சூனியத்தின் பாதிப்புகள் அவ்வளவாக இல்லையே. இதை முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் அல்லவா?
۞
ஷைத்தான்விஞ்ஞான கல்வி வளர வளர சூனியம் மற்றும் ஜாதகம் விஷயத்தில் தோய்வு ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். இருப்பினும் கிராமப் பகுதிகளில் பாமர மக்களிடம் இதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறேன். அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால் குர்ஆனின் ஞான உபதேசங்கள் வளர வேண்டும். ஆனால் ஆலிம்களை வைத்து அந்த ஞானம் வளராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்.
?
கேள்விசில சமயங்களில் சிலருக்கு பேய் பிடிச்சிருக்கு என்கிறார்களே. சிலருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு என்கிறார்களே. அது எப்படி?
۞
ஷைத்தான்என்னங்க நீங்க? உலகம் முழுவதும் மக்களை ஆட்டிப் படைக்கிறேன். எல்லோருமே என் பேச்சை தான் கேட்டு நடக்கிறார்கள். இதுக்கு மேலே ஒரு பேய் ஏதாவது ஸ்பெஷல்லா வந்து பிடிக்கனுமா?
?
கேள்விஅப்போ பேய் பிடிச்சிருக்கு என்று சொல்வதெல்லாம் பொய்யா?
۞
ஷைத்தான்சிலருக்கு பணப் பைத்தியம் பிடிச்சிருக்கும். சிலருக்கு காதல் பைத்தியம். சிலருக்கு காமப் பைத்தியம். சிலருக்கு சூதாட்ட பைத்தியம். சிலருக்கு பதவி பைத்தியம். இப்படித்தான் அவர்களோடு திறைக்கு மறைவாக இருந்துக் கொண்டு அவர்களை ஆட்டிப் படைக்கிறேன். அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் விரக்தியுடன் பேய் பிடித்தவர் போல் இருப்பார்கள். இதனால் புத்தி தடுமாறி நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்பட்டு இல்லாத ஆட்டம் எல்லாம் போடுவாங்க. அவ்வளவுதான்.
?
கேள்விதீயவர்கள் இறந்த பின் அவர்களுடைய ஆவிகள் பூமியில் சுற்றிக் கொண்டு தம் எதிரிகளை பழி தீர்த்துக் கொள்ளும் என்கிறார்களே. இப்படி சொல்லி சில சினிமா படமெல்லாம் எடுக்கிறார்களே.
۞
ஷைத்தான்மனிதன் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவனால் எதையும் செய்ய முடியும். அவன் உயிருடன் இருக்கும் வரையில் நற்செயல்களை செய்யாதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன். அவ்வளவுதான். அவன் இறந்த பின் அவனால் எதுவும் செய்ய முடியாதே. அவனுடைய நஃப்ஸ் எனும் ஆவி (உலக வாழ்வில் ஈன்ற ஆற்றல்) மறு உலகில் பிரவேசிக்கும். அவனுக்கும் இவ்வுலகிற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு இடையே திரை ஏற்பட்டு விடும். (பார்க்க -23:100) மற்றபடி சினிமாவில் காட்டுவதெல்லாம் என் சார்பில் உருவான யூகங்களும் கற்பனைகளும் ஆகும்.
?
கேள்விசிலர் தாயத்து பலீதா தகடு எல்லாம் செய்து தருகிறார்களே. இவை எல்லாம் உன் சேஷ்டையா?
۞
ஷைத்தான்அதுவா! எப்போதாவது உங்கள் மனதில் தவறான எண்ணங்களை ஊசலாடச் செய்து தீய செயலை செய்யுமாறு நான் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாப்பு فستعذ بااللہ தேடிக் கொள்ளுங்கள் என்று குர்ஆனில் பார்க்க -7:200 இல் கூறப்படுகிறது. இதிலிருந்து தாயத்து என்ற வார்த்தை வருகிறது. அதை வைத்து குர்ஆன் வசனங்களை வைத்து تعویذ தாயத்துகளையும் தகடுகளையும் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன்.
?
கேள்விஅடப்பாவி! இதனால் மக்கள் தம் ஆற்றலைக் கொண்டு சிறப்பாக வாழ்வதற்குப் பதிலாக மூட நம்பிக்கையில் மூழ்கி விடுவார்களே!
۞
ஷைத்தான்அதுதானுங்க எனக்கு வேணும். எந்தெந்த சூராவை (அத்தியாயத்தை) ஓதினால் என்னன்ன பலன்கள் கிடைக்கும் என்று சொல்லி பட்டியலிட்டு குர்ஆனிலேயே இணைத்து விட்டேனுங்கொ. குர்ஆனின் வார்த்தைகளின் எண்களை கணக்கிட்டு (நியூமெராலஜி) அட்டவணையையும் போட்டு விட்டேனுங்கொ. அந்த எண்களை தகடுகளில் எழுதி கடைகளில் மாட்டிவிட்டால் கடை ஓஹோ ஆஹான்னு பேஷா ஓடும் என்று மக்களை ஏமாமற்றி கடைகளில் மாட்டிவிட செய்தேனுங்கொ. மக்களும் ஏமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போ உங்களுக்கு என்ன வந்தது? ஏன் இப்படி குட்டையை கிளறுகிறீர்?
?
கேள்விநீ நபியை கூட விட்டு வைக்கவில்லையே! முஹம்மது நபிக்கே யாரோ சூனியம் செய்ததாகவும் அதிலிருந்து விடுபட சில சூராக்களை அல்லாஹ் இறக்கி அருளியதாகவும் கதை கட்டி விட்டிருக்கே அல்லவா?
۞
ஷைத்தான்வேடிக்கை என்ன தெரியுமா? சூனிய வித்தைகளோ அல்லது மாயாஜால வித்தைகளோ செய்து அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட நாங்கள் வரவில்லை என்று அறிவித்தவர்களே நபிமார்கள். பார்க்க - 3:183,6:35 6:37, 6:111, ஆனால் அவர்களே மோஜிஸா அற்புதத்தை (மேஜிக்) நிகழ்த்திக் காட்டியதாக மக்களிடம் சொல்லி நம்ப வேத்தேனுங்கோ. அதை மக்களும் கேட்டு பேரானந்தம் அடைவதை கவனித்தீங்களா?

குறிப்பு: ஒருவர் தீய செயலில் ஈடுபடும்போது அதனால் ஏற்படும் பின் விளைவுகளை எண்ணிப் பார்த்து அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கச் சொல்வது அல்லாஹ்வின் அறிவுரையாக இருக்கு. ஆனால் ஷைத்தான் எனும் தீய சக்தியோ தாயத்து தகடு பலீதா என்று சொல்லி மனிதனின் சிந்தனா சக்தியை நிரந்தரமாக செயலிழக்க செய்து விட்டது.

21திருக்குர்ஆனின் முதஷாபிஹாத் வசனங்கள்;

?
கேள்விஅதற்குத் தகுந்தாற் போல் திருக்குர்ஆனில் உள்ள முதஷாபிஹாத் எனும் இலக்கிய நடையிலும் உவமை வடிவிலும் சொல்லப்பட்ட வசனங்களை (பார்க்க -3:7) நேரடி அர்த்த்தை கொடுத்து நபிமார்கள் யாவரும் மாயாஜாலா வித்தைகளை செய்து காட்டியதாக மக்களை நம்ப வைத்தாயே! இது நியாயமா?
۞
ஷைத்தான்ஈரானியர்கள் சூனிய கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். அவர்களை வைத்து முதன் முதலில் திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்பு செய்தேன். அவர்களும் இத்தகைய வசனங்கள் எல்லாம் தமக்கு சாதகமாக இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
?
கேள்விஏதாவது ஓரிரு வசனங்களை எடுத்துரைத்து விளக்குகிறாயா?
۞
ஷைத்தான்அல்லாஹ்வின் சத்திய உண்மையைக் கொண்ட சன்மார்க்கத்தை ஃபிர்அவுனிய மன்னரிடம் எடுத்துரைத்து அவனை திருத்த மூசா நபி அனுப்பபட்டார். (பார்க்க -7:105) இறைக் கொள்கை கோட்பாடுகளை கேட்டு மலைத்துப் போன மன்னன் தம் சாம்ராஜ்ஜியத்தையே விழுங்கும் மலைப் பாம்பாக இருப்பதை கண்டு பயந்தான். (பார்க்க -7:107) ஆனால் நான் மூசா நபி கொம்பு போட்டதும் அது மலைப் பாம்பாக ஆயிற்று என்று மொழி பெயர்க்க வைத்து விட்டேன்.
?
கேள்விஅதனால் தானா இன்றைக்கும் மூசா நபி நடத்திக் காட்டிய மிகப்பெரிய அற்புத நிகழ்ச்சி என்று நம்பி அதைப் பற்றி பேசிப் பேசியே மக்களின் நேரத்தையும் சிந்தனா சக்தியையும் வீண்டித்து வருகிறார்கள்? இன்னும் மற்ற நபிமார்கள் விஷயத்தில் என்னவெல்லாம் செய்தாய்?
۞
ஷைத்தான்இப்றாஹீம் நபி நெருப்பில் சுகமாய் இருந்தது. (பார்க்க -21:69)

இப்றாஹீம் நபி பறவையை துண்டுதுண்டாக வெட்டி உயிர்ப்பித்தது. (பார்க்க -2:260)

ஈஸா நபி தந்தையின்றி பிறந்தது. (பார்க்க - 3:47)

ஈஸா நபி இறந்தவர்களை உயிர்ப்பித்தது.(பார்க்க -3:49)

ஈஸா நபி உயிருடன் இருப்பதும். திரும்ப உலகிற்கு வருவதும். (பார்க்க -43:61)

யூனுஸ் நபி மீன் வயிற்றிற்குள் 40 நாட்கள் இருந்தது (பார்க்க -37:142-145)

மூஸா நபி அஸாக் கோலை எறிந்து கடலை பிளந்தது. (பார்க்க -26:63)

மூஸா நபி அஸாக் கோலை எறிந்து பாம்பாக்கியது. (பார்க்க -7:107)

மூஸா நபி அஸாக் கோலை எறிந்து தண்ணீர் பீரிட்டு வரச் செய்த்து.( பார்க்க -2:60)

மாட்டுகறியை கொண்டு சடலத்தின் மீது அடித்தால் அது உயிர்பெற்று தன்னை யார் கொன்றது என்பதை சொல்லிவிடும். (பார்க்க -2:73)

நபிகள் நாயகம் சந்திரனை இரண்டாக பிளந்தது. (54:1)

நபிகள் நாயகத்தின் மேராஜ் பயணம்? (பார்க்க -17:1)

அபாபீல் பறவைகள் எரி கற்களை வீசி யானைப் படையை வீழ்த்தியது.

(பார்க்க - 105:3&4)

இப்படியாக எங்கெல்லாம் குர்ஆனில் உவமை வடிவில் சொல்லப் படுகிறதோ அங்கெல்லாம் மோஜிஸா என்று சொல்லி நபிமார்கள் காலத்தில் நடந்த அற்புதங்கள் என்று அறிவித்து விட்டேன்.

?
கேள்விஇவ்வளவு குர்ஆனை படித்து தெரிந்துக் கொண்ட நீ ஏன் இவ்வாறு செய்தாய்?
۞
ஷைத்தான்முஹம்மது நபியின் சித்தப்பா அபூலஹபுக்கு அரபி மொழி தெரியாதா அல்லது குர்ஆன் புரியாதா? அவனே ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? பதவி மற்றும் செல்வத்தின் காரணமாக அவனிடம் இருந்த ஆணவமும் அகம்பாவமும் தானே. (பார்க்க -111:2)

எது எப்படியோ? மக்களில் எவரும் குர்ஆனை படிக்கக்கூடாது.

அப்படியே படித்தாலும் அவன் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடாது.

அப்படியே புரிந்தாலும் அதை மக்கள் மன்றத்தில் அறிவுப் பூர்வமாக எடுத்துரைக்கக் கூடாது.

அப்படியே எடுத்துரைத்தாலும் இன்றைய காலத்து மக்களுக்கு பொருந்தக் கூடிய விஷயங்களாக இருக்கக் கூடாது.

அப்படியே பொருந்துகின்ற விஷயங்களாக இருந்தாலும் அவை வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற அளிவில் தான் இருக்க வேண்டும்.

இதனால் தான் குர்ஆனை ராகத்தோடு ஓதி பேரானந்தம் அடைய செய்கிறேன்.

ஆக சுருக்கமா சொல்ல வேண்டும் என்றால் குர்ஆனை சடங்கு சம்பிரதாயங்களின் வலையில் சிக்க வைத்து உலக அரங்கில் பின்பற்ற முடியாத வேதமாக மாற்றி விட்டேன். (பார்க்க -25:30)

22அல்லாஹ் நாடியது என்ன?

?
கேள்விஅகிலங்கள் அனைத்தும் தன் ஆதிக்கத்திற்கு உட்பட்டே செயல்படும் போது (பார்க்க -5:7) மனித உலகிலும் தன்னுடைய ஆட்சி மனித கரங்களால் நடைபெற வேண்டும் என்பதுதானே அல்லாஹ்வின் நாட்டம்?
۞
ஷைத்தான்ஆமாம். அப்படி ஒரு ஆட்சியமைப்பு இவ்வுலகில் நிலைநிறுத்தப்பட்டால் அது மிக மிக பாக்கியமிக்க நாடாக விளங்கும்.(பார்க்க -67:1) மேலும் அனைத்து தரப்பு மக்களும் அத்தகைய ஆட்சியை போற்றி பாராட்டுவார்கள். ஆனால் அது எனக்கு சுத்தமா பிடிக்கலே.
?
கேள்விஅத்தகைய நல்லோர்களின் கரங்களால் சமூக அமைப்பு மற்றும் ஆட்சியமைப்பு உருவாகி விட்டால், “ஆதம்” இழந்த சுவனத்தை அந்த நாடு மீண்டும் மீட்டிக்கொள்ளும் அல்லவா?
۞
ஷைத்தான்ஆனால் நான் அதை இலகுவாக கிடைக்கும் படி செய்வேனா? அனைவரையும் படாத பாடுபடுத்தி பல வகையில் கஷ்டப்படுத்தி எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ என்று அல்லாஹ்விடம் இரைஞ்சும் படி செய்வேன்.(பார்க்க -2:214) அதையும் மீறி அல்லாஹ்வின் செயல்திட்டத்தில் நிலைத்திருந்து உழைத்தால் நான் விலக வேண்டி இருக்கும். காரணம் அல்லாஹ் மற்றும் மலக்குகளின் உதவிகள் உங்களுக்கு விரைந்தோடி வந்து விடும். (பார்க்க -41:30&31)
?
கேள்விஇப்படியாக அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் உலக அரங்கில் போற்றுதலுக்கு உரியதாக ஆக்கி அவனுடைய புகழை மேலோங்கச் செய்வேன். (பார்க்க -22:184 & 22:37)
۞
ஷைத்தான்இதெல்லாம் நடக்காதவாறு ரிவாயத்து ஹதீஸ் புத்தகங்களையும் ஆன்மீக கட்டுக் கதைகளையும் எழுதி வெளியிட்டு கற்றுக் கொடுத்து 1200 ஆண்டுகளாக வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். உங்களால் மட்டும் என்ன செய்ய முடியும்?
?
கேள்விஉன்னுடைய பலம் என்னவென்பதை உன்னுடன் பேசுகையில் தெரிந்துக் கொண்டேன். அன்பர்களும் அறிந்துக் கொள்ளட்டும். அதையும் அறிவித்துவிடு.
۞
ஷைத்தான்எனக்கும் ஆதரவாக செல்வந்தர்களும் (பார்க்க -11:62) சமுதாய தலைவர்களும் (பார்க்க -2:14 & 11:27) ஆட்சியாளர்களும் (பார்க்க -11:97) மத குருமார்களும் (பார்க்க -26:70) செயல்படுவார்கள். இவர்களை எல்லாம் எதிர்த்து உங்களால் என்னை வெல்ல முடியுமா?
?
கேள்விஇவர்களை எல்லாம் வெல்லக் கூடிய ஏக இறைவனாகிய அல்லாஹ் எனக்கு பக்க பலமாக இருக்கும் போது எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. உன் படைகளை கண்டிப்பாக வெல்ல முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. (பார்க்க -58:19)

23முடிவுரை

அன்பர்களே! ஷைத்தானைப் பற்றிய உண்மைகளை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உரையாடல் வடிவில் திருக்குர்ஆனின் வாசகங்களை வைத்து விளக்கங்களை எடுத்துரைத்தேன். காரணம். ஏதோ ஒரு காலத்தில் எங்கேயோ மேலுலகத்தில் அல்லாஹ் ஆதமை படைத்து அவர் முன்பாக ஸஜ்தா செய்யும் படி ஷைத்தானிடம் சொல்ல அதை மறுத்து விட்டதால் அல்லாஹ் துரத்தி விட்டதாக சொல்வார்கள். அதை தொடர்ந்து ஷைத்தான் ஆதமை வழிகெடுத்து சுவனத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக கதை போல் சித்தரித்து சொல்வதோடு சரி. அத்துடன் நமக்கும் ஷைத்தானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல் கவலையற்று இருக்கிறோம்.

ஆனால் மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஷைத்தானின் ஆதிக்கம் எந்த அளவிற்கு வழிகெடுத்து வருகிறது என்பதை இப்போது நன்கு அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இனியாவது நான் வெளியிட்ட “திருக்குர்ஆன் தெளிவுரை” என்ற நூலை வாங்கி படியுங்கள். அல்லது நான் வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் கற்றுத் தரும் வாழ்வியல் என்ற நூலை படித்து சாத்தனின் வலையில் சிக்காமல் வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற வழிவகுத்துக் கொள்ளுங்கள்.

இங்ஙணம்,

ரூஹுல்லா நெறி. பி.காம்.

தொ.தொடர்பு : 9381004531, 7305644046